திங்கள், 22 ஜூலை, 2019

சந்திரயான்2 பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்... இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்2மாலைமலர் :இந்தியாவால் இன்று ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள 'சந்திரயான்-2’ விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி சரியாக இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சென்னை அருகேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது. புறப்பட்டு சென்ற சிறிது நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். சந்திர கிரகம் தொடர்பாக ஆய்வு செய்யும் இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணத்தின் துவக்கமாக இன்றைய வெற்றியை கருதுவதாக சிவன் குறிப்பிட்டார்.


'சந்திரயான்-2’ வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த சாதனையால் 130 கோடி இந்தியர்களும் பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


'சந்திரயான்-2’ ஏவப்பட்ட காட்சியை டெல்லியில் உள்ள தனது அலுவலக அறையில் இருந்தவாறு கண்டு மகிழ்ந்த மோடி, கரவொலியால் வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் சிவனை தொலைபேசியில் தொடர்புகொண்டும் இந்த வெற்றிக்காக உழைத்த அனைவரையும் வாழ்த்தினார்.

'சந்திரயான்-2’ விண்ணில் செலுத்தப்பட்ட சிறப்பான இந்த தருணம் நமது மகிமைக்குரிய வரலாற்று  பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இதன் மூலம் நமது விஞ்ஞானிகளின் ஆற்றலும் அறிவியல் யுகத்தின் முன்னேற்றத்தை அடைய துடிக்கு 130 கோடி இந்தியர்கள் ஊக்கமும் வெளிப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று ’சந்திராயன்2’ ஏவப்பட்டது, அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இந்தியாவின் இந்த சிறப்பு விண்வெளி திட்டத்துக்காக உழைத்த நமது விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்!

சந்திரனின் தென் துருவத்துக்குள் மிக நெருக்கமாக தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சிறப்பை இன்னும் 50 நாட்களில் சந்திராயன்2 அடைந்து விடும். பின்னர் நடைபெறும் ஆய்வுகளின் மூலம் நமது அறிவுக்கு செறிவூட்டும் புதிய கண்டுபிடிப்புக்களை நாம் பெறலாம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த சாதனைக்காக பாராளுமன்ற மாநிலங்களவையில் வாழ்த்து தெரிவித்த சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கயா நாயுடு, 'இந்த பெருமைக்குரிய சாதனைக்காக நமது விஞ்ஞானிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாதனை பயணத்தின் மூலம் ‘இஸ்ரோ’விஞ்ஞானிகள் நமது நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளனர்’ என குறிப்பிட்டார். ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் ஆகியோரும் இந்த சாதனையை வாழ்த்தியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக