வியாழன், 25 ஜூலை, 2019

மே.வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசை கடுமையாக ... வீடியோ


மின்னம்பலம : உபா சட்டத் திருத்த மசோதா மீது பேசிய திருணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, மத்திய அரசை கடுமையாக சாடினார்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா- 2019 ஐ (உபா) உள் துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். மசோதா மீதான விவாதத்தின்போது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இறுதியாக வாக்கெடுப்பில் ஆதரவாக 287 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் பதிவானதால் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
விவாதத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய மஹுவா மொய்த்ராவின் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “சில சட்டங்களின் உதவியுடன் தான் நினைப்பதை சாதிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசப் பாதுகாப்பு, கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சிறுபான்மையினர், செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அரசுடன் உடன்படாமல் கேள்வி எழுப்பும்போதெல்லாம் அவர்கள் மீது ஆண்டி-இந்தியன் முத்திரை குத்திவிடுகிறார்கள்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

அரசுடன் உடன்படாமல் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு "வசைபாடும் குழுவை' ஏவி விடுகிறது என்றும் விமர்சித்த மொய்த்ரா, “ஒருவர் அரசுக்கு எதிரானவராக இருந்தாலும் தேசத்திற்கு ஆதரவாக இருக்க முடியுமே” என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “யாரையும் யாரும் தேசவிரோதிகள் என்று அழைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மொய்த்ரா பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட பாஜக எம்.பி எஸ்.எஸ்.அலுவாலியா, அரசுக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை உறுப்பினர் அவையில் முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். அப்போது அவையை வழிநடத்திய மீனாட்சி லெகியும், நோட்டீஸ் அளிக்காமல் யார் மீதும் மற்றொரு உறுப்பினர் மீது அவதூறு கூறக்கூடாது என்று தெரிவித்தார்.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய மொய்த்ரா, தன்னால் அதனை நிறுவ முடியும் என்று தெரிவித்தார்., “நான் என்னுடைய கருத்துக்களை திரும்பப் பெறப்போவதில்லை. என்னுடைய பேச்சு தவறான பிரச்சாரத்திற்கு எதிரானது, தனிநபருக்கு எதிரானது அல்ல” என்று அவர் கூறினார்.
இந்த மசோதா எந்தவித நடைமுறையுமின்றி தனிநபர்களை தீவிரவாதி என்று குற்றம்சாட்ட இந்த மசோதா வழிவகுக்கிறது எனவும், மாநில உரிமைகளை பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகவும், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்களுக்கு எதிரானது என்றும் மொய்த்ரா குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக