திங்கள், 22 ஜூலை, 2019

அதிமுகவின் உண்மை தொண்டர்கள் தாய் கழகமான திமுகவுக்கு வருமாறு ஸ்டாலின் அழைப்பு!

அதிமுகவுக்கு ஸ்டாலின் திடீர் அழைப்பு!மின்னம்பலம் : அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் தாய்க்கழகமான திமுகவில் இணைய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டாலின் ஆளுமைமிக்க தலைவர் என்றும் தேனியில் மிகப்பெரிய விழா எடுத்து தன்னுடைய ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கவுள்ளேன் எனவும் கூறியிருந்தார்.
அதன்படி, தேனி மாவட்டம் வீரபாண்டியில் நேற்று (ஜூலை 21) மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி பலர் திமுகவில் இணைந்தனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின், “தங்க தமிழ்ச்செல்வனிடம் எனக்குப் பிடித்தது எப்போது சிரிப்புடன் இருக்கும் அந்த முகம்தான். சட்டமன்றத்தில் சில நேரங்களில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சியினரைப் பார்த்து வரம்பு மீறி விமர்சனம் செய்வார்கள். ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் எங்களைப் பார்த்து கேள்வி கேட்டதுண்டு. விமர்சனம் செய்ததுண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி விமர்சித்ததில்லை. நான் சட்டமன்றத்தில் பேசிவிட்டு வெளியே வரும்போது என் அருகில் வந்து ‘அண்ணே சூப்பரா பேசினீங்க’ என்று சொல்லிவிட்டுச் செல்வார். நல்ல உள்ளம் படைத்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆகவேதான் அவரை தூண்டில் போட்டு திமுக பக்கம் இழுக்க நீண்ட நாட்களாக முயன்றதுண்டு. அப்போது மாட்டவில்லை. இப்போது மாட்டிக்கொண்டார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார்” என்று பாராட்டினார்.
எம்.ஜி.ஆர் - கலைஞரின் நட்பு குறித்து விவரித்த ஸ்டாலின், “இன்றைய அதிமுக எம்.ஜி.ஆர் அதிமுகவாக இல்லை. அப்படி இருந்திருந்தால் தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுகவுக்கு வந்திருக்கவே முடியாது. அண்ணா மறைவுக்குப் பின்னர் கலைஞரைத் தலைவராக்க முதலில் ஆதரவு தந்தவர் எம்.ஜி.ஆர். கலைஞரின் பெயரை யாராவது அவர் முன்பு சொன்னால் அவர்களைக் கண்டித்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மறைந்த போது முதன்முதலாக அஞ்சலி செலுத்தியவர் கலைஞர். 40 ஆண்டுக்கால நண்பரை இழந்துவிட்டேன் என வருந்தியவர் கலைஞர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பயன்படுத்திக்கொண்டனர். மேலும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. நமக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நாம் என்றைக்கும் அவரை தரம் தாழ்ந்து விமர்சித்தது கிடையாது. அதே உணர்வோடுதான் அவரும் இருந்திருக்கிறார். ஜெயலலிதா படத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் அமைச்சர்கள் உள் அன்போடு வைத்திருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “ஜெயலலிதா சிறையிலிருந்தபோது அமைச்சரவை பதவியேற்றதும், மறைந்தபோது பதவியேற்றதும் எப்படி இருந்தது என்று இங்கு சொன்னார்கள். ஆனால், அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் பன்னீர்செல்வம். அவரை சமாதானப்படுத்தவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஆறு முறை சம்மன் அனுப்பியும் இதுவரை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை” என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின்,
எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பற்றி சிந்திக்காமல் இருப்பவர்கள்தாம் இன்று முதல்வராகவும், துணை முதல்வராகவும் இருக்கிறார்கள். எங்களுக்கு மோடியும் அமித் ஷாவும்தாம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அவர்களது புகைப்படத்தை பூஜை செய்து வருபவர்கள்தாம் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.
மேலும், “பணத்திற்காகவும் பதவிக்காகவும் அடிமைகளாக இருப்பவர்களின் ஆட்சியாகத்தான் அதிமுக ஆட்சி இருந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இன்றைக்கும் அதிமுகவில் உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கும் விசுவாசிகள், தொண்டர்கள் அங்கு இருப்பதில் நியாயமில்லை. உங்களுடைய இயக்கம் திராவிட இயக்கமாக இருக்கும் திமுகதான். இந்தக் கூட்டத்தின் மூலமாக அவர்களையும் திமுகவுக்கு அழைக்க நான் விரும்புகிறேன்” என்று அதிமுகவினருக்கு நேரடியாகவே அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக