செவ்வாய், 9 ஜூலை, 2019

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோஷம்


  தினத்தந்தி : கர்நாடகத்தில் கடந்த 13 மாதங்களாக காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி என்பதால், இரு கட்சிகளையும் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவியை எதிர்பார்ப்பதால் நெருக்கடியான நிலையே தொடர்கிறது.
அதே சமயம் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் கூட்டணி அரசை கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்ற அவ்வப்போது வியூகங்களை வகுத்து வருகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் ஆளும் காங்கிரசுக்கு சபாநாயகரையும் சேர்த்து 79 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 பேர் என 116 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரிப்பதால் அரசுக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்)  கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர்.
இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.


இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை காப்பாற்றும் வகையில், பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மந்திரிகள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கர்நாடக கூட்டணி அரசுக்கான நெருக்கடி விவகாரத்தை எழுப்பி பேசிக் கொண்டிருந்தார். தங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அவர் தொடர்ந்து பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இவ்விவகாரம் குறித்து கடந்த திங்கட்கிழமை விவாதிக்கப்பட்டதாகவும், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபாநாயகரின் பதிலால் திருப்தி அடையாத ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மீண்டும் அப்பிரச்சினையை எழுப்ப முயன்றார். மேலும், ஒரு துண்டு காகிதத்தில் சில கோ‌ஷங்களை எழுதி, அதை தனக்கு பின்னால் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்களிடம் வழங்கினார். அந்த கோ‌ஷங்களை அவர்கள் எழுப்பத் தொடங்கினர்.

சர்வாதிகாரம் ஒழிக, குதிரைபேர அரசியலை நிறுத்துங்கள் என்ற கோ‌ஷங்களை எழுப்பினர். அவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் கோ‌ஷம் போட்டார். ஆனால், அவரது குரல், மற்றவர்களது குரலைப்போல் பெரிதாக கேட்கவில்லை. கோ‌ஷத்தின் கடைசி வார்த்தையை மட்டுமே அவர் உச்சரித்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள், சபையின் மையப்பகுதிக்கு சென்றும் கோ‌ஷமிட்டனர். சபைக்கு சுவரொட்டியை கொண்டுவரக்கூடாது என்று சபாநாயகர் எச்சரித்தார். அதற்கு அது எங்கள் உரிமை என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் பதில் அளித்தனர்.
அது உங்கள் உரிமை அல்ல என்று சபாநாயகர் கூறினார். நாடு உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். தற்போதைய மக்களவையில் ராகுல் காந்தி கோ‌ஷம் எழுப்பியது இதுவே முதல்முறை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக