ஞாயிறு, 28 ஜூலை, 2019

முன்னாள் அதிமுக எம்பி மைத்திரேயன் திமுகவில் தஞ்சம் ?

ஆதரவாளர்களை திரட்டுகிறார் தி.மு.க.,வில் மைத்ரேயன் ஐக்கியம்?
தினமலர் : அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் சேர உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்யசபா எம்.பி.,க்களாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், டி.ராஜா மற்றும் தி.மு.க.,வின் கனிமொழி ஆகிய, ஆறு பேரின் பதவிக்காலம், நேற்று முன்தினம் முடிந்தது.ராஜ்யசபாவில், மைத்ரேயன் உருக்கமாக பேசுகையில், 'பார்லிமென்ட்டை பொறுத்தவரை, இது, எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால், மாநில அரசியலில், இனிமேல் தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப் போகிறது' என்றார்.
இந்த சூசக பேச்சு வாயிலாக, அ.தி.மு.க.,வில், அவர் அதிருப்தியாக இருப்பது தெரிய வருகிறது. செந்தில்பாலாஜி, தங்கதமிழ்செல்வனை தொடர்ந்து, மைத்ரேயனும், தன் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்காக, தி.மு.க.,வில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மைத்ரேயன் ஆதரவாளர்கள் கூறியதாவது:

ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி, மைத்ரேயன். நாட்டின், தலைசிறந்த புற்றுநோய் நிபுணர் என, ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றவர். ராஜ்யசபாவில், 14 ஆண்டுகள் சேவைக்குப் பின், நேற்று முன்தினம் நடந்த பிரிவு உபசாரப் பேச்சில், ஜெயலலிதா, அருண்ஜெட்லி, பிரதமர் மோடி ஆகியோருக்கு, பிரத்யேகமாக நன்றி தெரிவித்தார்.ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக உடைந்ததும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியை ஆதரித்தார்.

இரட்டை இலை

சின்னத்தை மீட்கவும், இரண்டு அணிகளைச் சேர்க்கவும், பிரதமர் மோடியின் துாதராக செயல்பட்டார். ஆனால், அவருக்கு, அ.தி.மு.க.,வில் உரிய அங்கீகாரம் தராமல், ஓரங்கட்டி வைத்துள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதியில் போட்டியிட, 'சீட்' தரவில்லை. சட்டசபை இடைத்தேர்தலில், திருப்போரூர் தொகுதியை கேட்டும், அவருக்கு ஒதுக்கவில்லை. ராஜ்யசபா எம்.பி., பதவியும் கிடைக்கவில்லை. இதனால், அவர் அதிருப்தியுடன் காணப்படுகிறார்.

சமீபத்தில், சென்னை வடக்கு மாவட்ட, அ.தி.மு.க.,வில் ஏராளமான நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால், பதவி பறிக்கப்பட்ட அதிருப்தியாளர்கள் சிலர், மைத்ரேயனின் ஆதரவாளர்களாக மாறி உள்ளனர்.அ.தி.மு.க.,வில், மீண்டும் மைத்ரேயனுக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை என்றால், அதிருப்தியாளர்களுடன், தி.மு.க.,வில் இணையலாம் என, ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், அ.தி.மு.க., பொறுப்பாளராக மைத்ரேயன், நீண்ட காலமாக பணியாற்றி உள்ளார்.எனவே, இந்த மூன்று மாவட்டங்களில், அவருக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும், மைத்ரேயன் பின் அணிவகுக்க தயாராகி உள்ளனர்.அடுத்த சட்டசபை தேர்தலில், சென்னை, மயிலாப்பூரில் போட்டியிடவும், அமைச்சரவையில் இடம்பெறவும், மைத்ரேயனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் தரப்பட்டால், மைத்ரேயன், தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பாலமாக இருப்பார்!

டில்லி அரசியலின் சூட்சுமம் அறிந்தவர் என்பதால், மைத்ரேயனை, டில்லி விவகாரங்களுக்கு, ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். பா.ஜ., தலைமையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என தெரிந்தும், அவரை ஊக்குவித்தார். தற்போதும், மத்தியில், பா.ஜ., ஆட்சி வலுவாக உள்ளது. பல மாநிலங்களிலும், பா.ஜ., வலுப்பெற்று, காங்கிரசை காணாமல் செய்து வருகிறது. இந்த சூழலில், மைத்ரேயன் போன்றவர்கள், தி.மு.க.,வுக்கு அவசியம் என்றும், பா.ஜ.,வுடனான விவகாரங்களுக்கு உதவிகரமாக இருப்பார் என்றும், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் கருதுகின்றனர்.- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக