புதன், 3 ஜூலை, 2019

அரசியல் அதிகாரத்துக்காக மட்டுல்ல எனது போராட்டம்!' - ராஜினாமா கடிதத்தில் ராகுல் உருக்கம்

ராகுல்விகடன் -கலிலுல்லா.ச : மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டுபோயுள்ளது காங்கிரஸ். ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்பியிருந்த ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸூக்கு இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. இதனால் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என அவர் ராஜினாமா கொடுத்தும், அதைக் காங்கிரஸ் காரியகமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் முதல்வர்கள் அவரைச் சந்தித்து சமாதானம் செய்தும் பயனில்லை. அவர் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ராஜினாமா கடித்தத்தை ஏற்கெனவே வழங்கிவிட்டதால், நீண்ட நாள் தலைவர் பொறுப்பில் நீடிக்க முடியாது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளிலும் நான் பங்கேற்க மாட்டேன்” என்று உறுதிபட கூறியுள்ளார்.

அத்துடன் விரிவான விளக்க அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ராகுல், ``காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தது எனக்குக் கிடைத்த பெருமை. நான் இந்த நாட்டுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஒரு காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் கட்சியின் எதிர்கால நலன் கருதி நான் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறேன். கட்சியிலிருக்கும் பலர், அடுத்த தலைவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. பாரம்பர்ய வரலாற்றுப் பெருமை கொண்டது காங்கிரஸ். அப்படியிருக்க எங்களை வழிநடத்தும் சரியான தலைவரை கட்சி அறிவிக்கும் என நம்புகிறேன்.
அரசியல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல, எனது போராட்டம். பா.ஜ.க மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்போ, கோபபோ இல்லை. என்னுடைய உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்களும், பா.ஜ.க முன்னிறுத்தும் இந்தியாவை எதிர்க்கச் சொல்கின்றன. இது ஒன்றும் புதிதாகத் தொடங்கிய போராட்டம் அல்ல. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த போராட்டம் தான். அவர்கள் எங்கெல்லாம் வேற்றுமை பார்க்கிறார்களோ, அங்கு நான் சமத்துவத்தைப் பார்க்கிறேன். அவர்கள் வெறுப்பை நோக்கும் இடங்களில், நான் அன்பை விதைக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய இறுதி மூச்சுவரை நாட்டுக்காகச் சேவையாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்

தினமலர் : புதுடில்லி: காங்., கட்சி தலைவர் பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்துள்ள ராகுல், தனது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்., கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. கட்சியின் தலைவர் முறையில் 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். தோல்விக்கு நான் உட்பட பலர் பொறுப்பேற்க வேண்டி உள்ளது. சுமூகமான தலைமை மாற்றத்திற்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். கட்சியின் புதிய தலைமையை தேர்வு செய்வதற்கான சரியான ஆள் நான் இல்லை. நான் ராஜினாமா செய்து விட்டதால், உடனடியாக புதிய தலைவரை தேர்வ செய்யும்படி கட்சியினரிடம் கூறி உள்ளேன்.

பா.ஜ., மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. அதே சமயம் பா.ஜ.,வின் கொள்கைகள் இந்தியாவை கட்டுப்படுத்த நினைப்பதை எனது உடலின் ஒவ்வொரு செல்லும் தடுக்கும். காங்., கட்சியின் கடைநிலை உண்மை தொண்டனாக எனது கடைசி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன்.
பிரதமரும், ஆர்எஸ்எஸ்.,ம் நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களையும் கைப்பற்ற நினைப்பதை எதிர்த்தே எங்களின் போராட்டம். தேர்தல் நேர்மையாக நடைபெறாமல் ஒரு குறிப்பிட்ட கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கிறது.
லோக்சபா தேர்தலில் நாங்கள் ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை. ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனப்படும் சக்திகளை எதிர்த்தே போட்டியிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக