வியாழன், 25 ஜூலை, 2019

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்dailythanthi.com : கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம் காட்டி வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்தநிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன. இந்தநிலையில் புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கினர்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என்றும், சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கவர்னரை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்தனர்.

எடியூரப்பா இன்று(வியாழக்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் பா.ஜனதா சட்டசபை கட்சி கூட்டம் எதுவும் நேற்று நடைபெறவில்லை.

கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு காரணமான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. அவை சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளது. அதனால் அந்த 15 பேரும் இன்னும் எம்.எல்.ஏ.க்களாகவே உள்ளனர்.

இந்த நிலையில் சபையின் பலம் 225 (நியமன உறுப்பினர் உள்பட) ஆக உள்ளது. அதனால் சில சிக்கல் ஏற்படும் நிலை இருப்பதாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை ஆட்சி அமைக்க அவசரப்பட வேண்டாம் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே பெங்களூருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்று சென்ற எடியூரப்பா மூத்த தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா “டெல்லியில் இருந்து உத்தரவுக்காக காத்திருக்கிறேன். உத்தரவு கிடைத்ததும் பா.ஜனதா சட்டசபை கட்சி கூட்டத்தை கூட்டுவேன். அதன் பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.

பா.ஜனதா மேலிட தலைவர்களின் இந்த முடிவால், எடியூரப்பா உள்பட அக்கட்சியின் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் எடியூரப்பா பதவி ஏற்கும்போதே தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமாரை பெங்களூரு விதான சவுதாவில் பா.ஜனதாவை சேர்ந்த மாதுசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு குழுவினர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து விரைவாக முடிவு எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

அதுபோல் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள், சபாநாயகரை நேரில் சந்தித்து, கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்களை சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கொறடா உத்தரவை மீறியதற்கான ஆவணங்களை சபாநாயகரிடம் அவர்கள் வழங்கினர்.

இதுகுறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் அளித்த பேட்டியில், “கொறடா உத்தரவை மீறியவர்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடிதம் வழங்கியுள்ளன. ஸ்ரீமந்த்பட்டீல் எம்.எல்.ஏ.வுக்கு இன்று நோட்டீசு அனுப்பியுள்ளேன். அவர் ஆஜராவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. விசாரணை முடிவடைந்த பிறகு தகுதி நீக்கம் குறித்து முடிவு எடுப்பேன். நான் சட்டப்படி செயல்படுவேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக