புதன், 3 ஜூலை, 2019

10% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் திணிக்க போலி வாக்குறுதிகள் ஆசை வார்த்தைகள் ..

மத்திய அரசு தன்னுடைய உயர்ஜாதிகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டின் மீது திணிப்பதற்காக செய்யும் மாய்மாலத்துக்கு மயங்கி இப்போது இவர்கள் அனுமதித்தால் எதிர்காலம் இன்றைய திராவிடர் இயக்க அமைப்புகள், கட்சிகள் மற்றும் அதன் தலைமைகளை ஒருநாளும் மன்னிக்காது.
இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் எடுத்திருக்கும் நிலைப்பாடே மிகச்சரியானது. அதை மற்ற அனைவரும் ஆதரிக்கவேண்டும். மத்திய அரசின் தேன் தடவிய விஷத்தை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும்.
உயர்ஜாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டுக்கு 1000 மருத்துவ இடங்களை கூடுதலாக தருவதாக மத்திய அரசு சொல்வது சுத்த மாய்மாலம்.
தமிழ்நாட்டின் மருத்துவக்கல்வி மீது மத்திய அரசுக்கு உண்மையிலேயே அவ்வளவு கருணை இருந்தால் அக்கறை இருந்தால் NEETஇல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய சட்டத்திற்கு ஏன் மத்திய அரசோ இந்திய மருத்துவ கவுன்சிலோ மதிப்பளிக்கவில்லை? ஏற்கவில்லை?
ஆண்டுதோறும் அனிதாக்களை கொல்லும் NEET தேர்வை தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து திணித்துக்கொண்டே ஆயிரம் மருத்துவ மாணவர் இடங்களை கூடுதலாக தருவோம் என்று ஆசை காட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? கொலைகாரன் தன் இழப்பீட்டை அதிகரிப்பதாக சொல்வதற்கு ஒப்பானதல்லவா மத்திய அரசின் இந்த அணுகுமுறை?
உயர்ஜாதி மாணவர்களின் மருத்துவ கனவுக்காகவும் அதில் கூடுதலாக தங்களுக்கு வரக்கூடிய கோடிக்கணக்கான வரும்படிக்காகவும் மட்டுமே இந்த அதிமுக அரசும் அமைச்சரும் ஆளாய் பறக்கிறார்களே தவிர இதில் மாநில நலனோ மருத்துவ கல்வி மேம்பாடோ தமிழ்நாட்டு பள்ளி மாணவர் நலனோ துளியும் இல்லை.

இதில் ஸ்டாலின் சொல்வதே சரி. “மத்திய அரசு அளிக்கும் 25% சலுகை என்பது மெல்லக் கொல்லும் விஷம் போன்றது. எனவே இந்த மயக்கத்திலும், கவர்ச்சியிலும் தமிழகம் ஏமாந்துவிடக் கூடாது” என்கிற அவரது நிலைப்பாடே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
இந்திய அரசுக்கு தமிழ்நாட்டின் மருத்துவக்கல்வி மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் முதலில் NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்களிக்கட்டும்.
மத்திய அரசு அப்படி செய்தால் அதற்குப்பின் வேண்டுமானால் உயர்ஜாதிக்காரர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம்.
மத்திய அரசிடமிருந்து NEET இல் இருந்து விலக்கு கோரிப்பெறுவதே தமிழ்நாட்டின் முதன்மைத்தேவை. அது கிடைக்காதவரை மத்திய அரசின் எந்த கோரிக்கையையும் தமிழகம் பரிசீலிக்க வேண்டியதே இல்லை.
இதில் மந்திரி துடிப்பது தன் வருமானத்துக்காக. தமிழ்நாட்டு மக்களோ மற்றவர்களோ இதில் அவரோடு சேர்ந்து துடிக்கத்தேவையில்லை.
ஆண்டுதோறும் அநியாயமாக நிறுவன படுகொலை செய்யப்படும் அனிதாக்களுக்கு இன்றுவரை நியாயம் செய்ய மறுக்கும் அதிமுக அடிமை அரசுக்கு மருத்துவ கல்வியின் மேம்பாடு குறித்து பேச எந்த அருகதையும் இல்லை...  LRJ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக