திங்கள், 8 ஏப்ரல், 2019

தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியை சந்தேக மரணம்!

தேர்தல் பயிற்சி வகுப்பில்  ஆசிரியை சந்தேக மரணம்!மின்னம்பலம் : ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பும், அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குப் படிவம் 12ஏ விநியோகம் செய்யும் பணியும் நேற்று (ஏப்ரல் 7) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியில் உள்ள மஹா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
மதியம் 1 மணியளவில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கொங்கணாபுரம் ஒன்றியம், தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றிவரும் நித்யா (வயது 35) என்பவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அருகிலிருந்த ஆசிரியர்கள் நித்யாவை உடனடியாக ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சேலத்திலுள்ள தனியார் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கே ஆசிரியை நித்யாவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, ஆசிரியை நித்யாவின் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காரிப்பட்டி போலீசார், முதல்கட்ட விசாரணையில் ஆசிரியைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியை நித்யா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரது கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், அவருடன் நெருங்கி பழகிய தாரமங்கலம் பகுதியில் உள்ள ஓர் ஆசிரியர் நித்யாவிடம் இருந்து பல லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றுள்ளதாகவும், இதன் விளைவாகத்தான் ஆசிரியை நித்யா உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
நாளை நித்யாவின் உறவினர்கள் வந்த பின்னரே அவருடைய உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர்தான் மேற்கொண்டு விசாரணை செய்ய முடியும் என காரிப்பட்டி போலீசார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக