சனி, 22 ஜூன், 2019

தண்ணீரை போல .. குழந்தைகளுக்கு காற்றும் ஆடம்பர பொருளாய் மாறி இருக்கும்

சுமதி விஜயகுமார் : 'கொஞ்சமா மூச்சு இழுத்து விடுங்க. பெருமூச்செல்லாம் விட்டு காத்த waste பண்ணாதீங்க' என்று யாரவது சொன்னால் பலமாக
சிரித்துவிட்டு 'காத்து என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' என்று கேட்போம். இதே போல் ஒரு 30, 40 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் தாத்தாக்களிடம் 'தண்ணிய ரொம்ப செலவு செய்யாதீங்க, சிக்கனமா இருங்க' என்று சொல்லி இருந்தால் நம்மை மேலும் கீழும் பார்த்திருப்பார்கள். அன்று மட்டுமில்லை இன்றும் தண்ணீர் யாருக்கும் சொந்தமில்லை.
15 வருடங்களுக்கு முன்பு bisleri தண்ணீரை உபயோகப்படுத்துவது மேட்டுக்குடி மக்கள் தான். பின்பு அது அந்தஸ்து விஷயமாகி அதுவே அத்தியாவசியமாக மாறியதில் இருக்கிறது முதலாளித்துவம். இன்று நம்மிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள் என்று சொல்லும் எந்த அரசாங்கமும் பேர்நிறுவனங்களை நோக்கி, தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் உற்பத்தியை குறைத்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் சொல்லாது. நாமும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்துவோமே தவிர, அடிப்படை தேவையான தண்ணீரை நான் ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று அரசை நோக்கி கேட்கவே மாட்டோம். நாம் சிக்கனமாக செலவழித்து சேமிக்கும் தண்ணீர் யாருக்காக பயன்பட போகிறது? நிச்சயம் நமக்காக இல்லை.

எந்த வாகனம் வாங்கினாலும் அதை உபயோகப்படுத்த ரோட்டு வரி கட்டிய பொழுதும் ரோட்டை உபயோகப்படுத்த tollகு ஏன் வரி செலுத்த வேண்டும் என்று கேட்கமாட்டோம். Education cess என்னும் கல்வி வரி கட்டிய பொழுதும் ஏன் குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைப்பதில்லை என்று கேட்க மாட்டோம். லு;குழந்தையாய் இருக்கும் பொழுதே நாம் பள்ளிகளில் படிக்கும் முதல் பாடம் ' பெரியவர்களை எதிர்த்து கேள்வி கேட்காதே' என்பது தான். அதன் நீட்சியாய் இன்றும் கேள்விகள் கேட்க மறுக்கிறோம்.
ஊர் கழிவுகள் எல்லாம் சென்று சேரும் இடங்களில் விளிம்பு நிலை மக்களை குடியமர்த்தி சுத்தமான தண்ணீர் கொடுக்காமல் 'அவர்கள் சுத்தமற்றவர்கள்' என்று சொல்லும் சமூகத்திற்கு இப்போது புரிந்திருக்கும் 'சுத்தம்' என்பது எவ்வளவு ஆடம்பரமான சொல் என்று. தாழ்த்தப்பட்ட மக்கள் மக்கள் ஊரில் இருந்து அப்புறப்படுத்தப்படும் பொழுது குரல் கொடுத்திருப்போமேயானால் அவர்கள் குறைந்தபட்ச நீர் நிலைகளையாவது பாதுகாத்திருப்பார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மாட்டை பாதுகாக்க பொங்கி எழுந்த தமிழகம் இன்று உயிருக்கு தேவையான கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டிலும் வீதிக்கு வராதது யாருடைய அறிவு பிழை. அரசை நோக்கி கேள்வி கேட்காத வரை, வீதிக்கு வந்து போராடாதவரை, காசு இருக்கும் வரை அடிப்படை தேவைகளை வாங்கி விடலாம். அதன் பிறகு?
வளர்ச்சி என்று சொல்லின் ஆபத்து இன்னும் நமக்கு புரியவில்லை. மலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் வாழும் பூர்வகுடி மக்கள் கூட்டம் கூட்டமாக அப்புறப்படுத்தி கொண்டிருக்கிறது இந்த அரசு. தங்கள் வாழ்வாதாரத்தையும் நிலத்தையும் இழந்து அவரகள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் இந்த பூமிக்கு வறட்சியை கொண்டு சேர்க்கும்.
இப்போதே நம் குழந்தைகளை நன்றாக காற்றை சுவாசிக்க சொல்லுவோம். ஏனென்றால் அவர்களின் குழந்தைகளுக்கு காற்றும் ஆடம்பர பொருளாய் மாறி இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக