வெள்ளி, 31 மே, 2019

தங்கத்தமிழ் செல்வனுக்கு அதிமுகவில் ராஜ்யசபா பதவி.. தூது தூது தூது

ராஜ்யசபா: தங்கத்துக்கு  அதிமுகவின் புதிய ஆஃபர்!மின்னம்பலம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனை மையமாக வைத்து அடுத்த கட்ட பரபரப்பு பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சிலமுறை தங்க தமிழ்ச்செல்வன் தினகரனிடம் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவுக்குச் செல்கிறார், அதிமுகவுக்குச் செல்கிறார் என்றெல்லாம் தகவல்கள் கிளம்ப அதை அவ்வப்போது மறுத்து வந்திருக்கிறார் தங்கம்.
இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி வாய்ப்பை இழந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் பல்வேறு தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

தேர்தல் தோல்வியால் விரக்தி அடைந்த தங்க தமிழ்செல்வனை அவரது குடும்பத்தினரும், ‘எத்தனை நாளைக்குத்தான் இப்படி தினகரன் பின்னாடியே இருந்து அரசியல் வாழ்க்கையை வீணாக்கப் போறீங்க?’ என்று கேட்டதால் மிகவும் வேதனைக்கு ஆளாகிவிட்டார் தங்கம்.
“என்னை கிராமங்களில் இன்னமும் அதிமுகக்காரனாகவே தான் நினைக்கிறார்கள். அதனால இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டோம்னு என்கிட்டயே சொல்றாங்க” என்று பேட்டிகளில் கூறினார்.
இந்த நிலையில், “தினகரனின் வலது கையாகவும், இடது கையாகவும் இருப்பது வெற்றிவேலும், தங்க தமிழ்ச்செல்வனும்தான். இவர்களில் ஒரு கையை அதிமுகவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும்” என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.
அதன் விளைவாக கடந்த நான்கைந்து நாட்களாக அதிமுகவிலிருந்து குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தே தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசி வருகிறார்கள்.
”இனிமேலும் அங்க இருக்காதீங்க. அதிமுகவுக்கு வந்துடுங்க. தேனி மாவட்டத்தில் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் நாங்க பார்த்துக்கிறோம். ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட உங்களுக்கு அதே அளவு வாய்ப்பா ராஜ்யசபா எம்.பி கூட வழங்க தயாராக இருக்கோம். இதுக்கு பன்னீரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். அவரை சமாளித்துச் சம்மதிக்க வைக்கிறோம். அதனால நீங்க அதிமுகவுக்கு வந்துடுங்க” என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் தங்க தமிழ்செல்வன் உடன் கடந்த நான்கைந்து நாட்களாகவே பேசி வருகிறார்கள்.

இதன் ஒரு குறியீடாகத்தான் தஞ்சாவூரில் அமமுக பொருளாளரான ரங்கசாமி இல்ல திருமணத்தில்கூட கலந்துகொள்ளாமல் தங்க தமிழ்ச்செல்வன் சென்னையிலேயே தங்கியிருக்கிறார். விஷயம் அரசல்புரசலாக தெரிந்து வெற்றிவேலை தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசச் சொல்லியிருக்கிறார் தினகரன்.
வெற்றிவேல் இது பற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசும்போது, “அதிமுகவுலேர்ந்து கூப்பிடாம இருப்பாங்களா? இப்ப வரைக்கும் கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, நாமதானே முடிவு பண்ணணும்” என்று பதில் சொல்லி நழுவி வருகிறாராம் தங்க தமிழ்ச்செல்வன்.
ஆக, ராஜ்யசபா உறுப்பினர் என்ற அதிரடி ஆஃபரை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தங்க தமிழ்ச்செல்வனுக்காகக் காத்திருக்கிறது அதிமுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக