ஞாயிறு, 28 ஜூலை, 2019

மகாலட்சுமி ரயில்: வெள்ளத்தில் சிக்கிய 700 பேரும் மீட்பு... சமுகவலை சாதித்தது


மின்னம்பலம் : மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி ரயிலில் இருந்து 9 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 700 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
மகாலட்சுமி ரயில்: வெள்ளத்தில் சிக்கிய 700 பேரும் மீட்பு!மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குச் சாலை, விமானம், ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தைச் சூழ்ந்துள்ள மழை நீரால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மும்பை – கோலாப்பூர் இடையே இயங்கும் மகாலட்சுமி ரயில் உல்ஹாஸ் ஆற்று பகுதியில் 700 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த போது, பட்லாபூர் – வாங்கனி ரயில் நிலையங்களுக்கு இடையே, வெள்ளநீரில் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர், ரயில்வே அதிகாரிகள், விமானப்படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதியம் 3 மணியளவில் ரயிலில் சிக்கியிருந்த 700 பேரையும் மீட்டுள்ளனர். முழங்கால் வரையிலான தண்ணீரில் கடும் சிரமத்துக்கு மத்தியில் பயணிகள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஷாயாத்ரி மங்கள் காரியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 37 மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் கொண்ட குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. உணவு, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துதரப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். பயணிகள் அனைவரும் 19 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் மூலம் கோலாப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
700 பேர் மீட்கப்பட்டதை உள்துறை அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது. இதற்கிடையே அடுத்த இரு தினங்களுக்குக் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக