செவ்வாய், 7 மே, 2019

சந்திரசேகர ராவை சந்திக்க திமுக மறுப்பு ...

தி.மு.க., திமுக, ஸ்டாலின், டி.ஆர்.எஸ்., சந்திரசேகர ராவ், கவிதாதினமலர் : ஐதராபாத்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இடையிலான சந்திப்பிற்கான நேரம் இன்னும் முடிவாகவில்லை. இதனை சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவுக்கு, ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல்களே பாக்கி உள்ளன. அதுவும் வரும் 19ம் தேதியுடன் முடிந்து விடும். வரும், 23ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், 'தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ., கூட்டணி, காங்., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மாநில கட்சிகளை ஒருங்கிணைந்து, ஆட்சி அமைக்கலாம்' என்ற ஆசை, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் இந்த முயற்சியை அவர் துவங்கினாலும், பல கட்சிகள், அவருக்கு ஆதரவு தரவில்லை. இதனால், தற்காலிகமாக அந்த முயற்சியை ஒத்தி வைத்திருந்த, சந்திரசேக ராவ், தற்போது, மீண்டும் துவங்கியுள்ளார். இதன் ஒரு கட்டமாக, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயனை, நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக முதல்வர் விஜயன் கூறுகையில், தேசிய அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். சந்திரசேகர ராவ் கருத்துப்படி, இரண்டு அணிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. இதனால், மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகள் அங்கம் வகிக்கும். பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை என்றார்.

இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க சந்திரசேகர ராவ் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பிற்கு திமுக தரப்பு அனுமதி தரவில்லை எனக்கூறப்படுகிறது.
இது குறித்து சந்திரசேகர ராவ் மகளும், டி.ஆர்.எஸ்., கட்சி எம்.பி.,யுமான கவிதா கூறுகையில், ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் இடையிலான சந்திப்பிற்கான நேரம் இன்னும் முடிவாகவில்லை என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக