ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

திமுக ஆதரவை நாடிய பாஜக .. அடியோடு மறுத்த திமுக ..

டிஜிட்டல் திண்ணை: திமுகவின் ஆதரவைக் கேட்கும் பாஜக-   தொடங்கியது கார்ப்பரேட் ஆட்டம்!மின்னம்பலம்: “கடந்த சில தினங்களாகவே டெல்லி பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு தகவல் அரசல் புரசலாக அலைந்துகொண்டிருந்தது. அதாவது 2019 மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், பாஜக அரசு இதேபோன்ற மெஜாரிட்டி பலத்துடன் அமைய வாய்ப்பில்லை. முக்கியமான மாநிலக் கட்சிகள்தான் இந்த தேர்தலில் அதிக பலம் பெறப் போகின்றன. எனவே பாஜகவுக்கு பெரும்பான்மைக்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தேவைப்படும் இடங்களை மாநிலக் கட்சிகளிடம் இருந்துதான் பெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போதே தொடங்கிவிட்டன என்பதுதான் அந்த செய்தி.
பொதுவாகவே டெல்லி ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டு விவகாரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் பாஜகவுக்கான மெஜாரிட்டி வேட்டையில் தமிழ்நாடும் டிக் செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை பேச்சோடு டெல்லி பத்திரிகையாளர்கள் விட்டுவிட்டனர். ஆனால், தி வயர் இணைய இதழைச் சேர்ந்த பத்திரிகையாளரான ரோஹினி சிங், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் திமுகவை பாஜவுக்காக தொழிலதிபர்கள் அணுகி வருகிறார்கள் என்ற செய்தியை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி ரோஹினி சிங் தனது ட்விட்டரில் காலை 9 மணிக்கு ஒரு முக்கியமான செய்தியைப் பதிவிட்டிருக்கிறார். ‘தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு மெஜாரிட்டி குறைந்தால், பாஜக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்க முன் வரவேண்டும் என்று மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் திமுகவை அணுகியிருக்கிறார்’ என்பதுதான் அந்த ட்விட். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே பத்திரிகையாளர் இதே விவகாரத்தில் இன்னொரு ட்விட் போட்டார். ‘பாஜக ஆட்சி அமைக்க தங்களிடம் தொழிலதிபர் ஆதரவு கேட்டபோது அதை திமுக மென்மையாக மறுத்துவிட்டது என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமைக்கும் திமுக தெரியப்படுத்திவிட்டது’ என்று பதிவு செய்திருக்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.

கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ட்விட்டர் பதிவில், ‘திமுகவை மட்டுமல்ல இன்னும் ஒரு முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரையும் தொழிலதிபர் ஒருவர் அணுகி பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கோரியிருக்கிறார். ஆட்சி அமைப்பதில் காப்பரேட்டுகளின் பங்கு தொடர்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ரோஹினி சிங்.
திமுகவைக் குறிப்பிட்டு அவர் முதல் ட்விட் பதிவிட்டவுடனேயே திமுகவில் இருந்து சிலர் அவரைத் தொடர்புகொண்டு, ‘அவர்கள் அணுகியது உண்மைதான். ஆனால் நாங்கள் உறுதியாக மறுத்துவிட்டோம்’ என்று சொன்னதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் சொல்கின்றனர்.
தற்போதைய பாஜக ஆட்சி என்பது கார்ப்பரேட்டுகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. எனவே மீண்டும் இத்தகைய ஆட்சி தொடரவே அவர்கள் விரும்புகிறார்கள். ஒருவேளை பாஜகவுக்கு மெஜாரிட்டிக்கு இடங்கள் குறைந்து தொங்கு பார்லிமெண்ட் அமைந்தால் மீண்டும் பாஜகவே ஆட்சியில் தொடர்வதைதான் தொழிலதிபர்கள் விரும்புகிறார்கள். எனவே அவர்கள் தங்கள் சுயநலனுக்காக மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார்கள். அதில் ஒரு முயற்சிதான் திமுகவோடு பேசியதும்.
கடந்த பிப்ரவரி மாதமே மோடிக்கு மிக நெருக்கமான முகேஷ் அம்பானி திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை வந்து வீடு தேடிச் சென்று சந்தித்தார். அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ் என் எல் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனத்தை லாபகரமாக நடத்தி, அதில் மோடியின் புகைப்படத்தையும் விளம்பரமாக வெளியிட்டவர்தான் முகேஷ் அம்பானி. இவர் தன் மகன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்டாலினை சந்தித்தார் என்று சொல்லப்பட்டது. அதற்கு முன் ஜனவரி 25 ஆம் தேதியே ரத்தன் டாட்டா ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். எப்போதுமே தொழிலதிபர்களின் சந்திப்புகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கும். இந்த வகையில் அந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாகவே, இப்போது நடைபெறும் கார்ப்பரேட் ஆட்டம் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
தவிர அதானி குழுமத்துக்கும் தமிழகத்தில் நிறைய தொழில்கள் நடந்து வருகின்றன. வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக விண்ணப்பித்திருக்கிறது. தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் நிலையில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும். இந்தப் பின்னணியில் திமுக மட்டுமல்ல, வேறு சில மாநிலக் கட்சிகளோடும், பாஜகவுக்காக தொழிலதிபர்களின் கார்ப்பரேட் பிரதிநிதிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அமையும்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
இந்த மெசேஜை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் ஒரு தகவலை டைப் செய்தது.
“பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 13) தேனியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி பிரதமர் மேடைக்கு வரும் வழியில், ஓ.பன்னீர் தன் மகனும் வேட்பாளருமான ரவீந்திரநாத்தோடும், தன் பேரனோடும் பூங்கொத்து வைத்துக்கொண்டு நின்றிருக்கிறார். மோடி மேடையேறுவதற்கு முன்பே தன் மகனையும், பேரனையும் அவருக்கு அறிமுகப்படுத்திட வேண்டும் என்ற ஆவலில்தான் பன்னீர் அங்கே நின்றிருந்தார்
அப்போது பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர், ‘இவர் யார்?’ என்று கேட்க, ‘மை கிரேண்ட் சன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர். பிரதமர் வரும் வழியில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நபர்கள்தான் இருக்க வேண்டும் என்பதால் பேரனை வெளியே அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். மேலும், வேட்பாளரான ரவீந்திரநாத்தும் அங்கே நிற்க, ‘ஏன் இங்கே நிற்கிறீர்கள்? நீங்கள் மேடையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் வெளியே சென்றுவிட வேண்டும். இங்கே நிற்கக் கூடாது’ என்று கறாராக சொல்லிவிட்டார்கள். இதனால் ஓ.பன்னீரின் பேரன் வெளியே போக, மகன் மேடைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக