வெள்ளி, 28 ஜூன், 2019

ஆட்சிக் கவிழ்ப்பு: ஸ்டாலின் தயக்கம்- நிஜப் பின்னணி சொன்ன எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு: ஸ்டாலின் தயக்கம்- நிஜப் பின்னணி சொன்ன எடப்பாடிமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“தமிழ்நாடு சட்டமன்றம் முறைப்படி இன்று கூடிய நிலையில் ஆளும் கட்சியான அதிமுக எதிர்க் கட்சியான திமுக ஆகியவை தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றன. சுமார் ஒரு மாத காலம் நடைபெறக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்தக் கட்சிகளின் வியூகம் என்ன என்பது பற்றி இக்கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவை கூட்டம் அறிவிக்கப்பட்டபோது அனைவரும் எதிர்பார்த்தது சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்னவாகும் என்பதுதான். பொறுத்திருந்து பாருங்கள் என்று மே 28-ஆம் தேதி சொன்ன ஸ்டாலின் இன்று அதற்கும் விடை அளித்து விட்டார்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுக்கப்பட்ட அன்றைய சூழல் வேறு இன்றைய சூழல் வேறாக இருப்பதால் வரும் சட்டமன்றத்தில் அதை வலியுறுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். இதை சொல்லிவிட்டுதான் திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு விரைந்தார்.

அண்மையில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தியதோடு இன்றைய சட்டமன்ற பணிகள் முடிந்த நிலையில் 11 மணிக்கு அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த சட்டமன்ற மினி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பதிமூன்று புதிய எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
திமுக சட்டமன்றக் கொறடா சக்கரபாணி புதிய எம்எல்ஏக்களை பழைய எம்எல்ஏக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், ‘புது எம்எல்ஏக்கள் வந்திருக்கீங்க. ஏற்கனவே உங்க மாவட்டத்தில் சீனியர் எம்எல்ஏக்கள் இருக்காங்க. அவங்ககிட்ட தொடர்ந்து பேசுங்க. சட்டமன்ற நடைமுறைகளைப் பற்றி தெரிஞ்சுக்கங்க. வெட்டுத் தீர்மானம், கேள்விகள் பத்தி எல்லாம் அவங்க கிட்ட கேட்டு சந்தேகம் இருந்தா தெளிவுபடுத்திக்கங்க’ என்று முடித்தார்.
அதன் பின் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன் வழக்கம்போல் எம்எல்ஏக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ‘நான் தலைவர்கூட இருந்திருக்கேன். இப்ப நம்ம தலைவர் கூடவும் இருக்கேன். என்னோட அரசியல் அனுபவத்துல, சட்டமன்ற அனுபவத்துல நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட வலிமையான எதிர்க்கட்சி தலைவர்னா அது நம் தலைவர் ஸ்டாலின்தான். இன்னிக்கி டெல்லியில் வடநாட்டுக் காரன்லாம், ’யாருய்யா அந்த ஸ்டாலின்’ அப்படின்னு கேட்கிறான். காரணம் இந்தியா முழுக்க பிஜேபி ஜெயிச்சாலும் தமிழ்நாட்டில் நம்மதான் முழு வெற்றி அடைந்திருக்கோம். பார்லிமென்டில் மூன்றாவது பெரிய கட்சி நாமதான். இந்த பொறுப்புகளை உணர்ந்து சட்டமன்றத்தில் நாம செயல்படணும்’ என்று முடித்தார் துரைமுருகன். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே எம்.எல்.ஏ.க்களுக்கு மசால் வடை கொடுக்கப்பட்டது.
இறுதியாக பேசிய ஸ்டாலின், ‘இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மேல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால் இப்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த தீர்மானத்தை வலியுறுத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். இதை சட்டமன்ற வளாகத்திலே இப்போதுதான் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன். இருந்தாலும் உங்களிடமும் அதை சொல்ல வேண்டும் என்பதால் இங்கேயும் சொல்கிறேன். புதிய எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளையும் புது பிரச்சினைகளையும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தெளிவாக எடுத்து வைத்து போராட வேண்டும்’ என்று பேசியவர் நம் கட்சியில் இணைய தங்கதமிழ்செல்வன் வந்திருக்கிறார். அந்த இணைப்பு விழாவிற்கு செல்கிறேன் நீங்களும் அங்கு வரலாம்’ என்று சொல்லி உரையை முடித்தார்” என தனது செய்தியை முடித்து செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அடுத்து ஃபேஸ்புக் தன் செய்தியை மெசெஞ்சரில் டைப் செய்யத் தொடங்கியது.
“இதேநேரம் அதிமுகவின் தலைமை அலுவலகத்திலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் வந்து விட முதல்வர் மட்டும் சற்று தாமதமாக வந்தார்.
கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான் அதிகம் பேசினார். சட்டமன்றக் கூட்டத் தொடரில், குடிதண்ணீர் பிரச்சினையே அதிகம் பேசப்படும் என்பதால் அதுபற்றியே அவரும் விளக்கினார். ‘குடிதண்ணீர் பிரச்சினை பற்றி எதிர்க்கட்சியான திமுக பூதகாரமாக பிரச்சாரம் செய்கிறது. நான் உள்ளபடியே சொல்கிறேன். இந்நேரம் திமுக ஆட்சியில் இதுபோல குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அவர்களால் சமாளித்திருக்கவே முடியாது. ஆனால் நாம் கடுமையாக பணியாற்றி குடிதண்ணீர் பிரச்சினையை சரிசெய்துகொண்டிருக்கிறோம். நான் ஒவ்வொரு நாளும் தூங்க அதிகாலை 3 மணி ஆகிறது. அதிகாரிகளோடு பேசி, பணிகளைப் பார்வையிட்டு, முதல்வரிடம் அதை சொல்லிவிட்டு, நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்துவிட்டுத்தான் தூங்கவே செல்கிறேன். அதிமுக அரசு மக்களுக்காக கடுமையாக உழைக்கிறது என்பதை சொல்லவே இதை நான் குறிப்பிடுகிறேன். அதனால் எதிர்க்கட்சிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களை ஆஃப் பண்ண வழியிருந்தால் பாருங்கள்’ என்று பேசினார் வேலுமணி.
உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசுகையில், ‘எங்க தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் அஞ்சு எம்எல்ஏக்கள் இருக்காங்க. அதுல ரெண்டு பேரு திமுக. மூணு பேரு அதிமுக. இப்ப என்னோட கட்டுப்பாட்டில் எங்க மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் நாலு எம்எல்ஏக்கள் இருக்காங்க. அதாவது இரண்டு திமுக எம்எல்ஏக்கள்ல ஒருத்தர் நம்ம பக்கம் இருக்காரு. இதேபோல அமைச்சரா இருக்கிற மாவட்ட செயலாளர்கள் அத்தனை பேரும் அவங்கவங்க மாவட்டத்தில் இருக்கிற திமுக எம்எல்ஏக்களை நம்ம பக்கம் கொண்டு வந்து வச்சுக்கணும். அதுதான் நமக்கு நல்லது’ என்று பேசினார்.
கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ’நமக்கு வந்த சோதனைகள் கொஞ்சம் கொஞ்சமா விலகிக்கிட்டு இருக்கு. ஸ்டாலின் பின்வாங்கினதே நமக்கு கிடைச்ச வெற்றி. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அங்க போறாங்க, இங்க போறாங்கனு பல பேர் பல செய்திகளை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனால், ஆனா நீங்க எல்லாரும் எப்போதும் என் பக்கம்தான் இருக்கீங்கனு எனக்கு தெரியும். அதை தெரிஞ்சுக்கிட்டுதான் ஸ்டாலின் முன் வைத்த காலை பின் வைத்திருக்கிறார். அதனால் நம் ஆட்சிக்கு இனிமே பிரச்சினையே இல்லை. நீங்க சுயேச்சையா போட்டியிட்டா கூட உங்க தொகுதியில வெற்றிபெறும் அளவுக்கு எல்லாரும் இன்னும் சிறப்பா செயல்படுங்க.
உங்க ஒவ்வொருத்தர் பத்தின ரிப்போர்ட்டும் வாங்கிப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். யார் மேலயும் எந்த குறையும் இல்ல. உங்களுக்கான தேவைகள் எதுவானாலும் என்கிட்ட கேட்கலாம். எந்த எம்.எல்.ஏ.வும் வந்து பழனிசாமிய பார்க்க முடியாம போனதா சரித்திரமே கிடையாது. எந்த நம்பர்ல என்கிட்ட பேசணும்னு உங்களுக்கு தெரியும். எப்ப வேணும்னாலும் பேசுங்க.
நம்ம சூழ்நிலை இப்ப நல்லா இருக்கு. சட்டமன்றத்தை சுமுகமா கொண்டு போகணும் எந்தவிதத்திலும் சலசலப்பு, சச்சரவு இருக்கக்கூடாது அதுல நம்ம எல்லாரும் கவனமா இருக்கணும். அன்பழகன் அண்ணன் சொன்ன மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற திமுக எம்எல்ஏக்களோட இணக்கமாக இருங்க. இன்னிக்கும் பல திமுக எம்எல்ஏக்கள் ஆட்சி மாற்றம் அல்லது தேர்தல் எதையும் விரும்பல. அதனால முடிஞ்ச வரைக்கும் அவர்களை அனுசரித்துப் போங்க’ என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி.
சபாநாயகர் மீது கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது ஒரு வகையில் இந்த அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தான். ஆனால் அதை திடீரென ஸ்டாலின் முன்னெடுக்க தயங்கி பின் வாங்கியதற்கு காரணம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயம் தான். அதாவது அதிமுகவின் அரசில் அமைச்சராக இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் பலர் தங்கள் மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் ஒரு சிலரையாவது தங்கள் கைக்குள் வைத்திருக்கிறார்கள். இதனால்தான் இப்போது நமக்கு சூழ்நிலை நன்றாக இருக்கிறது என்று எடப்பாடி கூறியிருக்கிறார். அதனால் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரை அதிமுகவினர் நம்பிக்கையாகவே எதிர்கொள்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக