வெள்ளி, 12 ஏப்ரல், 2019

திமுக நெருக்கடி .. பூத் செலவுக்குகூட தட்டுப்பாடு .. அதிமுக வட்டாரத்தில் வெள்ளம் போல பாய்கிறது

டிஜிட்டல் திண்ணை: பண விநியோகம்: தடுமாறும் திமுக... தாறுமாறு அதிமுக!மின்னம்பலம் : “மக்களவை மினி சட்டமன்றத் தேர்தல்களின் கடைசி நான்கு நாள் களத்தில் பரபரப்பும் பதற்றமும் பற்றிக் கொண்டிருக்கிறது. பணப்பட்டுவாடா விசயத்தில் ஆளுங்கட்சி பாய்கிறது என்றும், திமுக சுணங்குகிறது என்றும் டிஜிட்டல் திண்ணை பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர்கள் பூத் செலவுக்கு கூட பணம் கொடுக்கக் கூடாது என்ற நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் முதல் தவணையாக தலா 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து முடித்துவிட்டது. துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், சுவர் விளம்பரம் எழுதுதல் போன்றவற்றுக்காக கொடுக்கப்படும் இந்த முதல் கட்ட விநியோகத்தை அதிமுக, அமமுக ஆகியவையும் 3 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ஏற்கனவே கொடுத்து முடித்துவிட்டன. இரண்டாவது ரவுண்டாக வேட்பாளர்கள் வரவேற்பு உள்ளிட்ட பணிகளுக்காக அதிமுக 3 ஆயிரம் ரூபாயைக் கொடுத்திருக்கிறது.

திமுகவோ இரண்டாவது ரவுண்டு பூத் கமிட்டி செலவுக்காக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறது. தினகரனும் இரண்டாவது ரவுண்டு தொகை 5 ஆயிரத்தை அனைத்து பூத்களுக்கும் கொடுத்துவிட்டார். இப்போது மூன்றாவது ரவுண்டு பூத் பணம் விநியோகிக்க வேண்டிய காலம். அதை தினகரன் மட்டுமே தலா 5 ஆயிரம் என்ற வீதத்தில் டெலிவரி செய்திருக்கிறார். திமுகவும், அதிமுகவும் இன்னும் மூன்றாவது ரவுண்டு பூத் பணத்தை கொடுக்கவில்லை. திமுக விநியோகிக்கத் தயாராக இருந்தது.
ஆனால் திடீரென வந்த மேலிட உத்தரவை அடுத்து சில நாட்களாகவே எதிர்க்கட்சி வேட்பாளர்கள், வேட்பாளர்களுக்கு நெருக்கமான கட்சிப் புள்ளிகள் என யாரும் பணம் கொண்டு போகாதபடி தடுக்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை எதிர்த்து திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுகவின் இரு மாசெக்களான அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் தங்களது மாவட்டப் பகுதிகளில் பூத் கமிட்டி தொகை முதல் தவணை 5ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார்கள். அதையடுத்து சில இடங்களில் மட்டுமே இரண்டாவது தவணை தொகை கொடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகளுக்கான பூத் செலவுத் தொகையை எடுத்துச் செல்வதற்குக் கூட முடியாமல் கடுமையான கண்காணிப்பு வளையம் திமுக நிர்வாகிகளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. இதைக் குறிப்பிட்டுச் சொல்லி, இதே போன்ற நெருக்கடி தமிழகத்தின் பல இடங்களில் செய்யப்படுகிறது. பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் மீண்டும் வேகமெடுத்துவிட்டார்கள். இதனால் திமுகவினரால் பணத்தை நகர்த்தவே முடியவில்லையாம். ஓட்டுக்கு காசு பற்றி கூட அப்புறம் பேசலாம், கட்சியினருக்கு கொடுக்க வேண்டிய பூத் பணத்தைக் கூட இன்னும் கொண்டு போய் சேர்க்க முடியவில்லையே’ என்று திமுக நிர்வாகிகள் கூறிவருகிறார்கள்.
திமுக பக்கம் இப்படியென்றால் அதிமுக பக்கம் அதுவும் குறிப்பாக சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் பணம் ஆறாகப் பாயத் தொடங்கியிருக்கிறது. சாத்தூர்- கோவில்பட்டி ஹைரோடு மேற்குப் பக்கம் இருப்பது சாத்தூர் தொகுதி. ஹைரோட்டின் கிழக்குப் பக்கம் இருப்பது அருப்புக்கோட்டை தொகுதி. இதில் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஏழாயிரம் பண்ணை, நல்லிசத்திரம், வெங்கடாசலபுரம், மீனாட்சிபுரம், துப்புலாபுரம் வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகாலையில் சில டூவீலர்கள் வருகின்றன. இப்பகுதிகளில் பெரும்பாலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பட்டாசு ஆலைகளில் கூலி வேலை செய்யும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களின் பகுதியில் இருக்கும் அதிமுக பொறுப்பாளர்கள் 4 பேர், வெளியூரில் இருந்து நான்கு பேர் ஆக மொத்தம் எட்டு பேர் வருகிறார்கள். எந்தெந்த வீட்டுக்கு கொடுக்கலாம், எந்தெந்த வீடுகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று லோக்கல் பொறுப்பாளர்களுக்குத் தெரியும். மேலும் எந்த வீட்டில் எத்தனை ஓட்டு என்ற விவரங்களும் அவர்களுக்கு அத்துப்படி அதன்படியே கணக்கெடுத்து மொய்கவரில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் அதிகாலையிலேயே கிளம்பிவிடுவார்கள். இதனால் அதிகாலை 5.30 மணிக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் வீதம், எத்தனை ஓட்டுகள் இருக்கிறதோ அவ்வளவு தொகையை அதிமுகவினர் சத்தமின்றி டெலிவரி செய்து முடித்துவிட்டனர். இதேபோல பெத்துரெட்டிப்பட்டி என்ற ஊரில் அதிகாலையில் பண விநியோகம் நடந்துகொண்டிருந்தபோது திமுகவினர் சிலர் கண்டுபிடித்து உடனடியாக பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் 6 மணிக்குள் காரியத்தை முடித்துவிட்டு டூவிலர் பறக்கும் படையினர் சிட்டாக பறந்துவிட்டனராம்.
ஆக திமுக கூட்டணியினர் பூத் பணம் கொடுப்பதற்குக் கூட கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ஆளுங்கட்சியினர் வாக்குகளுக்கான பணத்தையே பல தொகுதிகளில் விநியோகித்து முடித்துவிட்டனர் என்பதுதான் தற்போதைய நிலைமை” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக