செவ்வாய், 16 ஜூலை, 2019

சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு.. போரூரில் .. ஓடிஸா மாநில இளைஞர் கைது


சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!பிந்திய செய்தி: ஓடிஸா மாநில இளைஞர் கைது ! மின்னம்பலம் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மாயமான குழந்தை திருப்போரூர் பகுதியிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் நபராங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ராம் சிங், நீலாவதி. புரசைவாக்கத்தில் கட்டப்படும் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் நேற்று (ஜூலை 16) இரவு சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். ரயிலுக்குக் காத்திருக்கும் போது, தங்களது மூன்று வயதுக் குழந்தை சோம்நாத்துடன் இருவரும் தூங்கியிருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்ததில் குழந்தை மாயமானது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது கையில் பையுடன் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் தூக்கி சென்றது தெரியவந்துள்ளது. சரியாக 12.45 மணியளவில் குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் இந்த சிசிடிவி பதிவுகளை ரயில்வே போலீசார் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி அந்த நபர் தாம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தையை தூக்கி சென்றது பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத அந்த நபர் தொடர்பான புகைப்படமும், குழந்தையின் புகைப்படமும் அனைத்து காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஒடிஷா போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், இன்று (ஜூலை 16) திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஒருவர் குழந்தையை அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். பின்னர் அக்குழந்தை அங்குள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து பரங்கிமலையில் உள்ள காப்பகத்துக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது
பின்னர் சென்ட்ரல் ரயில்வே போலீசார் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், காப்பகத்தில் இருந்து தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் ரயில் நிலையத்தில் குழந்தையைத் தொலைத்த பெற்றோருடன் காப்பகத்துக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருப்பது தங்கள் குழந்தைதான் என அவர்கள் உறுதிப்படுத்தியதையடுத்து. விசாரணைக்குப் பின் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வராததை அடுத்து தாம்பரம் , திருப்போரூர் பகுதியில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக