புதன், 19 ஜூன், 2019

காணாமல்போன மராத்தி போஜ்பூரி சினிமாக்கள் .. கோடிகளில் புரளும் தமிழ் சினிமா… மொழியே அரசியல்!

காணாமல்போன மராத்தி சினிமா; கோடிகளில் புரளும் தமிழ் சினிமா... மொழியே அரசியல்!
அமிதாப் பச்சன்vikatan.com - விஷ்ணுராஜ் சௌ : < வடக்கத்திய மாநிலங்கள் தன்னுடைய மொழி குறித்தான நிலைப்பாட்டில் கவனம் செலுத்தாததுதான் ராஜஸ்தானி, மராத்தி, போஜ்புரி ஆகிய மொழிகள் தங்களுக்கான கலாசாரம், அடையாளம், பொருளாதாரம், பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளன.
ருகாலத்தில் நான் ரஜினி ரசிகன்; நான் மட்டுமல்ல 80-களிலும், 90-களிலும் சிறுவர்களாக இருந்த பலரும் ரஜினியின் ரசிகர்களாகத்தான் தங்களுடைய வாழ்வைத் தொடங்கியிருக்க முடியும். தமிழகத்தில் சினிமாவை ரசிக்கின்ற எல்லோருக்குள்ளும் ரஜினியின் மீதான ஈர்ப்பு இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய வசூல்சாதனைகளை எல்லாம் ரஜினி படங்கள் நிறைவேற்றிக் காட்டியிருக்க முடியாது. 1999-ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவைப் பட்டியலிட்டால் அதில் ரஜினியின் `படையப்பா’ படத்தைத் தவிர்த்து விட முடியாது.
`படையப்பா’ படம் வெளியானபோது திரையரங்க வீதிகள் முழுக்க `கட்-அவுட்’கள் வைத்து, ஆண்டுக்கு ஒருமுறை வரும் திருவிழாவைப் போலக் கொண்டாடித் தீர்த்தனர் ரஜினி ரசிகர்கள். தமிழ் சினிமா அதுவரை கண்டிராத லாபத்தை அறுவடை செய்து காட்டியது அந்தத் திரைப்படம்.

அந்தப் படத்தின் மூலம் தன்னுடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மேலும் ஒருபடி உயர்த்திக்கொண்டார் ரஜினிகாந்த். அப்போது அவருக்கு வயது 48.

அடுத்து 20 ஆண்டுகள் ஓடின. 2019-ல் அதாவது இந்த ஆண்டு வெளியானது `பேட்ட’ திரைப்படம். ரஜினியின் வயது 68 ஆக அதிகரித்திருந்ததே தவிர, இருபது ஆண்டுகளில் வேறெதுவும் மாறிவிடவில்லை. சொல்லப்போனால் பன்மடங்கு முன்னேற்றம்தான். அதே திருவிழாக் கோலம்; அதே வசூல் வேட்டைதான். முன்பெல்லாம் தமிழ் சினிமாவின் வசூலில் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்த ரஜினியின் படங்கள், தென்னிந்தியா என்ற எல்லையைக் கடந்து இந்தியா முழுமைக்குமான வசூல் வேட்டையில் இந்தி  சினிமாக்களுடனும் போட்டி போட ஆரம்பித்துவிட்டன. பல்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் தமிழ் சினிமாக்கான வியாபார வாய்ப்புகள் உருவாகின. அவற்றைப் பின்பற்றி, மற்ற நடிகர்களின் படங்களும் பல்வேறு மாநிலங்களிலும் வசூல் வேட்டையைத் தொடங்கின. ரஜினியின் அரசியல் பேச்சுகள் வேண்டுமென்றால் `பவர் ஸ்டார்’ மாதிரி இருக்கலாம். ஆனால், தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, அவர்தான் இப்போதும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். திரையரங்குகளின் வெற்றிக்கதவுகள் எப்போதும் அவருக்காகத் திறந்தே இருக்கின்றன.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பேசும்போது, “நான் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சனின் மிகப்பெரிய ரசிகன்“ எனச் சொல்ல, `யார் அந்த அமிதாப்பச்சன்’ என்ற கேள்விதான் என் முன் முதலில் எழுந்தது. பின்னர்தான், அவர் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்; இந்தி சினிமா மும்பையை மையமாகக் கொண்டது என்ற முரண்பாடுகள் எனக்கு விடையாகக் கிடைத்தது. ஆம், இது முரண்பாடுதான். உண்மையில் மும்பை என்பது மகாராஷ்டிராவின் தலைநகரம் என்பதுதானே வரலாறு. மகாராஷ்டிராவில் தாய்மொழி என்பது மராத்தி. நியாயப்படிப் பார்த்தால் ஒன்று அமிதாப் மராத்திய சினிமாவின் சூப்பார் ஸ்டாராக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்தி சினிமாவின் தலைநகராக உத்தரப்பிரதேசத்தின் லக்னோவோ அல்லது பீகார் மாநிலத்தின் பாட்னாவோ திகழ்ந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் பொருளாதார தலைநகராக விளங்கும் மும்பை, இந்தி சினிமாவுக்கும் தலைநகராக விளங்குவதற்குப் பின்னால்தான் ஒளிந்திருக்கிறது மொழி மீதான அரசியல். தற்போதைய சூழலில் தமிழில் ஆண்டுக்குக் குறைந்தது 150 படங்கள் வெளிவருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் துறையாக தமிழ்த் திரையுலகம் மாறியுள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் இழந்துள்ளது மராத்திய மொழி சினிமா.
இந்தியாவில் அதிகப்படியான மக்கள் பேசக்கூடிய மொழிகளில் மராத்தியும் ஒன்று. அதிகளவில் பணம் புரளக்கூடிய மாநிலமும்கூட. இன்று மட்டுமல்ல, என்றைக்குமே இதே நிலைதான். 16-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பகுதி மராத்திய மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள்தான். ஆனால், இன்று மராத்திய திரைப்படங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக்கூட இழந்துள்ளது அந்த மாநிலம். அதற்காக மராத்தியில் சிறந்த கலைஞர்கள் இல்லை என்பது அர்த்தமல்ல. அங்கு மிகச்சிறந்த கலைநயமிக்க கலைஞர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கான பெரிய அளவிலான வாய்ப்புகளும் பொருளாதாரவெளியும் கிடைக்கப்பெறாமல் போய்விட்டன. இது மராத்திக்கு மட்டுமல்ல, குஜராத்தி, போஜ்பூரி, ராஜஸ்தானி, பெங்காலி போன்ற பல மொழிகளுக்கும் அதே நிலைதான். இந்த மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களின் மொத்த பட்ஜெட், தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு ஆகும் செலவுகளைவிடக் குறைவு.

வங்கமொழியைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் கலையும், கலைஞர்களும் சிறந்து விளங்கிய மொழியாகவும், மேற்குவங்க மாநிலம் அத்தகைய கலைஞர்களைத் தன்னகத்தே கொண்ட மாநிலமாகவும் திகழ்ந்தது. இந்தியாவின் தேசியகீதமே வங்க மொழியில் இயற்றப்பட்டதுதான். இன்னும் குறிப்பாக உலக அரங்கில் இந்திய சினிமாவைப் பற்றிப் பேசுபவர்கள், சத்யஜித்ரேவைத் தவிர்த்து விட்டுப் பேசமுடியாது. அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அப்படிப்பட்ட பெருமைக்குரிய வங்கமொழி சினிமாவின் இன்றைய நிலை என்ன, அவர்களின் வியாபாரம் எத்தனை கோடி, பெங்கால் மொழி சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பன போன்ற கேள்விகளை முன்வைத்தால் ஏமாற்றமே விடைகளாகக் கிடைக்கும்.
ஒருமுறை வடமாநில நண்பர் ஒருவரோடு உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவருடைய தாய்மொழி போஜ்புரி. `உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?’ என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் அமீர் கான் என்பதுதான். போஜ்புரி மக்கள் மட்டுமல்ல, நீங்கள் ஒரு பெங்காலி, ராஜஸ்தானி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி என எந்தமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரிடம் கேட்டாலும் அவர்கள் அனைவருமே சல்மான் கான், அமிதாப், ஷாருக்கான் ஆகியோரில் யாராவது ஒருவரின் பெயரைத்தான் சொல்வார்கள். இதுதான் வட இந்திய சினிமாவின் நிலை.
ஆனால், தென்னிந்தியா அப்படிப்பட்டதல்ல; இங்கு யாரிடமாவது அதே கேள்வி முன்வைக்கப்பட்டால், ரஜினிகாந்த், மம்மூட்டி, சிரஞ்சீவி, ராஜ்குமார் எனப் பல சூப்பர் ஸ்டார்களை அடையாளம் காட்டுவார்கள். அதுவும் தமிழ் சினிமா இவையனைத்திற்கும் ஒருபடிமேல். அதற்குக் காரணம், இங்கு மொழி அரசியலாக்கப்பட்டதுதான். கடந்த ஒரு நூற்றாண்டு கால தமிழக அரசியலிலிருந்து தமிழ் மொழியைப் பிரித்துப்பார்க்க முடியாது. மகாராஷ்டிராவில் சிவசேனா, மராத்தியர்களுக்கான கட்சியாகத்தான் முதலில் உருவானது. ஆனால் பிற்காலத்தில் மத அரசியலைக் கையில் எடுத்த அளவுக்கு மொழி அரசியலை அந்தக் கட்சி கையிலெடுக்கவில்லை. தங்களின் அதிகாரபூர்வ நாளேடான `சாம்னாவை’ மராத்திய மொழியில் 1988-ல் தொடங்கியவர்கள், அடுத்த ஐந்தாண்டிற்குள் அதை இந்தி மொழியிலும் கொண்டுவரத் தொடங்கினர். மும்பை நகரம் இன்று இந்தி சூழ் உலகு போலத்தான். உத்தரப்பிரதேசத்தின் ஒரு தூரப்பிரதேசமாகத்தான் இருக்கிறது.
மும்பை
மொழி என்பது வெறும் மொழி மட்டுமல்ல; மொழிதான் அரசியல். மொழியே அரசியல் ஆயுதமும்கூட. அதை வடக்கு மாநிலங்கள் பெரும்பாலான நேரங்களில் மறந்து விடுகின்றன. நாடாளுமன்றத்திலும், மராத்திய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிரதிநிதிகள் பெரும்பாலும் இந்தியில்தான் பேசுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள்கூட கிட்டத்தட்ட இதையேதான் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தங்களின் தாய்மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோதான் தங்களுடைய உரையை நிகழ்த்துகின்றனர்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று வெங்கையா நாயுடு மாநிலங்களவையின் அவைத் தலைவராக பதவியேற்றார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவரை வரவேற்றுப் பேசினர். தி.மு.கவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “தென்னிந்தியாவிலிருந்து உழைப்பால் இந்த இடத்தை அடைந்திருக்கிறீர்கள்” என வெங்கையா நாயுடுவை வரவேற்று தமிழில் பேச ஆரம்பித்தார். ஆனால், மொழிபெயர்ப்புக் கருவிகள் முறையாக வேலை செய்யாததால், மாநிலங்களவையில் கூச்சல் உருவாக தன்னுடைய பேச்சைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றினார். உடனே, சிலர் கூட்டான தொனியில் `இந்தி போலோ’ என்று உரக்கக் குரல் எழுப்பினர். இதுதான் ஜனநாயகத்தைத் தீர்மானிக்கும் இடமாகவுள்ள நாடாளுமன்றத்தில், மொழிகள் பற்றிய புரிதலாக இருக்கிறது. வடமாநிலங்களைப் பொறுத்தவரை, இன்னும் அதிகாரம் தங்கள் கைகளில் இருப்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறது.
மம்தா பானர்ஜி
`கிழக்கும் தனக்குள்தான் இருக்கிறது’ என வடக்கு நினைத்துக்கொண்டிருக்க, நாடாளுமன்றத் தேர்தலில் நினைத்த வெற்றியைப் பெறாவிட்டாலும் வடக்கை நோக்கி `யார்க்கர் பந்தை’ வீசியிருக்கிறார் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா பங்கேற்றபோது, வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின. அதில் அந்தப் பகுதியில் உள்ள வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. தேர்தல் முடிவடைந்து, அண்மையில் வித்யாசகரின் உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக புதிய சிலையைத் திறந்து வைத்துப் பேசினார் மம்தா பானர்ஜி. “வங்காளம் ஒன்றும் விளையாட்டு பொம்மையல்ல. அதனுடன் விளையாட வேண்டாம். பி.ஜே.பியால் மேற்கு வங்காளத்தில் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு. தங்களுக்கான பாரம்பார்யமும், மொழியும் உண்டு” என்றார்.
அது சரியே. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மொழி தனித்துவமானது மட்டுமல்ல, பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதுமாகும். இந்திய ஜனநாயக அரசியலை, நாட்டின் பன்மைத்துவத்தை நோக்கி நகர்த்தியதில் மொழிக்கு முக்கியப் பங்குள்ளது. ஆம், மக்களவையில் 40 தமிழர்கள், 20 மலையாளிகள், 42 வங்காளிகள், 13 பஞ்சாபிகள் என இந்திய அரசியல் ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியது மொழிகள்தான். இந்தப் பிரதிநிதித்துவம்தான் தங்களின் தேவைகளை ஜனநாயக முறையில் கேட்டுப்பெற வழிகோலின. ஆனாலும் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றினாலும் அவர்கள் ஒற்றைமொழி என்ற நிலைப்பாட்டோடுதான் செயல்படுகிறார்கள். இது இந்தியாவின் அரசியல் களம், சமூகக் களம் இரண்டிலும் அபத்தங்களை ஏற்படுத்தும்.
ஐ.நா.வில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை மாற்ற வேண்டுமென்பது குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “இந்தி அலுவல் மொழிதானே ஒழிய, தேசிய மொழியில்லை” எனச் சொல்ல, “ஒருவேளை தமிழகத்திலிருந்தோ, மேற்கு வங்காளத்தில் இருந்தோ ஒருவர் பிரதமராக வரும்பட்சத்தில் அவர் இந்தியில்தான் பேச வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதாகி விடாதா இந்தச் செயல்?” எனக் கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் எம்.பி சசிதரூர். ஆனால், ‘ஒரு மதம், ஒரு மொழி, ஒரு தேசம்’ என்பவர்கள் அந்த ஒற்றைத்தன்மையில் எப்போதும் தங்கள் மொழியை முதன்மையானதாக்கத்தானே எப்போதும் முயல்வார்கள்.
அண்ணா
சமீபத்தில் பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் நந்தகுமார் சாய், `சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும்’ என அறிவித்திருந்தார். இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு செய்தி, 2011-ம் ஆண்டு மொழிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சம்ஸ்கிருதம் பேசுபவர்கள் 24 ஆயிரம் பேர்தான். ஆனால், எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் சம்ஸ்கிருதமும் ஒன்று. ஆனால், 18 லட்சம் மக்கள் பேசுகின்ற ‘துளு’ இதில் அட்டவணைப்படுத்தப்படவில்லை. இதுதான் அரசியல்.
`இந்தி தெரியாதது என்னுடைய வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது’ என்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். `அப்படியெனில் அவர் உடனே வளர்க்க வேண்டியது இந்தியையா, தமிழையா’ என்பதை அவர்தான் யோசித்து விடைசொல்ல வேண்டும். வடக்கத்திய மாநிலங்கள் தன்னுடைய மொழி குறித்தான நிலைப்பாட்டில் கவனம் செலுத்தாததுதான் ராஜஸ்தானி, மராத்தி, போஜ்புரி ஆகிய மொழிகள் தங்களுக்கான கலாசாரம், அடையாளம், பொருளாதாரம், பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளன. இன்று மீண்டும் மும்மொழிக் கொள்கையைக் கையில் எடுக்கிறது மத்திய அரசு. ஒருவேளை அந்தக் கொள்கை குறித்த பரிந்துரைகள் சட்டமாகும்பட்சத்தில் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் நாளை இந்தி சினிமாக்கள் ஓடலாம். தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகையில் மட்டும் இடம்பெற்றிருக்கும் இந்தி, எதிர்காலத்தில் மளிகைக்கடைகளின் பெயர்ப் பலகைகளிலும் இடம்பெறலாம். அந்த எழுத்துகளைப் பிழையில்லாமல் கலை நயத்துடன் எழுத ஆக்ராவின் அருகிலிருந்து ஒருவர் இரட்டிப்புச் சம்பளத்தில் ஆரல்வாய்மொழிக்கு அழைத்து வரப்படலாம். அவை எல்லாம் சாத்தியம்தான்.
அதில் ஒன்றும் நமக்குக் குற்றமில்லை. நமது எண்ணமெல்லாம் அண்ணா மொழியில் சொல்வதானால், “யாருக்கும் தாழாமலும், யாரையும் தாழ்த்தாமலும், யாருக்கும் அடிமையாகாமலும், யாரையும் அடிமைப்படுத்தாமலும் தமிழன் நல்வாழ்வு வாழ்வதே ஆகும்…!”
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக