திங்கள், 17 ஜூன், 2019

சிறுத்தையை கற்களால் அடித்து தம்பியை மீட்ட அண்ணன் .. மகராஷ்டிரா

சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டி தம்பியை மீட்ட சிறுவன்மாலைமலர் :மகாராஷ்டிராவில் 14 வயது சிறுவன், தன் தம்பியை தாக்கிய சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையிடம் சிக்கிய ஹர்‌ஷத்தையும் (தலையில் கட்டுடன் இருப்பவன்), அவனை காப்பாற்றிய நரேஷ் (வலது புறம்)
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் தொகவாட் அருகேயுள்ள கர்பாத்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் நரேஷ் கலுராம் பாலா (14). இவன் தனது தம்பி (சித்தப்பா மகன்) ஹர்‌ஷத் விட்டல் பாலா (7) என்பவனுடன் அருகில் உள்ள முர்பாத் வன சரகம் பகுதிக்கு சென்று இருந்தான். இவர்களுடன் பாட்டி கான்கிபாயும் சென்று இருந்தார். அங்கு அவர் வேலையில் மும்முரமாக இருந்தார். சிறுவர்கள் இருவரும் அங்குள்ள மரங்களில் இருந்து கீழே உதிர்ந்து கிடந்த நாவற்பழங்களை சேகரிக்க சென்றனர்.


அங்கு ஒரு புதரில் மறைந்து இருந்த சிறுத்தை திடீரென சிறுவன் நரேஷ் மீது சீறிப்பாய்ந்து தாக்கியது. இதனால் பயத்தில் அலறிய அவன் அங்கிருந்து ஓடி தப்பினான்.

அப்போது இவனை விட்டு விலகிய சிறுத்தை அருகில் நின்று கொண்டிருந்த அவனது தம்பி ஹர்‌ஷத்தை கடுமையாக தாக்கியது. அவனை புதருக்குள் இழுத்து செல்ல முயன்றது. என்ன செய்வது என அறியாது தவித்த நரேஷ் அங்கு கிடந்த குச்சி மற்றும் கற்களால் சிறுத்தையை சரமாரியாக அடித்தான்.

அதை தொடர்ந்து கல்வீச்சை தாங்க முடியாத சிறுத்தை புலி ஹர்‌ஷத்தை விட்டு புதருக்குள் ஓடி மறைந்தது. இதற்கிடையே சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாட்டி கான்கிபாய் காயம் அடைந்த 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்த மறுநாள் சிறுவன் ஹர்‌ஷத்தை தாக்கிய சிறுத்தை அங்குள்ள 300 மீட்டர் சுற்றளவில் புதரில் இறந்து கிடந்தது. பெண் சிறுத்தையான அதற்கு 10 முதல் 12 வயது வரை இருக்கும்.

அது மீட்கப்பட்டு சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இறந்த சிறுத்தையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. வயது மூப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சிறுத்தையிடம் இருந்து உயிர்தப்பிய சிறுவர்களை தொகாவாடா போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக