ஞாயிறு, 23 ஜூன், 2019

தமிழிசை : அதிமுகவினரின் யாகத்தால் மழை பெய்தது!

மின்னம்பலம் : அதிமுகவினர் யாகம் நடத்தியதால் நேற்று தமிழகத்தில் பல இடங்களில் மழை
பெய்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடிவரும் நிலையில், இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதேவேளையில் தண்ணீர் பிரச்சினை தீர மழை வர வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று அனைத்து கோயில்களிலும் யாகம் நடத்தப்பட்டது. அதில் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுகவினர் யாகம் நடத்தியதற்கு விமர்சனங்களும் எழுந்தன. யாகம் நடத்தியதற்கான தொகையை குடிநீர் பிரச்சினைக்காக செலவிட்டிருக்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 23) தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழகத்தில் பாஜக, அதிமுக கட்சிகள் எதை முன்னிறுத்தினாலும் அவை விமர்சிக்கப்படுகின்றன. முதல்வர், துணை முதல்வர் அறிவிப்பின்படி நேற்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வர வேண்டி யாகங்கள் நடத்தப்பட்டன. யாகம் வளர்ப்பது மழையை வரவைப்பதற்கான ஒரு முயற்சி என்பதை நமது முன்னோர்கள் நமக்கு பதிவிட்டிருக்கிறார்கள். நமது நம்பிக்கை அது.
ஆனால் யாகம் நடத்துவதை விமர்சிக்கிறார்கள். மற்ற மதத்தினரும் மழைக்காக வேண்டி நேற்று வழிபாடு நடத்தினர். நேற்று காலை யாகம் செய்தனர், மாலையில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. எனவே மக்களின் நம்பிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம்” என்று கருத்து தெரிவித்தார்.
யாகம் நடத்தினால் தண்ணீர் வருமா என்று கேட்கிறார்கள், அப்படியென்றால் போராட்டம் நடத்தினால் மட்டும் தண்ணீர் வருமா என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, “வேலூரிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துவரக் கூடாது என்று துரைமுருகன் கூறுகிறார். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதுதான் தமிழரின் அடையாளம். ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லக்கூடாது என்ற கருத்து திமுகவினரால் பரப்பப்படுகிறது. இவர்கள் எப்படி மாநில ஒற்றுமையை, தேசிய ஒற்றுமையை பாதுகாப்பார்கள்” எனவும் அதிருப்தி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக