வியாழன், 4 ஜூலை, 2019

நாடாளுமன்றத்தில் ஆ.ராசாவின் துரோணர் - ஏகலைவன் முழு பேச்சு ....


DMK Parliament : பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
 சட்டத்தை போதிய காலாவகாசத்தை யாருக்கும் தராமல் இரண்டே நாட்களில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.
 பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதி மக்கள் அனைவருக்கும் கல்விக்கான உதவித்தொகை அளிப்பதன் மூலமாகவோ, கல்விக்கடன்கள் வழங்குவதன் மூலமாகவோ உதவ விரும்பினால் தாராளமாக உதவலாம். ஏன் அவர்கள் கல்விக்கட்டணம் முழுவதையும் கூட ரத்து செய்யலாம். அதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்.
 ஆனால் அவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சமூகரீதியிலும் கல்வியிலும் நலிவுற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்களை அபகரித்து நீங்கள் அவர்களை அமரவைக்க முயல்கிறீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்.

 மேற்கூறிய காரணிகளால் நாங்கள் இந்த சட்டத்தை முழுமையாக நிராகரிக்கிறோம். மேலும் இந்த சட்டத்தை செலக்ட் கமிட்டிக்கு அனுப்பிவைக்கும் படி கோருகிறேன்.
- ஆ.ராசா
1/7/2019
அவர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க முழு உரை:
பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதி மக்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும், டெல்லி உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் அந்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் செலக்ட் கமிட்டிக்கு அரசு அனுப்ப வேண்டும்.
இந்த மசோதா கொண்டுவரப்படும் போது நாங்கள் இந்த அவையில் இல்லாததால் அந்த சட்டதிருத்தம் மீதான திமுகவின் எதிர்ப்பினை இந்த அவையில் இன்று நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
அரசு கொண்டு வந்த புதிய சட்டம், "பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதி பிரிவை சேர்ந்த மக்கள், தங்களின் வலுவற்ற பொருளாதார நிலைமை காரணமாக உயர் கல்வி நிறுவனங்களுக்கும் நுழையவும் அரசு வேலைவாய்ப்பில் இடம்பெறவும் முடியாமல் இருப்பதால், அவர்களின் நலனுக்காக அவர்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்குவதாக கூறுகிறது."
இடஒதுக்கீடு என்பது நம் யாருக்கும் புதிதல்ல. இந்த நாட்டில் 2500 வருடத்திற்கும் மேலாக வர்ணாசிரமம் என்ற பெயரில் பிராமணர்கள், வைசியர்கள், சத்ரியர்கள், சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று மனிதகுல மாண்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இடஒதுக்கீடு ஒன்று தொடர்ந்து இருந்தே வருகிறது.
மதசார்பற்ற, சோசியலிச, இறையாண்மை மிக்க ஜனநாயக பூர்வமான இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவான பின்னர் தான் சக மனிதனை மதிக்க வேண்டும், அவனுக்கு சம வாய்ப்புகளை தரவேண்டும் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு உருவானது.
1951ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதல் முறையாக வகுப்புவாரி சட்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரே மறைந்த எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர், அவருடைய தலைவர் அறிஞர் அண்ணா, தமிழ்நாட்டின் தந்தை பெரியார் ஆகிய மூவரும் இடஒதுக்கீட்டின் முன்னோடிகளாக வாழ்ந்துள்ளனர் என்பதில் ஒரு திமுக உறுப்பினராக நான் பெருமையாக உணர்கிறேன்.
1951க்கு முன்னரே எங்கள் திராவிட அரசுகள் 1921லும், 1927லும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்த்து இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீடு அளித்துள்ளன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சமுதாய ரீதியிலும், கல்வியிலும் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு அளிக்க சொல்லியிருக்கிறதே தவிர பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க சொல்லவில்லை.
உங்கள் அரசு பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதி மக்கள் அனைவருக்கும் கல்விக்கான உதவித்தொகை அளிப்பதன் மூலமாகவோ, கல்விக்கடன்கள் வழங்குவதன் மூலமாகவோ உதவ விரும்பினால் தாராளமாக உதவலாம். ஏன் அவர்கள் கல்விக்கட்டணம் முழுவதையும் கூட ரத்து செய்யலாம். அதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்.
ஆனால் அவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சமூகரீதியிலும் கல்வியிலும் நலிவுற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்களை அபகரித்து நீங்கள் அவர்களை அமரவைக்க முயல்கிறீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்.
இடஒதுக்கீடு என்பது அரசு தரும் சலுகையோ அவரவருக்கான தேர்வோ அல்ல. மாறாக அது ஆங்கிலேயரின் காலத்திலிருந்தே பிற்படுத்தப்பட்ட. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமை.
இதற்கான வாதங்கள் 1880லேயே தொடங்கப்பட்டு சமூக ரீதியில் பின்தங்கியவர்களையும், கல்வியறிவு அற்றவர்களையும் (BC) பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்து அவர்களை தொடக்க கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டது.
1895 ஆம் ஆண்டில் ஜனவரி 5 ஆம் தேதியிட்ட சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வெளியிடப்பட்ட ஆங்கிலேயர்களின் அரசாணை எண்:40 சென்னை ராஜதானியில் (BC) பிற்படுத்தப்பட்ட மக்கள் 8 பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1897ல் மாண்டேகு கிளெம்ஸ்போர்டு அறிக்கையின் அடிப்படையில் (BC) பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான பரிந்துரைகள் இடம்பெற்றன.
இப்படி ஆங்கிலேயர் காலத்து பாராளுமன்றம், அரசு பரிந்துரைகள், ஆணைகள் என எல்லாமே சாதிரீதியான அளவுகோல் கொண்டு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டனவே தவிர பொருளாதாரத்தை ஒரு அளவுகோலாக ஏற்கவில்லை.
1898ல் மைசூர் அரசு அரசாங்க பணியில் பிற்படுத்தப்பட்ட மக்களை நியமிக்க ஊக்குவிக்கவும், 1920ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் செலக்ட் கமிட்டி சாதிரீதியாக பின்தங்கியோருக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய செய்யவும் முயன்றன.
1921ல் லண்டன் நிறுவன விருப்பத்தேர்வுகள் ஆட்சேர்ப்பு வாரியம் பிராமணர் அல்லாதவர்கள் அரசு பணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. 1925ல் வெளியான அமைச்சகத்தின் சீர்திருத்த கமிஷன் அறிக்கை ஒடுக்கப்பட்டவர்களையும், தீண்டத்தகாதவர்களையும், பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்டவர்கள் என்றே வகைப்படுத்தியிருக்கிறது.
1928ல் வெளியான அரசின் அறிவிக்கை கல்வியில் பின்தங்கியவர்கள் என ஒடுக்கப்பட்டவர்களையும், தீண்டத்தகாதவர்களையும், மலைவாழ் மக்களையும், பழங்குடியினரையும், குற்ற பரம்பரையினரையும் தான் குறிப்பிட்டுள்ளது. 1929ல் வெளியான இந்திய மத்திய குழுவின் அறிக்கை பழங்குடியினரையும், குற்ற பரம்பரையினரையும், வசிப்பிடமற்ற நாடோடிகளையும், 1930ல் வெளியான பம்பாய் மாநில அறிவிக்கை பழங்குடியினரையும் குறிப்பிட்டுள்ளது.
1930ல் வெளியான சைமன் கமிஷன் அறிக்கை பிராமணரல்லாதவர்களையே பிற்படுத்தப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் சொல்லியுள்ளது. 1932ல் வெளியான பிரான்சிஸ் குழுவின் அறிக்கையும் சூத்திரர்களையும், தீண்டத்தகாதவர்களையுமே பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்துள்ளது.
1932ல் வெளியான ஐக்கிய மாகாணத்தின் குறிப்பாணை சமுதாய ரீதியிலும், கல்வியிலும் நலிவுற்ற பிரிவினரையே பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்துள்ளது.1936ல் அன்றைய சென்னை ராஜதானியும் பிராமணரல்லாதவர்களையே பிற்படுத்தப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு நவம்பர் 21ல் வெளியான பொதுத்துறையின் அரசாணை எண் 3437 பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்று 145 சாதியினருக்கானது மட்டுமே.
அரசியல் சட்டமைப்பு விவாத குழுவில் இடம்பெற்ற திரு.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் இருக்க கூடாது என்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணல் அம்பேத்கர் சாதிரீதியான இடஒதுக்கீடு இல்லையென்றால் அரசியல் சட்ட அமைப்பு குழு இதுவரை அரசு பணியில் இடம் பெறாதோருக்கான மாற்று வழியிணை சொல்லவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக ஆங்கிலேயர் காலத்திலிருந்து கடந்த பாராளுமன்றத்தின் காலம் வரை, இடஒதுக்கீடு என்பதே பொருளாதாரத்தின் அடிப்படையில் இல்லை என்றாகிறது. ஆனால் இந்த அரசு பொருளாதார அளவுகோலை வேண்டும் என்றே ஒரு திடீர் சட்டம் மூலம் நுழைத்துள்ளது. அந்த சட்டத்தை எதிர்க்கும் மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் அம்மசோதவை பாராளுமன்றத்தின் செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று மீண்டும் நான் வலியுறுத்திகிறேன்.
இதுபோன்றதொரு சட்டத்தை 1991ல் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் கொண்டு வந்து அது உச்சநீதிமன்றத்தில் சட்ட விரோதமானது என்றும் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டதை இந்த அரசு நினைவில் கொள்ளவேண்டும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த மேஜர் ஜெனரல் சின்கா தலைமையிலான குழு பொருளாதாரத்தின் நலிவுற்ற உயர்சாதி மக்களுக்கு பொருளாதார சலுகைகளை பரிந்துரைத்துவிட்டு, இடஒதுக்கீடு என்பது சமுதாய ரீதியிலும், கல்வியிலும் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமே என்று அறுதியிட்டு கூறியுள்ளது.
இந்த அரசு அப்பரிந்துரைகளை புறந்தள்ளிவிட்டு அவசர திருத்தத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதி மக்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டத்தை போதிய காலாவகாசத்தை யாருக்கும் தராமல் இரண்டே நாட்களில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.
மேற்கூறிய காரணிகளால் நாங்கள் இந்த சட்டத்தை முழுமையாக நிராகரிக்கிறோம். மேலும் இந்த சட்டத்தை செலக்ட் கமிட்டிக்கு அனுப்பிவைக்கும் படி மீண்டும் கோருகிறோம்.
நீங்கள் துரோணர்களாகவே இருக்க முடியாது என்பதையும் நாங்கள் ஏகலைவன்களாகவே இருக்க மாட்டோம் என்பதையும் நிச்சயம் நிரூபிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக