திங்கள், 22 ஜூலை, 2019

அறிவாலயத்தில் .. நெற்றியில் திருநீறு .. கும்குமம் ..சந்தனம் .. கலைஞருக்கு பின் ...

Arul Prakasam : திமுகழக அன்பர்கள் இப்போது எப்போதும் இல்லாத அளவு
நெற்றியில் மதக் குறியீடு அணிவதை பார்க்கமுடிகிறது. கழகக் கூட்டங்களில் செயல்வீரர் கூட்டங்களில் அண்ணா அறிவாலயத்தில் எல்லாம்கூட நெற்றியில் திருநீறு / குங்குமம்/ சந்தனம் பூசிக்கொண்டு வருபவர்களைக் காணமுடிகிறது.
திமுகழகத்தில் கட்சியின் சட்டதிட்டங்கள் பிரகாரம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் உறுப்பினராக தடை இல்லைதான். ஆனாலும் இத்தகைய செயல்கள் ஏற்புடையதா என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவே இந்த பதிவு.
சமதர்ம சமுதாயம் காண மக்களிடையில் விழிப்புணர்ச்சி உருவாக்க பெரியார் தலைமையிலான திராவிடர் இயக்கம் கடவுள் மறுப்புக் கொள்கையையும் முன்னிறுத்தி பரப்புரை செய்தது.
சுதந்திர இந்தியாவில் திராவிட இயக்கத்தின் அரசியல் பிரிவான திமுகழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் தம்முடையை அழகுதமிழ் நடையில் பல கடவுள் மறுப்புக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள்.

- பரந்தாமனுக்கு பகிரங்க கடிதம்
- பரமசிவனுக்கு பகிரங்க கடிதம்
- தேவலீலைகள்
- புராண மதங்கள்
என்பவை அண்ணாவின் அருமையான இந்து மத கடவுள் எதிர்ப்பு கட்டுரைகள்.
“மாஜி கடவுள்கள்’ என்னும் இன்னொறு கட்டுரைத் தொடர் மேற்கத்திய புராண கடவுள்களைப் பற்றியது.
மேடைகளிலும் அண்ணாவும் அவருடன் அணி வகுத்து அவருடைய தம்பியரும் நானிலம் நலம்பெற நாத்திகம் பேசினர். நாத்தழும்பு ஏறியவர் என்று அவர்களை வைதீகர் வைதனர்.
அண்ணா அவர்களுடைய பரப்புரை மதங்களில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தது. பகுத்தறிவுக் கருத்துகளை தன் பேச்சிலும் எழுத்திலும் காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வழிமுறைகளில் அவர் பரப்புரை செய்தார்.
நல்லதம்பி , சொர்கவாசல், ஓர் இரவு, இரங்கோன் ராதா போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்கக் கருத்துகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றார்.
அவர்வழியில் கலைஞரும் இன்னும் பல திராவிட எழுத்தாளர்களும் உருவானார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாரும் அண்ணாவும் பெரும்பான்மை சமுதாயமாக விளங்கும் இந்திய அரசுரிமை சட்டத்தின்படி இந்துக்களாக இருப்பவர்களை நீங்கள் இந்துக்கள் அல்ல தமிழர்கள் உங்களுக்கென்று தனி சமய கருத்துகள் இருந்தன.அவை ஆரிய புராண இதிகாச புளுகு கதைகளுடன் தொடர்பு இல்லாதவை என்பதை விளக்கினார்கள்.
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும் சமத்துவ சிந்தனையும் எண்ணங்களையும் கொண்டவராக இருந்த தமிழர் ஆரியக் கலப்பால் அவர்தம் ஆதிக்கத்தால் ஆரியமாயைக்கு உட்பட்டு அழிந்து அமிழ்ந்து போன வரலாற்றை நமக்கு உணர்த்தியது திராவிடர் இயக்கம்.
சமுதாயத்திலே திராவிடர் ஆரியர் திணித்த வருண பாகுபாட்டால் அதன் அடியில் விளைந்த சாதிகளால் பிளவுபட்டு சிதைந்து போயினர். சாதிமுறைக்கு நான்மறைகள் ஆதாரமாக இருக்கின்றன. அந்த நான்மறைகளை நம்தமிழர் ஏற்றனர்.
“நான்மறைஅறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி சிறக்க”
என்றும்
”தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”
என்றும்
”அரியானை அந்தணர்தம் சிந்தையானை”
என்றும் ஆரியரின் சமயக் கோட்பாடாம் பிராமணீயத்தை தமிழர் ஏற்றனர்.
செந்தன்மை பூண்டு ஒழுகும் செவ்வியரே அந்தணர் என்னும் அறவோர் என்பதே வள்ளுவம் வகுத்த தமிழர் நெறி. இது தெரியாமல் ஆரியப்பார்ப்பனரையும் அந்தணர் என்று வழங்கினர்.
பிராமணீயத்திலிருந்து தமிழர் சமயம் எது என்று பிரிக்க முடியாதபடிக்கு ஆரியம் தமிழரின் வாழ்வியலை மாற்றிவிட்டது. அன்றிருந்த ஆட்சியர் அதற்கு துணை போயினர். ஆரியம் எது தமிழ்நெறி எது என்று எளிதில் பாமரமக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆதலால் எல்லாவற்றையுமே ஆரியத்திற்கு நிகரானதாக கருதி எதிர்க்கவேண்டிய கட்டயாம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில்தான் பெரியார் கடவுள் மறுப்பு என்னும் ஆய்தத்தை கையில் எடுத்தார்.
ஆரிய ஆதிக்கத்தை முன்னிறுத்தும் பிராமணீயம், பிராமணர்களை முகத்தில் உருவாக்கிய கடவுள், அந்த கடவுளின் பாஷையான சமசுகிருதம், இவைகள் ஒருபுறமும் அதற்கு மறுபுறம் எளிய சூத்திர பஞசம தமிழனும் அவன் மொழியான தமிழும் பலநூறு ஆண்டுகளாக எதிரெதிராகப் போராடி வந்து இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் திருக்குறள் மற்றும் சித்தர் மரபிலான பாடல்கள் யாவும் இதனை மெய்பிக்கின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமந்திரத்தில் திருமூலர்.
இதன் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணீயத்திற்கும் சமசுகிருததிற்கும் சமசுகிருதத்தை மூலமாகக் கொண்ட இந்தி ஆதிக்கத்திற்கும் எதிராக உருவான திராவிட சிந்தனை பெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
பெரியார் அண்ணா அவர்களுடைய பேச்சும் எழுத்தும் தமிழரிடை பிராமணீயத்திற்கு எதிராக அடி ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த எதிர்ப்பை உசுப்பிவிட்டது.
இன்று தமிழ்நாடு சமூகநீதியிலும் பொருளாதாரத்திலும் முன்னிலும் பல்மடங்கு முன்னேறி இருக்கிறோம். அதற்குக் காரணம் திராவிடச் சிந்தனையே. வெள்ளையர் வெளியேறிய பிறகு பெருந்தலைவர் காமராசர் ஆட்சிகாலம் தொடங்கி இன்றுவரை நாம் அடைந்த சாதனைகள் யாவும் திராவிட சிந்தனையின் பயன்கள் ஆகும். அண்ணா கலைஞர் தலைமையிலான திமுகழக ஆட்சி சரித்திர சாதனைகள் பலவற்றைப் படைத்து இருக்கிறது.
சாதாரண கூலிகளாகவும் தொழிலாளிகளாகவும் வேறு மாநிலங்களுக்கு சென்று அவதிபட்ட தமிழன் இன்று அவ்விதம் போவது இல்லை. வேற்று மாநிலத்தவர் இன்று தமிழகம் வந்து கூலித் தொழிலாளிகளாக வேலை பார்க்கும் நிலை வந்து இருக்கிறது.
திராவிட இயக்கத்திற்கு நேர் எதிர் கொள்கை கொண்ட இந்துத்துவ ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் உடைய கட்சி இன்று மைய அரசில் பெரும்பான்மை வலுவுடன் ஆட்சிக்கு வந்து இருக்கிறது. இந்த நிலையில் நாம் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டி இருக்கிறது.
ஒருபுறம் உடன் இருந்தே கொல்லும் நோயாக தமிழரின் ஒற்றுமையின்மைக்கு உலை வைக்கும் சில தன்நல சக்திகள் இருகின்றன. அவைகள் திராவிடச் சிந்தனையை கருத்தை மறுத்து பேசுவதன் மூலம் பரம்பரை பகையான ஆரியத்திற்கு துணை போகின்றன. இந்த சூழலில் தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.
நாம் தன்மானமுள்ள தமிழனாக வாழவேண்டுமானால் இனமானம் கொண்ட திராவிடனாக நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது. திராவிடத்தின் உட்கூறு சமநீதி சமத்துவம். அதற்கு அடிப்படை மனிதநேயம். அது எந்த ஒரு மதம் அல்லது சாதியும் ஆதிக்கம் செல்லுத்துவதை அனுமதிக்காது.
தீவிர கடவுள் மறுப்பாளரானாலும் தந்தை பெரியார் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு தக்க மரியாதை தருவதில் தவறியவர் அல்ல. அவர் வீட்டுக்குப் போனால் நெற்றியில் இட்டுக் கொள்ள அவர்களுக்கு அவரே திருநீறு கொடுப்பார். அதுதான் மனித நேயம் என்பது.
ஆதிக்கம் அற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபடும் அரசியல் இயக்கம் திமுகழகம்.
திமுகழகத்தில் இருக்கும் சாதாரண தொண்டன்கூட குறிப்பிட்ட மதத்தை அல்லது சாதியை அடையாளப்படுத்தும் எந்த காரியமும் செய்ய துணியாதவனாக இருக்க வேண்டும். அப்படி பலபேர் இன்றும் இருக்கிறார்கள். பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு இந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட கொள்கை. பகுத்தறிவாளர்களின் கருத்துகளை ஏற்பதும் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதில் யாருடைய வற்புறுத்தலுக்கும் இடம் தரக்கூடாது. அதுதான் கட்சியின் சட்டதிட்டங்களின் உட்கருத்து.
ஆனாலும் பொதுநலத்தொண்டு புரிய திமுகழகம் போன்ற அரசியல் கட்சிகளில் பொறுப்புக்கு வந்தவர்கள் மத அடையாள குறியீடுகளுடன் பொதுவெளியில் வராமல் இருப்பது நல்லது. அத்தகைய குறியீடுகள் அவர்களுக்கு அவர்கள் சார்ந்த மதங்களின் மீதான பிடிப்பை காட்டுகிறது. அது சரியல்ல.
மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்யும் மற்ற கட்சியினரை கொள்கை அளவில் எதிர்க்கும் தார்மீக உரிமையை ஒருசிலரின் இத்தகைய செயல்களால் திமுகழகம் இழக்க கூடாது.
ஆகவே எனதருமை திமுகழக நண்பர்களே கவனிக்கவும்.. பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்துச் செய்தி என்பது குறித்து தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் தளபதி அவர்களின் அறிக்கை கட்சியின் நிலைபாட்டை சரியாக உணர்த்தி இருக்கிறது.
அதை புரிந்து நடப்பது நம் கடமை. அவர் திராவிடச் சிந்தனையின் வார்ப்பு என்பதை நிரூபித்து இருக்கிறார். சரியான நேரத்தில் சரியான கொள்கை விளக்கம் தந்த தங்கதளபதிக்கு வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழகம்.! வெல்க திராவிடம்.!
04-09-2014 அன்று எழுதிய பதிவு மீண்டும் நினைவிற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக