வெள்ளி, 12 ஏப்ரல், 2019

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது: ராகுல்

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது: ராகுல்மின்னம்பலம் : நீட் தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பதை தமிழகத்தின் முடிவுக்கே விட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது ஏன் என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விளக்கியுள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தத் தேர்தல் என்பது 2 கொள்கை உடையவர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் என்று இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஒற்றை நோக்கம், ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம் இருக்க வேண்டும் என கூறுகிறது. ஒரே கருத்துதான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று கூறுகிறது. மற்றொருபக்கத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி பல்வேறு பார்வைகள் இருக்கிறது. பல்வேறு மொழிகள், சிந்தனைகள் இந்த நாட்டில் இருக்கிறது என்று சொல்கிறோம்”என்றார்.

நாக்பூரிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, “தமிழகத்தின் தலையெழுத்தை பிரதமர் அலுவலகம்தான் நிர்ணயிக்க வேண்டுமென்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று நம்புகிறோம். இந்தியாவை வலிமை மிக்க நாடாக்குவதில் தமிழர்களின் குரல் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் நாங்கள் இந்தக் கூட்டணியில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
தமிழ் மட்டுமல்ல, இந்தியாவின் பலதரப்பட்ட மொழிகளும், அம்மக்களின் குரல்களும் பாதுகாக்கப்படுவதுதான் நல்ல இந்தியாவுக்கு எடுத்துக்காட்டு என்ற ராகுல் காந்தி, ”பாஜகவைப் போல எங்கள் தேர்தல் அறிக்கை ஒரு இருண்ட அறையில் உருவாக்கப்பட்டதல்ல. அனைவரிடமும் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டது. எங்களுடைய தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் மாணவி அனிதாவைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். நீட் தேர்வின் காரணமாக அந்த திறமையான மாணவி தற்கொலைக்கு தள்ளப்பட்டார் என்று கூறினார்கள்.
தமிழ் மக்களின் உணர்வு எங்களுக்குப் புரிந்தது. அதனால் எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒரு சிறிய வரியை இணைத்தோம். நீட் தேர்வு என்பது தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று இணைத்தோம். தமிழ்நாட்டில் இன்னொரு அனிதா உருவாவதை நாங்கள் விரும்பவில்லை. நீட் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் தமிழகத்தின் முடிவுக்கே நீட் தேர்வை விட்டுவிட்டோம். உங்களுக்கு நீட் தேவையா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்” என்றார்.
தமிழகத்தின் தொழில்துறையை நரேந்திர மோடி சீரழித்துவிட்டார் என்று குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, “கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் தீர்வை எட்ட முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நரேந்திர மோடிக்கு கருத்துப் பரிமாற்றத்தின் மீது நம்பிக்கை இல்லை. திடீரென ஒருநாள் இரவு 8 மணிக்கு முடிவு செய்து இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்தார். 500 ரூபாய், 1000 ரூபாயைச் செல்லாது என்று அறிவித்தார். திருப்பூர் ஆடை உற்பத்தித் தொழிலை அழித்துவிட்டார். காஞ்சிபுரம் பட்டு நூற்புத் தொழிலை நலிவடையச் செய்துவிட்டார். தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையை அழித்திருக்கிறார். ஆனால் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு யாரிடமாவது கருத்து கேட்டாரா? தமிழகத்தில் இருக்கிற சிறு தொழில் நிறுவனங்களிடம் கருத்து கேட்டாரா?” என்று கேள்வியெழுப்பினார்.
முன்னதாக பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை திராவிட இயக்கத்தின் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறது. அதற்காக நேரடியாக டெல்லிக்கு சென்று ராகுலுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று எண்ணிணேன். விவசாயக் கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாயத்துக்கு தனிபட்ஜெட், கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுதல், நீட் தேர்வு ரத்து என சூப்பர் ஹீரோவாக இருக்கிறது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை. ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோவாக உள்ளது” என்றார்.
இந்தக் கூட்டத்தில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர் கெளதம சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர். விழுப்புரம் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாருக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கபட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்பது குறித்து வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக