வியாழன், 18 ஜூலை, 2019

கல்விக் கொள்கை: ரகசிய கருத்துக் கேட்பு கூட்டங்கள்..

கல்விக் கொள்கை:  ரகசிய கருத்துக் கேட்பு கூட்டங்கள்!மின்னம்பலம : தடுத்து நிறுத்திய தபெதிக
புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விவாதங்கள் நடைபெறத் தொடங்கியிருக்கும் நிலையில், நேற்று (ஜூலை 17) கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் கசிந்தன.
பள்ளி,கல்லூரி ஆசிரியர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ,மாணவர்களுக்கோ எந்தவித பொது அறிவிப்பும் கொடுக்காமல், தமிழக அரசின் சார்பில் கருத்துக்கேட்பு என்ற பெயரில் கூட்டம் நடைபெறுவது ஏன் என்பது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சிலருக்கு சந்தேகம் ஏற்பட, உடனே அதன் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டனர். பிஎஸ்ஜி சென்று கடும் முயற்சிக்குப் பின் அந்த வளாகத்தில் ஒரு அறையில் நடந்துகொண்டிருந்த கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குள் ராமகிருஷணன் பத்திரிகையாளர்களோடும் கேமராக்களோடும் செல்ல அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.

“இந்தக் கருத்துக் கேட்பு கூட்டத்துக்கான அறிவிப்பு செஞ்சிருக்கீங்களா? மாணவர்கள் தரப்பு யார் இருக்காங்க? பெற்றோர்கள் தரப்பு யார் இருக்காங்க? எதுவுமே தெரியாம நீங்க சொல்றதை கேட்டுக்குறவங்களை மட்டும் வச்சிக்கிட்டு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினா என்ன நியாயம்? இதை நாங்க நடத்த விட மாட்டோம் சார். நடத்தக் கூடாது... ஏன்னா நாங்களும் ஒரு பெற்றோர்” என்று உள்ளே புகுந்து அங்கே இருந்த அதிகாரிகளிடம் கேட்டார் கோவை ராமகிருஷ்ணன்.
அதிகாரிகள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.
“கருத்து சொல்ல அவகாசமே இன்னும் 15 நாள்தான் இருக்கு. அதுலயும் கடைசி நேரத்துல கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துறீங்க. விளம்பரம் பண்ணியிருக்க வேண்டாமா? மக்களுக்கு தெரியவேண்டாமா? மக்களுக்கே தெரியாம என்ன சார் கருத்துக் கேட்பு? அப்படின்னா நீங்களே தயார் பண்ணி வச்சிக்கிட்டு நடத்துறீங்கதானே? கையெழுத்து மட்டும் வாங்கப் போறீங்களா? புதிய கல்விக் கொள்கைன்னா என்னானு தெரியுமா சார்? நாங்க அதை தமிழாக்கம் பண்ணி வச்சிருக்கோம். இந்தாங்க படிங்க” என்று ஒவ்வொருவருக்கும் புதிய கல்விக் கொள்கையின் தமிழாக்கத்தை விநியோகிக்க ஆரம்பித்தார்.
அப்போது வாயைத் திறந்த ஓர் அதிகாரி, “சார்... நீங்க எங்ககிட்ட பேசறதே தப்பு. நீங்க ஸ்கூல் எஜுகேஷன் டைரக்டர்கிட்ட போய் பேசுங்க. இது மீட்டிங் இல்ல. டிஸ்கஷன்” என்று கூறினார்.
டிஸ்கஷனுக்கும் மீட்டிங்குக்கும் என்ன வித்தியாசம் என்று ராமகிருஷ்ணன் தரப்பில் கேட்க, “இது பாலிசி மேட்டர். நாங்க டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்கோம்” என்று மீண்டும் பதில் கொடுத்தனர் அதிகாரிகள்,.
அப்போது ராமகிருஷ்ணன், “சார் இது மக்கள் பிரச்சினை. எத்தனை மாணவர்களை ஆசிரியர்களை, மாணவர்க்ளைக் கூப்பிட்டீங்க? நீங்களால் முதல் தலைமுறை அதிகாரிகளாதான் இருப்பீங்க. இப்படி பண்ணாதீங்க சார்” என்று கூற, “சார்... அரசு ஊழியர்களை பணி செய்யவிடாம தடுக்குறீங்க?” என்றார் ஒரு அதிகாரி.
சுமார் பத்து நிமிடங்கள் அங்கெ பேசி அந்தக் கூட்டம் நடக்கும் தகலையும் அம்பலப்படுத்தி, அந்தக் கூட்டத்தையும் பாதியிலேயே முடிக்க வைத்தார் கோவை ராமகிருஷ்ணன்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மத்திய அரசின் கல்விக் கொள்கையின் மீது கருத்துக் கேட்புக் கூட்டத்தை கல்வித் துறை அதிகாரிகள் மக்களுக்குத் தெரியாமல், மாணவர்களுக்குத் தெரியாமல், பத்திரிகையாளர்க்ளுக்குத் தெரியாமல் நடத்திக் கொண்டிருந்தது. இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியவந்தது. முறையாக விளம்பரப்படுத்தி சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அழைத்து கருத்துக் கேட்காமல், இந்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான சில ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை மட்டும் அழைத்து இப்படி ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். இதையடுத்து உடனடியாக இங்கே பத்திரிகையாளரக்ளை அழைத்துக் கொண்டு வந்தோம்
அரசு இந்தப் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என்று பலருக்கும் முறையான அழைப்பு விடுத்து கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். தனக்கு சார்ந்த ஆசிரியர்களை, பள்ளிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக ஏதோ ஒரு குகை போன்ற இடத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கிறது. இது உண்மையான கருத்துக் கேட்பு கூட்டமே அல்ல. அனைத்து தரப்பினரின் பங்களிப்போடும் நடத்துவதே உண்மையான கருத்துக் கேட்புக் கூட்டம்” என்று தெரிவித்தார் கோவை ராமகிருஷ்ணன்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி அதில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை கையெழுத்து வாங்கி மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு தீவிரமாகியிருக்கிறது. கோவையில் நடந்த ஒரு ரகசிய கருத்துக் கேட்பு கூட்டம் தபெதிகவால் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இன்னும் எங்கெங்கே இதுபோன்ற ரகசிய கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடந்திருக்கின்றனவோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக