புதன், 19 ஜூன், 2019

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

மின்னம்பலம் : எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!பிரிக்க முடியாதவர்கள் யார் என்று கேட்டால், எடப்பாடியும் வேலுமணியும் என்று கொங்கு அதிமுகவில் திருவிளையாடல் பாணியில் பதில் சொல்வார்கள். அந்த அளவுக்கு முதல்வரின் நிழலாகத் தமிழகத்திலும் டெல்லியிலும் கோலோச்சி வருபவர் வேலுமணி. அண்மையில் முதல்வர் டெல்லி செல்வதற்கு முன்னோட்டமாக, தங்கமணியும் வேலுமணியும்தான் டெல்லி சென்று ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
அமைச்சர்கள் தங்கமணிக்கும் வேலுமணிக்கும் முதல்வர் அதீத முக்கியத்துவம் தருகிறார் என்று வேறு பல அமைச்சர்களுக்கு இடையே விவாதம் கூட நடந்ததுண்டு. யார் கண்பட்டதோ, முதல்வர் எடப்பாடிக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
கொஞ்சம் விவரமாகவே விசாரித்தோம்.

“மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்ததோடு பெரிதும் எதிர்பார்த்த கொங்கு மண்டலத்தில்கூட பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்பட பல அமைச்சர்களும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, தேர்தலில் பலத்த வெற்றியை கொங்கு மண்டலத்தில் அதிமுக பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
முதல்வரின் நிழல் போல உள்ள அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர்தான் வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘உங்களை நம்பிதான் எல்லா பொறுப்பையும் கொடுத்தேன். ஒரு தொகுதிகூட ஜெயிக்க முடியல. கொங்கு அதிமுக கோட்டையில்லை, அதை உடைச்சாச்சுனு ஸ்டாலின் வந்து பேசிட்டுப் போறாரு. கொங்குல ஏன் நாம இவ்வளவு மோசமா தோத்தோம்? நீங்க சொன்ன ஆளுகளைதானே வேட்பாளரா போட்டோம்?’ என்று சற்றுக் கோபமாகவே கேட்டிருக்கிறார் எடப்பாடி.
இதை எதிர்பார்க்காத வேலுமணி, ‘தமிழ்நாடு ஃபுல்லா தோத்த மாதிரிதான் கொங்குலயும் தோத்திருக்கோம். நாம் நல்லாதான் வேலை செஞ்சோம்’ என்று பதில் சொல்லி வைத்திருக்கிறார். ஆனால், அதில் எடப்பாடிக்குத் திருப்தி இல்லை. மேலும் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். தங்கமணி முதல்வரின் உறவினர் முறை என்பதால் வருத்தம் இருந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இது தொடர்பாக வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார்.
‘நாம் இவருக்காக எவ்வளவு செய்திருக்கோம். நம்மையே கேள்வி கேட்கிறாரே?’ என்ற ஆதங்கம் முதல்வர் - வேலுமணி இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. அது கோட்டையிலும் வெளிப்பட்டது” என்றவர்கள் தொடர்ந்தனர்.
“தண்ணீர் பிரச்சினையால் மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஜூன் 17 திங்கட்கிழமை மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடும் தலைமைச்செயலகத்தில் செய்யப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களைச் சந்தித்தும் அமைச்சர் வேலுமணி குடிநீர் பிரச்சினை குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். இதனால் முதலமைச்சர் தலைமையிலான கூட்டம் இன்றே தேவையா என்ற குழப்பத்தில் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் தலைமைச்செயலகத்தில், போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற குதிரைத் தடை தாண்டுதல் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி ஜூன் 18 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க முதலமைச்சர் வந்தவுடன் தலைமைச் செயலாளர் எங்கே எனக் கேட்டார். அதற்கு அதிகாரிகள் அவர் வரவில்லை என சொன்னார்கள். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவில்லையா எனக் கேட்டார். அவரும் வரவில்லை என்று சொன்னவுடன் முதல்வரின் முகம் இறுகியது. நிகழ்ச்சியே கோவை தொடர்பான நிகழ்ச்சிதான்.
பரிசு பெற்றவர்கள் அனைவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் முறைப்படி கோவை மாவட்ட அமைச்சர் வேலுமணி பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் புறக்கணித்து திடீரென திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் கிணறுகளை ஆராயப் போய்விட்டார். இதை முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவிக்க, ‘இவ்வளவு பேர் வந்து இருக்கோம். நானே கூப்பிட்டிருக்கேன். அப்படியும் அவர் வரலைன்னா என்ன அர்த்தம்?’ என்று மேலும் கோபப்பட்டிருக்கிறார் முதல்வர்.
தகவல் அறிந்து நேற்று மாலை மெரினாவில் ஜெ. நினைவிடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் வந்தபோது வேலுமணியும் சேர்ந்துகொண்டார். ஆனாலும் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ஒரு கோடு விழுந்திருப்பது உண்மை” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக