செவ்வாய், 2 ஜூலை, 2019

நஸ்ரத் ஜஹான்....மிஸ் கல்கத்தா, நடிகை, எம்.பி, குங்குமம்.. இஸ்லாமிய பத்வா ..

மிஸ் கல்கத்தா, நடிகை, எம்.பி, குங்குமம் சர்ச்சை... யார் இந்த நஸ்ரத் ஜஹான்..?vikatan.com - s.saravanan": கைகளில் மெஹந்தி, வளையல்கள், நெற்றியில் பொட்டு, குங்குமம் எனப் புதுமணப்பெண் பொலிவுடன் பதவியேற்றுக்கொள்ள, நஸ்ரத் மீது 'குங்குமம்' சர்ச்சை தொடங்கியது.
ஓர் இஸ்லாமியப் பெண், சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெறுகிறார். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த தன் காதலரை அவர் மணம் முடிக்கிறார். நாடாளுமன்றத்தில் எம்.பி ஆக பதவியேற்கும்போது, பொட்டு, வகிடு நிறைய குங்குமம் என்று வந்திருந்த அவரின் தோற்றத்துக்கு நாடே எதிர்வினையாற்றுகிறது. சோஷியல் மீடியா அவரை ட்ரால் மெட்டீரியல் ஆக்குகிறது.
அந்தப் பெண், மேங்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி நஸ்ரத் ஜஹான். இவரைப் பற்றிய ட்ரால்கள் ஒரு பக்கம் என்றால், தன்னைப் பற்றிய ட்ராலுக்கு அவர் கொடுத்த பதிலும் வைராலாகியது. `சாதி, மதத்தைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவின் பிரதிநிதி நான். அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன்.
அதே நேரம், நான் என்னை ஓர் இஸ்லாமியப் பெண்ணாகவே உணர்கிறேன். அதற்காக, என் விருப்பத்துக்கு நான் தேர்ந்தெடுத்து உடுத்தும் உடைகள் பற்றி கமென்ட் செய்ய யாருக்கும் உரிமையில்லை. மத நம்பிக்கை என்பது நாம் எவற்றை அணிகிறோம் என்பதில் இல்லை; அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிகளை நாம் எந்தளவுக்கு வாழ்கிறோம் என்பதே முக்கியம். வெறுப்பை உமிழ்பவர்களுக்குப் பதிலளிப்பது வெறுப்பையும் வன்முறையையுமே வளர்க்கும்' என்று நஸ்ரத் போல்டு ஸ்டேட்மென்ட் கொடுக்க, நஸ்ரத்தைப் பற்றிய பின்னணிச் செய்திகளை அறிய பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
நஸ்ரத் ஜஹான்
யார் இந்த நஸ்ரத் ஜஹான்..?
தற்போது 29 வயதாகும் பெங்காலிப் பெண்ணான நஸ்ரத் ஜவான், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை கொல்கத்தாவில் முடித்தார். காமர்ஸ் பட்டதாரி. 2010-ம் ஆண்டு `ஃபேர் ஒன் மிஸ் கல்கத்தா' பட்டம் வென்றவர். பின்னர் வங்காள சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்துப் புகழ்பெற்றார். சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக மேற்கு வங்கத்தின் பசிர்ஹாத் தொகுதியில் நின்று, 3.5 லட்சம் வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற பா.ஜ.க வேட்பாளரை வென்று வெற்றி பெற்றுள்ளார்.
தன் நீண்ட கால காதலரான நிகில் ஜெயினை, ஜூன் 19, 2019-ல், அதாவது இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் மணந்தார் நஸ்ரத். நிகில், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர், பிசினஸ்மேன். துருக்கியில் நடந்த தன் திருமணத்தின் காரணமாக, அந்தத் தேதிகளில் நாடாளுமன்றத்தில் நஸ்ரத்தால் பதவி ஏற்க இயலவில்லை. எனவே, நாடு திரும்பியதும், அவர் பதவியேற்றுக்கொண்டார். அப்போது, கைகளில் மெஹந்தி, வளையல்கள், நெற்றியில் பொட்டு, குங்குமம் எனப் புதுமணப்பெண் பொலிவுடன் பதவியேற்றுக்கொள்ள, நஸ்ரத் மீது 'குங்குமம்' சர்ச்சை தொடங்கியது.
முன்னதாக, நஸ்ரத்தும், அவர் தோழியும், மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு எம்.பியும் ஆன மிமி சக்ரபோர்தியும், நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாகச் சென்றபோது தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது ட்விட்டர் அக்கவுன்ட்களில் பதிவிட்டனர். ஜீன்ஸ், வெள்ளை ஷர்ட், ஃபிரில் டாப்  என அப்போது அவர்கள் அணிந்திருந்த மாடர்ன் உடைகளால் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். நஸ்ரத்தின் திருமணத்துக்கு மிமியும் சென்றிருந்ததால், சமீபத்தில் அவரும் நஸ்ரத்துடன் இணைந்து பதவியேற்றுக்கொண்டார். பின்னர், இருவரையும் பாராளுமன்ற வளாகத்தில் மீடியா சூழ்ந்துகொள்ள, இருவரும் கோபத்துடன் வெளியேறினர்.
நாடாளுமன்ற உறுப்பினரே ஆனாலும், தன் மதம், இனம் தந்திருக்கும் பெண்ணுக்கான வரையறைகளுக்குள் அவர் தன்னை நிறுவிக்கொள்கிறாரா என்பதை வைத்தே அவரை மதிப்பிடும் பார்வை மாறுவது எப்போது? இந்தப் பெண்களின் செயல்பாடுகள் அதற்குப் பதிலாக அமையட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக