சனி, 1 ஜூன், 2019

வைத்திலிங்கத்தின் அமைச்சர் வாய்ப்புக்கு வேட்டு வைத்த பன்னீர்செல்வம் ..

மோடி திட்டம்.vikatan.com - கு.ஆனந்தராஜ்: பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க-வில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததற்கு அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பிடிவாதமும் ஒரு காரணம் என்ற புகைச்சல் அ.தி.மு.க தரப்பில் இப்போது எழுந்துள்ளது.
பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை பதவியேற்புக்கு முன்பாக அந்தக் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவை பதவியேற்புக்கு இருதினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். அப்போது, `தனக்கு அமைச்சர் பதவி வேண்டும்' என்று வைத்திலிங்கம் கேட்டிருக்கிறார்.
அக்கூட்டத்தில் இருந்த தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள், `கட்சியில் சீனியரான வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி பெற்றுக்கொடுக்கலாம்' என முதல்வரிடம் கூறியிருக்கின்றனர். அதற்கு எடப்பாடியும் சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில் இருந்துள்ளார். அதேநேரம் அ.தி.மு.க தரப்பில் இரண்டு அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாக பி.ஜே.பியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது பா.ஜ.க மேலிடம்.
இந்நிலையில் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்று, அமைச்சர் பதவி பெறுவது குறித்து கடைசிநேரம் வரை போராடியிருக்கின்றனர். கடைசிவரை ஒரு அமைச்சர் பதவிதான் என்று கறாராக இருந்தது பா.ஜ.க. எனவே வைத்திலிங்கத்தை அமைச்சராக்கலாம் என எடப்பாடி மற்றும் அ.தி.மு.க மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். தன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி பெற வேண்டும் எனப் போராடிக்கொண்டிருந்தார், ஓ.பன்னீர்செல்வம். எனவே, அ.தி.மு.க சார்பில் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என பா.ஜ.கவிற்கு அனுப்பும் கடிதத்தில் கையொப்பமிடமாட்டேன் என மறுத்திருக்கிறார், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம். இதனால்தான் அ.தி.மு.கவிற்கு வழங்கப்பட இருந்த ஒரு அமைச்சர் பதவியும் யாருக்கும் கிடைக்காமல் போனதாம். பன்னீர்செல்வத்தின் செயலால், அக்கட்சியிலுள்ள முன்னணி நிர்வாகிகள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்களாம். இவ்விவகாரம் அ.தி.மு.கவில் பெரிய புகைச்சலை ஏற்படுத்தும் நிலையில் விவகாரம் பெரிதாகியிருக்கிறதாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக