ஞாயிறு, 26 மே, 2019

திமுக மக்களவைக் குழு பொறுப்பாளர்கள் நியமனம்!

திமுக மக்களவைக் குழு பொறுப்பாளர்கள் நியமனம்!
மின்னம்பலம் : திமுக மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, கொறடாவாக ஆ.ராசா, துணைத் தலைவராக கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தேனி தொகுதியை தவிர மீதமுள்ள அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியினரையும் சேர்த்து திமுக 23 எம்.பி.க்கள் பெற்று இந்திய அளவில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திமுகவின் மக்களவை குழுத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக நேற்று மதியம் 1 மணிப் பதிப்பில் ‘திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்? என்று வெளியிட்ட செய்தியில், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரின் பெயர்கள் முதல் கட்டமாக பேசப்படுவதாகவும், ஆ.ராசா, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோரும் அந்த பட்டியலில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று (மே 25) மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள முரசொலி மாறன் அரங்கில் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக மக்களவைக் குழு பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி, மக்களவைக் குழுவின் திமுக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வுசெய்யப்பட்டனர். மக்களவைக் குழு பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை கனிமொழி வகித்துவந்த மாநிலங்களவை குழு திமுக தலைவர் பதவி திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “‘மக்களே நம் எஜமானர்கள் - மக்களே நமது மகேசர்கள்’ என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிட, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் உறுதியெடுத்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் வடசென்னை-கலாநிதி, தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை-தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம்-செல்வம், அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், தருமபுரி-செந்தில்குமார், திருவண்ணாமலை-சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி-கவுதமசிகாமணி, சேலம்-எஸ்.ஆர்.பார்த்திபன், நீலகிரி-ஆ.ராசா, பொள்ளாச்சி-சண்முகசுந்தரம், திண்டுக்கல்-வேலுச்சாமி, கடலூர்- ரமேஷ், மயிலாடுதுறை-ராமலிங்கம், தஞ்சாவூர்-எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி-கனிமொழி, தென்காசி -தனுஷ் எம்.குமார், திருநெல்வேலி-ஞானதிரவியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக