திங்கள், 15 ஜூலை, 2019

சிறையில் சரவண பவன் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்

Neelakandan S/tamil.oneindia.com : சென்னை: ஜீவஜோதி என்பவரது கணவர் சாந்தகுமரை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
ஆயுள் தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால், கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 கொலை வழக்கில் தண்டனை பெற ராஜகோபாலுடன் சரணடைந்த ஜனார்த்தனன் என்பவருக்கும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
ஜாதகம், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் சில சறுக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்டார். அப்போது சிறிய வயது பெண்ணை 3-ஆவதாக திருமணம் செய்தால் உங்கள் வாழ்வில் ஏற்றம் வரும் என ஜோதிடர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜகோபால் தனது ஓட்டலில் பணிபுரிந்த மேலாளரின் மகளான ஜீவஜோதி மீது கண் வைத்தார். ஆனால் ஜீவஜோதி ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். எனினும் சற்றும் யோசிக்காத ராஜகோபால் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கடத்தி சென்று கொடைக்கானலில் கொலை செய்தது தெரிய வந்தது. 
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் கூலிப்படையை சேர்ந்த டேனியல், தமிழ்செல்வன், சேது ஜனார்தனன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர் இந்த கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையும் எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார் ஆனால் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது கடந்த 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது 
சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு ராஜகோபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் உடனடியாக சரணடைய உத்தரவிட்டது 
இதனையடுத்து கடந்த 9-ம் தேதி மாலை வடபழனி தனியார் மருத்துவமனையிலிருந்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு முன்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு முழுஉடல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ராஜகோபாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு மருத்துவர்கள் கூறினர். 
இதனையடுத்து 5 நாட்களுக்கு மேலாக அவருக்கு ஸ்டான்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக ஸ்டான்லி மருத்துவர்கள் தற்போது கூறியுள்ளனர்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/saravana-bhavan-owner-rajagopal-health-is-bad-said-by-doctors-356933.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக