வியாழன், 11 ஏப்ரல், 2019

தேர்தல் பணியில் ஈடுபட டி ஜி பி குட்கா ராஜேந்திரனுக்கு தடை .. தேர்தல் ஆணையம் .

தேர்தல் பணிகளில் ஈடுபட டிஜிபி ராஜேந்திரனுக்கு தடை!மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. பறக்கும் படையினரும், காவல் துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துவருகின்றனர். தேர்தல் காலத்தில் தேர்தல் பணிகளுக்காக மட்டும் தனியாக ஒரு டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமிக்கும். தேர்தல் தொடர்பான வழக்குகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தேர்தல் பிரிவு டிஜிபியே மேற்கொள்வார்.

அந்த வகையில் தமிழகத்தின் தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று (ஏப்ரல் 10) ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு இந்திய தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், “தேர்தல் தொடர்பான காவல் துறையினரின் பணிகள் அனைத்தும் அசுதோஷ் சுக்லா தலைமையில்தான் நடைபெற வேண்டும். அசுதோஷ் சுக்லா தற்போதைய டிஜிபி ராஜேந்திரனின் உத்தரவின் கீழ் செயல்படத் தேவையில்லை. அதுபோலவே காவல் துறை அதிகாரிகள் தேர்தல் பணிகள் தொடர்பாக அசுதோஷ் சுக்லாவின் உத்தரவின்படிதான் செயல்பட வேண்டும். தேர்தல் காலம் முடியும்வரை தேர்தல் தொடர்பான எந்த நடைமுறைகளிலும் டி.கே.ராஜேந்திரன் பங்கெடுக்கக் கூடாது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகளையும் அவர் தொடர்புகொள்ளக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1988 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அசுதோஷ் சுக்லா, சிறைத் துறை டிஜிபியாக பணியாற்றிவந்தார். மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடியும் வரை சுக்லா இப்பொறுப்பில் நீடிப்பார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இவரை தேர்தல் ஆணையம் நியமித்தது.
மக்களவைத் தேர்தலில் ஆளும்கட்சி பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முறையீடுகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐஜி நாகராஜ், மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. டிஜிபி ராஜேந்திரன் குட்கா விவகாரத்தில் சிக்கியவர். தேர்தலில் அவர் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்படுவார் என்றும் திமுக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பணிகளில் டி.கே.ராஜேந்திரன் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக