வெள்ளி, 26 ஜூலை, 2019

முதலமைச்சராக பதவியேற்கும் எடியூரப்பா

முதலமைச்சராக பதவியேற்கும் எடியூரப்பா மின்னம்பலம் : கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் 14 மாதங்களுக்கு பின் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார். மேலும், கர்நாடகாவில் ஆட்சிக்கு உரிமை கோருவது குறித்தும், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசிப்பதற்காக கர்நாடக பாஜக தலைவர்கள் நேற்று டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
மேலும், நேற்று ஆர்.சங்கர், ரமேஷ் ஜர்கிஹோலி, மகேஷ் குமதல்லி ஆகிய எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், எடியூரப்பா ஆட்சிக்கு உரிமை கோருவதற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இன்று (ஜூலை 26) காலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரினார்.

ஆளுநரிடம் எடியூரப்பா வழங்கிய கடிதத்தில், “குமாரசாமி தலைமையிலான தற்போதைய அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததாலும், குமாரசாமி ராஜினாமா செய்துள்ளதாலும், அடுத்த அரசு பதவியேற்கும் வரை பொறுப்பு முதலமைச்சராக தொடரும்படி அவருக்கு நீங்கள் அறிவுறுத்தியிருக்கிறீர்கள். நான் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறேன்.
தற்போது பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. மேலும் சட்டமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாகவும் இருக்கிறது. ஆகையால், இன்றே ஆட்சி அமைக்கவும், மாலை 6.00-6.15 மணியளவில் முதலமைச்சராக பொறுப்பேற்கவும் எனக்கு அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுக்கிறேன். பதவியேற்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பாஜக சட்டமன்றக் குழுத் தலைவரும், பாஜக கட்சியின் பிரதிநிதிகளும் ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து பேசினர். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி ராஜ் பவனில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு எடியூரப்பாவிற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர்.
இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் சித்தராமைய்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரை பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமான முறைகளில் அரசமைக்க கர்நாடக சட்டமன்றத்தை பாஜக ஒரு ஆய்வுக் கூடத்தை போல் பயன்படுத்தி வருகிறது. பெரும்பான்மையே இல்லாத ஒரு கட்சி ஆட்சியமைப்பதற்கு அரசியல் சாசனத்தில் எங்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது? இது வெட்கக்கேடானது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக