செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் இருக்கு... அங்கு ஏன் சோதனை நடத்தல... ஸ்டாலின் சரமாரி கேள்வி

Crores of rupees In Tamilisais Home; Why did not raid there? DMK president MK Stalin questioned
tamil.oneindia.com - alagesan : சென்னை: தூத்துக்குடி பாஜக வேட்பாளரான தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் வைத்துள்ளனர்; அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, பள்ளி மற்றும் சிமெண்ட் குடோன்களில் வருமாண வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த அதிரடியாக தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. வீடு, அலுவலக கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு சோதனை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரின் தகவலின் பேரில் சோதனை என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து மற்றும் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை குறித்து பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வேலூரில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றார்.
தேனியில் ஓபிஎஸ் மகன் பணப்பட்டுவாடா செய்கிறார் என்று கூறிய ஸ்டாலின், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது கனிமொழி வீட்டில் மட்டும் வருமானவரி சோதனை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.
வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை என்றார். வேண்டுமென்றே திட்டமிட்டு, திமுக மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக