ஞாயிறு, 28 ஜூலை, 2019

கோயம்பேடு: ஆம்னி பேருந்துகளில் தீ விபத்து வீடியோ


மின்னம்பலம் : சென்னை கோயம்பேட்டில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்துகளில் தீ விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகே ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. இன்று (ஜூலை 27) மாலை அங்கு  நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்றில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவெனப் பரவி அருகில் நின்று கொண்டிருந்த இரண்டாவது பேருந்திலும் பற்றியுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அங்கும், இங்கும் ஓடியுள்ளனர். தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,
இதற்குள்ளாகவே, இரு பேருந்துகளும் தீயில் கருகியுள்ளன. இந்த பேருந்துகள் ஜாய் டிராவல்ஸ்க்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை. வார இறுதி நாள் என்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம், ஆம்னி பேருந்து நிலையத்தில் அதிகமாக இருந்துள்ளது. பேருந்துகள் தீயில் எரிந்ததைத் தொடர்ந்து பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனினும் இந்த தீவிபத்தில், பயணிகள் யாருக்கும் தீக்காயம் உள்ளிட்ட எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக