புதன், 19 ஜூன், 2019

பஸ் டே கொண்டாடிய 9 மாணவர்கள் இடைநிறுத்தம் .. பச்சையப்பன் கல்லூரி ..


மாலைமலர் : சென்னை கீழ்ப்பாக்கத்தில் பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை: கோடை
விடுமுறைக்கு பின்னர் சென்னையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கடந்த 17ந்தேதி திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறப்பின் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால் அதை தடுப்பதற்காக முக்கிய கல்லூரி வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் போலீஸ் எச்சரிக்கையை மீறி கல்லூரி மாணவர்கள் பஸ்களின் மேற்கூரை மீது ஏறி பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம்வரை, ஐ.சி.எப்.பில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் வழித்தடம் என மாநகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
> ஒரு கட்டத்தில் பேருந்தின் டிரைவர் திடீரென பிரேக் போட, மேற்கூரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டது. அப்போதும் மாணவர்கள் தங்கள் கொண்டாட்டத்தை தொடர்ந்தனர்.

இவ்வாறு ரகளை செய்த 40 மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். முதல் நாள் என்பதால் அவர்களை கடுமையாக எச்சரித்த போலீசார் மாணவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர். சில மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்களை கொண்டாட்டத்துக்கு தூண்டி விட்டது முன்னாள் மாணவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களையும் மடக்கிப் பிடித்த போலீசார் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்தனர்.

பொதுமக்களுக்கோ, பயணிகளுக்கோ இடையூறு செய்யும் வகையில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரித்தனர்.

இந்நிலையில், பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி கல்லூரிக்குள் நுழையக் கூடாது என 9 மாணவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக