திங்கள், 10 ஜூன், 2019

புதுவை ஆரோவில் அருகே காட்டுக்குள் டி ஜே பார்டி ஆண்-பெண்கள் நடனம் .. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்

புதுவை அருகே முந்திரி காட்டுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள் அறைகுறை ஆடைகளுடன் நடனம்மாலைமலர் : புதுவை அருகே முந்திரி காட்டுக்குள் மது-போதையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள் அறைகுறை ஆடைகளுடன் நடனம் ஆடினர். போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தனர். சேதராப்பட்டு: புதுவை அருகே தமிழக பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இந்த பகுதியையொட்டி நூற்றுக்கணக்கான ஓட்டல்கள் அமைந்துள்ளன.
ரிசார்ட், குடில்கள், ஹோம்ஸ்டே என பல்வேறு பிரிவுகளில் இந்த ஒட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் சில ஓட்டல்களில் டி.ஜே. எனப்படும் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. அப்போது போதை மருந்து சப்ளை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்டது. மேலும் இதில் பங்கேற்பவர்கள் ஆபாசமாக நடனம் ஆடுவதாகவும் தெரியவந்தது.
இதனால் இனி இது போன்ற நடனங்களை நடத்தக்கூடாது என விழுப்புரம் மாவட்ட போலீசார் எச்சரித்தனர். இதனால் ஓட்டல்களில் இந்த நடனம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இதே போன்ற டி.ஜே. நடன நிகழ்ச்சி ஆலங்குப்பத்தை அடுத்த ராயபுதுப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்தது.
ஆரோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் பங்கேற்க ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதில், பதிவு செய்து ஏராளமான இளைஞர்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் கோவையை சேர்ந்தவர்கள்.
கல்லூரி மாணவ- மாணவிகள், ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

இரவு 11 மணியளவுக்கு இந்த நடன நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக முந்திரி தோப்பில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மின் விளக்கு அலங்காரம், ஆடல்- பாடல் நிகழ்ச்சிக்கான மைக் செட்டுகள் என பிரமாண்டமாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். விருந்து நிகழ்ச்சியும் நடந்தது.
இத்துடன் மது- போதை மருந்துகளும் சப்ளை செய்யப்பட்டன. நள்ளிரவு வரை நடனம் நீடித்தது. பலர் அறைகுறை ஆடைகளுடன் ஆடினார்கள்.
இந்த நடன நிகழ்ச்சி நடக்கும் தகவல் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தெரியவந்தது.
உடனே அவர் 25-க்கும் மேற்பட்ட போலீசாருடன் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தார். போலீசாரை பார்த்ததும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தவர்களில் பலர் ஓடி விட்டனர். மற்றவர்களை மடக்கி பிடித்தார்கள்.
அவர்கள் அனைவரையும் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் இளம் பெண்களையும், வெளிநாட்டினரையும் எச்சரித்து அனுப்பினார்கள்.
போதை மருந்து பயன் படுத்திய இளைஞர்கள் 15 பேரை கைது செய்தனர். சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தலைமையில் பலர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் போதை மருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக