திங்கள், 15 ஏப்ரல், 2019

ஆந்திரா தெலுங்கான எம்பிக்கள் புதிய மத்திய அரசை உருவாக்குவதில் .. என்ன பங்கு வகிப்பார்கள்?

ஐஷ்வர்யா -க. பாலாஜி - விகடன் : `ஏழு கட்டங்களாக நடைபெறும்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு’, `காலம் தாழ்த்தி வெளியிடப்படும் தேர்தல் முடிவுகள்’ எனப் பல சர்ச்சைகளுடன் தொடங்கியிருக்கிறது நாட்டின் 17-வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல். அசாமில் ஒட்டுமொத்த மாற்றுப் பாலினத்தவர்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள். லோக்சபா தேர்தலையும், மாநிலத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்பதால் மாநில சட்டசபைத் தேர்தலையே ரத்து செய்யும் அளவிலான கூத்து ஜம்மு-காஷ்மீரில் அரங்கேறியுள்ளது.
மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் இல்லாமல், புதிய தலைமையுடன் முதன்முதலாகத் தேர்தலைச் சந்திக்கிறது தமிழகம். இந்த வரிசையில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் பிரிவினைக்குப் பிறகு முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது ஆந்திரப் பிரதேசம். கட்சி தொடங்கிய எட்டு வருடத்தில் 16 லட்சம் கோடி ரூபாய்வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஒருபுறம், ‘பிரிவினைக்குப் பிறகான ஆந்திராவின் முதலமைச்சர்’, `தொழில்நுட்ப அளவில் சிங்கப்பூர் அளவிலான தலைநகரத்தை உருவாக்குகிறார்’ என்கிற எக்கச்சக்க கிரெடிட்கள் சந்திரபாபுவின் பாக்கெட்டில் இருந்தாலும், அமராவதியை உருவாக்குவதற்குப் பணத்தைக் கொட்டியவர், விவசாயிகள் பிரச்னையைக் கண்டுகொள்ளவேயில்லை என்கிற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது. இருந்தும் ஆந்திராவின் தேர்தல் வெற்றிதான், நாட்டின் 15-வது பிரதமரை முடிவு செய்யும் என்கிற பேச்சும் ஒருபக்கம் இருக்கிறது. கள நிலவரம் குறித்து அறிய ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலையும், மாநிலத் தேர்தலையும் சந்திக்கும் ஆந்திர மாநிலத்துக்குப் பயணப்பட்டோம்.

ஆந்திராவில் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?
மோடியைக் குற்றம்சாட்டும் ஆந்திரா தேர்தல் சந்திரபாபு நாயுடு
கொளுத்தும் வெயில் அந்த மாநிலத்தின் தேர்தல் பிரசாரச் சூட்டை எந்தவகையிலும் குறைத்துவிடுவதாக இல்லை. `சந்துருடா ரா ரா’ என்கிற தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் பாடலும், ‘ராவாலி ஜெகன், காவாளி ஜெகன்’ என்கிற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பாடலும் போட்டி போட்டுக் கொண்டு ஆந்திரா முழுவதும் ஆட்டோக்களில் ஒலிக்கின்றன. மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, புதிய ஆந்திராவின் வளர்ச்சியைத் தடுத்துவிட்டதாக தேர்தல் பிரசார மேடைகளில் குற்றஞ்சாட்டி வருகிறார் சந்திரபாபு நாயுடு. ‘மோடி மட்டுமல்ல; அமராவதி கட்டுமானத்துக்காகத் தேவையில்லாமல் பணவிரயம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு, அவர் மக்களைக் கவனிக்கவேயில்லை’ என்று பெருந்திரள் கூட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. பார்க்கப்போனால் கட்சி உருவாகி இந்த எட்டுவருடங்களில் அவரின் கட்சிக்குத் திரளும் மக்கள் கூட்டம் வியக்க வைப்பதாகவே இருக்கிறது. “ஜெகன்மோகன் ரெட்டிதான் ஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் என்பது முடிவாகிவிட்டது” என்று தேசிய ஊடகங்கள் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவருகின்றன. கடந்த ஒருவருடகாலமாக ஆந்திரா முழுவதும் அவர் மேற்கொண்ட நடைப்பயணமும் அதற்குக் கைகொடுத்திருக்கிறது. ஆனால், பூ விற்பவர்கள் தொடங்கி பாமரர்களில் பெரும்பாலானோர் சந்திரபாபுவுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். அப்படியென்றால், ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார்? என்.டி.ராமாராவின் அரசியல் வாரிசா அல்லது ஒய்.எஸ். ராஜசேகரரெட்டியின் வாரிசா?. மக்களவைத் தேர்தலில் தேசிய அரசியலை அவர்கள் எப்படி நிர்ணயிப்பார்கள்?.
“மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகளை உடைய ஆந்திராவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம்” என்று திட்டவட்டமாகக் கூறுகிறது ஜெகன்மோகன் தலைமையிலான அணி. மத்தியில் யாருக்கு ஆதரவு என்கிற வாக்குறுதியையும் அவர்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
ஆந்திரா தேர்தல்
“2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே பெரும்பான்மை வெற்றிபெறாது. அந்த நிலையில் தங்கள் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து யார் தருகிறார்களோ, அவர்களுக்கே எங்களது ஆதரவு, அவர்களையே நாங்கள் பிரதமராக்குவோம்” என்று கூறி வருகிறார் ஜெகன்மோகன். மற்றொருபுறம் தனது 17 மக்களவை தொகுதியுடன் ஜெகன்மோகனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். அவர்களின் அனுமானம் உண்மையாகும் நிலையில் மொத்தம் 42 எம்.பி-க்களுடன் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் `கிங் மேக்கர்’ பொறுப்பு ஜெகன்மோகன் வசம் இருக்கிறது. “தாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும்” என்று ராகுல்தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், ராகுல்காந்தி, ஜெகன்மோகன் இருவரும் தங்களுக்கு இடையேயான கட்சிப் பிரிவினை ஈகோக்களை மறந்துவிட்டு கூட்டணி அமைப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.
மக்களைப் பொறுத்தவரை, “தங்களுக்கு யார் அதிகமாகச் செலவிடுகிறார்களோ, அவர்களுக்கே தங்கள் ஓட்டு” என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஆந்திராவின் மிகப்பெரும் பொருளாதார பலமாகக் கருதப்படும் மிளகாய் விற்பனையாளர்கள் கூறுகையில், “இந்த ஐந்து வருடத்தில் நாங்கள் இரண்டு மாநிலங்களாகப் பிரிந்ததைத் தவிரப் பெரியதாக எதுவும் எங்கள் வாழ்வில் மாற்றம் நடக்கவில்லை. எங்களுக்கு யார் அதிகம் செய்கிறார்களோ(!) அவர்களுக்கே ஓட்டுப் போடுவோம்” என்கிறார்கள்.
வறட்சியின் பிடியில் இருக்கும் மாநிலத்தில் பெண்கள், முதியவர்கள் உட்படப் பெரும்பாலானவர்களின் மனநிலையும் அதுதான். அவர்களைப் பொறுத்தவரை தேர்தல் ஒரு ஜனநாயகச் சடங்கு. அதைக்கடந்து சாதியக் கொடுமைகள், விவசாயப் பிரச்னைகள், நீராதாரப் பிரச்னைகள் என எதற்கும் அரசை நம்பும் மனநிலையில் இருந்து விலகிக் கிடக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் ஜெகன்மோகன், ஜெயலலிதாவைப் போல தனித்து இருப்பாரா அல்லது சிறப்பு அந்தஸ்து தருபவர்களைப் பிரதமராக்கிச் சிறப்புச் செய்வாரா?  23 மே 2019 முடிவு செய்யும்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக