திங்கள், 8 ஏப்ரல், 2019

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவீர்களா?: திருமாவளவன் ஆவேசம்!

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவீர்களா?: திருமாவளவன் ஆவேசம்!மின்னம்பலம் : வாக்குச்சாவடிகளை எதிர்க்கட்சியினர் கைப்பற்றினால் திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று தெரிவித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி. திடலில் நேற்று (ஏப்ரல் 7) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக கூட்டணியை எதிர்க்கும் கூட்டணியானது சீட்டும் நோட்டும் பேரம் பேசி உருவாக்கப்பட்ட கூட்டணி என்று அவர் குற்றம்சாட்டினார்.

“நமது கூட்டணி மோடியை விரட்டியடிக்க உருவாக்கப்பட்ட கூட்டணி. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற கூட்டணியில் இடதுசாரிகளும் இடம்பெற்றுள்ளனர். கொள்கையுடன் உருவாக்கப்பட்ட கூட்டணி இது. அதிமுக தலைமையிலான கூட்டணி வியாபாரக் கூட்டணி” என்று தெரிவித்தார் திருமாவளவன்.
திமுகவுக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்குமான கூட்டணி தேர்தலுக்கு மட்டுமானதல்ல என்றும், அது கொள்கைரீதியானது என்றும் கூறினார். “வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுங்கள் என்று கூறும் தலைவரைப் பார்க்கின்றீர்கள். அப்படி அவர்கள் வாக்கு சாவடிகளைக் கைப்பற்றினால் திமுகவினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 100 கோடி கொடுத்தால் கூட ஒரு வாக்குக்கு ஈடாகாது. ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக