புதன், 19 ஜூன், 2019

புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமை?’

ஐம்பொன் சிலைஐம்பொன் சிலைவெங்கடேஷ்.ஆர்- மணிமாறன்.இரா vikatan : புதுக்கோட்டை மாவட்டம், பேரையூர் கிராமத்தில் மரத்தை வெட்டி அகற்றும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையான 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் முத்தையா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை ஜேசிபி மூலம் தொழிலாளர்கள் வெட்டி அகற்றிக்கொண்டு இருந்தனர். மரத்தை வெட்டிய பகுதியைச் சமப்படுத்துவதற்காக, அதன் அருகே  பள்ளம் தோண்டியபோது,அங்கு,ஐம்பொன் சிலை ஒன்று வெளிப்பட்டது. அதைப் பார்த்த தொழிலாளர்கள் சிலையைத் தோண்டி எடுத்தனர். தொடர்ந்து, அருகருகே, ஒவ்வொன்றாக ஐம்பொன் சிலைகள் வெளிப்பட்டன.
இந்தத் தகவல் அந்தப் பகுதியில் காட்டுத் தீப்போல் பரவியதால், கிராம மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். அடுத்தடுத்து சிலைகள் தென்பட்டதால், பிரமித்த கிராம மக்கள் வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.


சிலைகள்இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம மக்கள் உதவியுடன் ஐம்பொன் சிலைகளைப் பத்திரமாக மீட்டனர். சிலைகள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதில் 3 அம்மன் சிலைகள், சிவன்-பார்வதி, விநாயகர் சிலை உள்ளிட்ட 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. பீடம் ஒன்றும் திரிசூலம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. மீட்டச் சிலைகள் அனைத்தையும் திருமயம் தாசில்தார் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் எடுத்துச் சென்று திருமயம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஐம்பொன் சிலை
ஐம்பொன் சிலைஅருகிலேயே 1,000 ஆண்டுகள் பழைமையான நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் என்பதால், தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே 17 சிலைகள் மீட்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐம்பொன் சிலைகள் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளாக இருக்கும் எனத் தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி கிராம மக்கள் கூறும்போது, “கண்டெடுத்த சிலைகள் அனைத்தும்  நாகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். பாதுகாப்புக்காக, அனைத்தையும் முன்னோர்கள் மண்ணுக்குள் மறைத்து வைத்திருப்பார்கள். மீட்ட அனைத்து சிலைகளையும், நாங்கள் வழிபடும் வகையில் நாகநாத சுவாமி கோயிலுக்கு வழங்க வேண்டும்” என்றனர்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமையான 7 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக