புதன், 19 ஜூன், 2019

ட்ரெண்டான ‘தமிழ் வாழ்க’.. தேசிய அளவில் ..


தேசிய அளவில் ட்ரெண்டான ‘தமிழ் வாழ்க’! மின்னம்பலம் :  17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 18) தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றனர். கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, செல்வம் என தமிழக எம்.பி.க்கள் வரிசையாகத் தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். தர்மபுரி எம்.பி செந்தில்குமார் பதவியேற்புக்குக் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார். சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் பதவியேற்கையில், “வாழ்க அம்பேத்கர், பெரியார்... வெல்க ஜனநாயகம், சமத்துவம்” எனக் கூறி முடித்தார்.
ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி பதவியேற்கையில், “தமிழ்நாடே என் தாய்நாடு. தாய்நாட்டின் உரிமை காப்போம்” என்று கூறி முடித்தார். தூத்துக்குடி எம்.பி கனிமொழி பதவியேற்கையில், “வாழ்க தமிழ், வாழ்க பெரியார்” என்று கூறி பதவியேற்றார். தயாநிதி மாறன் பதவியேற்கையில், “வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார்” என்று கூறினார். விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், “வெல்க தமிழ், அம்பேத்கர்” என்று கூறி பதவியேற்றார்.
தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றதாலும், தமிழ் வாழ்க என்ற முழக்கத்தை எழுப்பியதாலும் #தமிழ்_வாழ்க என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர் நெட்டிசன்கள். தொடக்கத்தில் இந்திய அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்த இந்த ஹேஷ்டேக், போகப்போக உலகக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து, தொடர்ந்து ட்ரெண்டிங்கில் நீடித்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக