வெள்ளி, 10 மே, 2019

குர்ஆனின்.. பழிவாங்குதல் குறித்த நிலைப்பாடு மிகவும் ஆபத்தானவை.... ?

Imam Adhnan : குர்ஆன் கொண்டிருக்கும் பழிவாங்குதல் குறித்த நிலைப்பாடு மிகவும் ஆபத்தானவை. அது பழிவாங்குவதை விசுவாசம் கொண்டவர்கள் மீது கடமையாகவே முன்வைக்கிறது. நோன்பை முஸ்லிம்கள் மீது கடமையாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அதே சொல்லை (குதிப), அதே நெரெடிவ் ஃபோமை இதற்கும் அல்குர்ஆன் பயன்படுத்தியிருக்கும்.
அது போதாதென்று, பழிவாங்குவதில் வாழ்வு இருக்கிறதென்றும் அதனை சிந்திப்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்றும் தொடர்ந்தும் வசனங்கள் அடுக்கப்படுவதை அவதானிக்கலாம்.
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى...
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- (உங்களைச் சார்ந்த) சுதந்திரமுடையவன் (கொல்லப்பட்டால் கொலை செய்தவர்களின்) சுதந்திரமுடையவனும்; (அப்படியே உங்களின்) அடிமைக்கு (அவர்களின்)அடிமை; பெண்ணுக்குப் பெண் என்பதாகவே பழிதீர்க்கப்பட வேண்டும். இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏
2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
*** ***
பழிவாங்குதலை முன்வைக்கின்ற, நேர்மையாகப் பழிவாங்கச் சொல்கின்ற இன்னும் பலவசனங்கள் இருக்கவே செய்கின்றன.
இந்தப் பழிவாங்குதல் குறித்து, அதில் இருக்கும் வாழ்வுகுறித்து குர்ஆன்மீது பற்றுக் கொண்ட தோழமைகள் விபரிப்பார்களென எதிர்பார்க்கவே செய்கிறேன். அவர்களுடன் தொடர்ந்தும் அழகிய முறையில் உரையாடவே விரும்புகிறேன்.
எது எப்படி இருந்தாலும் அல்குர்ஆன் கொண்டிருக்கும் வன்முறையான வசனங்கள் மீதான எடிடிங் எப்பொழுதும் தேவையென்றே கருதுகிறேன்.
பழிவாங்குதல் குறித்த ஒரு எடிடட் வேர்சனை தயார் செய்திருக்கிறேன். நீங்களும் அதனை வாசிக்கலாம்.
يأيها الذين آمنوا خرمت عليكم القصاص في القتلي 0 وانه سبيل الظلم 0 ولا تتبعوا سبل الظالمين 0 ومن الناس من يظنون انلهم حياة في القصاص 0 كلا لن تجدوا فيه الا خسارة 0
பொருள் விளக்கம்: விசுவாசம் கொண்டவர்களே! உங்கள் மீது கொலை விடயத்தில் பழிவாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அது அநியாய அட்டூழிய வழிமுறைதான். நீங்கள் அநியாயக்காரர்களின் பாதைகளைப் பின்பற்றாதீர்கள். மனிதர்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; பழிவாங்குவதில் வாழ்வு இருக்கிறதென்று. நிச்சயமாக அவர்கள் பழைவாங்குவதில் நஸ்டத்தை (இழப்பை) அன்றி வேறெதையும் அடைந்துவிடப் போவதில்லை.

musthafa.kamal.: முன்பொரு முறை சங்கப் பரிவார அமைப்புகளில் ஒன்றான வி.ஹெச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா குர்ஆனில் உள்ள சில வசனங்களை நீக்க வேண்டும் என்ற போது கொந்தளித்துப் போன இந்திய முஸ்லிம்கள் அவருக்கு பதில் சொல்லும் விதமாக திருக் குர்ஆன் மாநாடுகளை ஆங்காங்கே நடத்தியது நினைவிருக்கலாம்.
இலங்கையில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகள், நூற்றுக் கணக்கான உயிர்ப்பலிகளின் பின்னணியில் Imam Adhnan என்ற இலங்கைக் கவிஞரிடமிருந்து அதே கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. "குர்ஆன் எடிட் செய்யப்பட வேண்டும்" என்று அவர் கூறத் தொடங்கியுள்ளார்.
இந்தப் பின்னணியில், குர்ஆனின் சில வசனங்களின் மொழியாக்கங்கள் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளதா? என்ற கேள்வியும், மீண்டும் மீண்டும் இப்பிரச்சினை எழுப்பப் படுவதற்கான அடிப்படை என்ன? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
அருள் மறை குர்ஆனின் வசனங்களுக்கு பொருள்கோடல் செய்வதில் நவீன கால சமூகச் சூழல்களை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம்.
நபித்தோழர்கள் குர்ஆனை விளங்கிய விதத்தில் நாமும் விளங்குவதற்கு அவர்களின் காலகட்ட அரசியல், சமூகச் சூழ்நிலைகளை கருத்தில் கொள்வது எவ்வளவு அவசியமோ, அதற்கு இணையான முக்கியத்துவம் இதற்கு இருக்கிறது.
குஃப்ர், ஜினா போன்றவற்றுக்கு பொத்தாம் பொதுவாக நாம் அர்த்தம் செய்யும் வழக்கம், இன்றைய சூழலில் பிராந்திய கலவரங்களில் தொடங்கி அண்டை தேசத்தின் பெரும் பீதிக்கும் காரணமாகி நிற்பதைப் பார்க்கிறோம்.
குர்ஆனின் அரபி மூல வசனங்கள், நயமான பொருள்கோடல்களுக்கு இடமளிப்பவை.
ஷைகுத் தஃப்ஸீர் O.M. அப்துல் காதிர் பாகவி தமிழாக்கத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட "திருக்குர்ஆன் தமிழுரை" யில் அத்தகைய நயமான மொழியாக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்கப் பட்டுள்ளது.
உடல் ஊனமுற்றவர் என்ற வார்த்தையை "மாற்றுத் திறனாளி" என்று முத்தமிழறிஞர் கலைஞர் கூறத் தொடங்கிய போது எல்லோரும் அவ்வாறே கூறத் தொடங்கியது போன்றதே இது. அரவாணி என்பதை திருநங்கை, திருநம்பி என்று சமூகம் திருத்திக் கொள்ளவில்லையா!?
தவிர, முஸ்லிமல்லாத அனைவரையும் காஃபிர் எனக்கூற குர்ஆன் வசனங்களே அனுமதிக்காது.
اِنَّهٗ لَا يَايْــٴَــسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ‏
"நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்"
(அல்குர்ஆன் : 12:87)
குர்ஆனின் முதன்மையாக தமிழாக்கம் செய்தவரான அ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களின் இந்த மொழிபெயர்ப்பில் காஃபிர் என்பதற்கு நன்றி கெட்ட, நம்பிக்கையற்ற என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
"அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்தவர்" என்பதன் மூலம் அத்தகைய அனைவருக்கும் பொதுவான சொல்லாடலாக காஃபிர் என்பதைக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். "அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்த" முஸ்லிம்களுக்கும் அது பொருந்தும்.
பல்சமயச் சூழலில் இஸ்லாமிய சிந்தனைகளை அணுகும் விதத்தை அல்லாமா அபுல் ஹஸன் அலீ நத்வீ (ரஹ்) அவர்களின் பல்வேறு நூல்களில் காண முடியும்.
குர்ஆன் வகுப்புகள், விளக்கவுரைகள், சொற்பொழிவுகளில் நமது வார்த்தையாடல்களில் மிகுந்த கவனம் தேவை.
இனியும் நாம் முரட்டுவாதங்களுக்கும், தடித்த சொல்லாடல்களுக்கும் இடமளிக்க அவகாசமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக