வியாழன், 4 ஜூலை, 2019

சாதி அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!”- அலகாபாத் நீதிபதி

அலகாபாத் நீதிபதிஅலகாபாத் நீதிபதி``சாதி அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!vikatan.com - ஜெனிஃபர்.ம.ஆ : இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளும் அடங்கிய குழு, புதிய நீதிபதிகளைத் தேர்வுசெய்வதற்கான குழு, அதாவது கொலீஜியம் (collegium) எனப்படும். இந்தக் குழுவே உச்ச நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் படைத்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங் நாத் பாண்டே இந்த முறையை எதிர்த்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கென எந்தவொரு தனிப்பட்ட விதியும் இல்லை. ஆனால், தகுதியுடைய அனைத்துத் தரப்பினருக்கும் உரிய முறையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்தியா முழுவதும் உள்ள தொடர் கோரிக்கை.
`கொலீஜியம் குழுவின் நீதிபதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை‘ என்று பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங் நாத் பாண்டே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை முடிவுசெய்வது, சாதியும், சிபாரிசுகளும்தான்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சம் நிலவுவதுடன், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, அறிந்தவர்களுக்குப் பதவிகொடுப்பது போன்ற அநியாயங்கள்தான் நிறைந்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் அடங்கிய ஒரு குழு, மூடப்பட்ட அறைக்குள் தேநீர் அருந்திக்கொண்டு, அவர்களுக்கு பிடித்தமானவர், தெரிந்தவர் என்ற அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்த நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. தங்களின் நியமனம் பற்றிய தகவல்களை மறைப்பதற்காக அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனால்தான், வருங்கால நீதிமான்கள் பெயர் பட்டியல் மட்டும் இறுதி முடிவு செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படுகிறது. இப்படித் தேர்வாகும் நீதிபதிகளின் நடுநிலைமையும் கேள்விக்குறியாகிறது.

சில சமயங்களில், ஒரு நீதிபதியின் உறவினரை நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முடியாது போனாலும், அவரைச் சார்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதியாக நியமிப்பது நடக்கிறது. உயர் நீதிமன்றம் தவிர்த்து, மற்ற நீதிமன்ற நீதிபதிகளின் பணி நியமனம் மாநில தேர்வாணையங்களின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. நீதிபதிகள் தேர்வு நடைமுறையில் உள்ள இதுபோன்ற சூழலால், சாதாரண குடும்பங்களிலிருந்து வரும் திறமையான வழக்கறிஞர்கள், நீதிபதிகளாவதில் சிக்கல் இருக்கிறது. நீதிபதிகள் தேர்வுக் குழு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதோடு, அந்தத் தேர்வு என்பது ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. இதனால் அவற்றில் உள்ள குறைகளைக் களையவே தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்ட வரைவு, 2014 தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது துரதிர்ஷ்டவசமானது.
நான் போட்டித் தேர்வு எழுதி நீதிபதியாக வந்தவன். என்னுடைய கடின உழைப்பாலும், திறமையாலும் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தேன். இதேபோல் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கும், அவரின் தகுதியும், உழைப்பும், திறமையும் மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ரங் நாத் பாண்டே அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதுடன் பிரதமர் மோடியிடம் தன்னுடைய கோரிக்கையை வைத்துள்ளார்.
மேலும், கருத்து வேறுபாடுகளால் நீதிமன்றம் பிளவுபட்டு நிற்கும் இன்றைய சூழலிலும், நீதித்துறையின் தரம் குறித்துக் கேள்வியெழுப்பப்படும் சூழ்நிலையிலும் இதை அதிமுக்கியமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியிருக்கிறார்.
அலகாபாத் நீதிபதி
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்ட வரைவு செயல்படுத்தப்பட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்படும் கொலீஜியத்தைக் கலைத்து, அதற்கு மாற்றாக அரசியலமைப்பின் புதிய சட்டத் திருத்தத்தின்படி தகுதிகள், அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட ஆணையமாகச் செயல்படும். இந்த ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே தலைவராகச் செயல்படுவார். ஆனால், கூடுதல் வெளிப்படைத்தன்மையும், நீதிபதி தேர்வில் கூடுதல் கவனமும், மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவமும் இருக்கும் என்பது வல்லுநர்கள் கருத்து.
இந்தச் சட்ட வரைவு  நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்ப்பின்றி நிறைவேறியது. ஆனால், இது நீதித்துறையின் இறையாண்மையைக் கெடுப்பதாகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி, உச்ச நீதிமன்ற அரசியலமைப்புச் சட்ட அமர்வு அதற்குத் தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, நாடாளுமன்ற இறையாண்மைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது மற்றோர் சாரரின் கருத்து. இனி நாம் என்ன சொல்வது…? ‘வாய்மையே வெல்லும் ‘!
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக