சனி, 6 ஏப்ரல், 2019

எடப்பாடி விவசாயிகளிடம் தூது.. பி ஆர் .பாண்டியன் மட்டுமல்ல... விவசாயிகள் யாரு சொல்லியும் கேட்க மாட்டங்களாம்..

மின்னம்பலம் :வித விதமான சர்வேக்கள் வந்தபடியே இருக்கின்றன. யாருக்கு எத்தனை சீட் என ஒவ்வொரு நாளும் மாறி மாறி வரும் சர்வேக்கள் மக்களை
குழப்பிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தனியாக ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வே ரிப்போர்ட்டில், திருச்சியில் தொடங்கி, டெல்டா மாவட்டங்களில்
அதிமுகவுக்கான செல்வாக்கு மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம் தொகுதிகளில் அதிமுகவுக்கான செல்வாக்கு குறையக் காரணம், பிஜேபிதான். கஜா புயல் பாதித்த சமயத்தில் பிரதமர் ஆறுதலுக்காகக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை என்ற கோபம் மக்களிடம் இருக்கிறது. அதுதான் அதிமுகவுக்கான செல்வாக்கு குறையக் காரணம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 20 முதல் 22 தொகுதிகள் வரை கிடைக்கும் என அந்த சர்வேயில் சொல்லப்பட்டு இருக்கிறது.

கடந்த தேர்தலில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இந்த முறை மத்திய மண்டலமான டெல்டா மாவட்டங்கள் அதிமுகவுக்கான சறுக்கலாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது எல்லாவற்றையும் விட, இந்த மாவட்டங்களில் எல்லாம் தினகரனுக்கான செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும் அந்த சர்வே ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதைப் பார்த்து எடப்பாடி ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.
தினகரன் ஆதரவாளர்களை எப்படிச் சரி செய்வது என பலரிடமும் ஆலோசனை கேட்டு இருக்கிறார் எடப்பாடி. ஆனால், அவர்கள் சொன்னது எதுவும் எடப்பாடிக்குத் திருப்தியாக இல்லையாம். இன்னும் சிலர் டெல்டா மாவட்டங்களில் விவசாய அமைப்புகளின் ஆதரவு கிடைத்தால் இந்த சறுக்கலை சரி செய்துவிடலாம் எனவும் முதல்வருக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனோ, ‘விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்ட மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். பிஜேபிக்கு எதிராக விவசாயிகள் வாக்களிப்பார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். பி.ஆர்.பாண்டியனைச் சரி செய்ய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மூலமாக தூது அனுப்பினாராம் எடப்பாடி.
அதன்படி பி.ஆர்.பாண்டியனை சந்தித்துப் பேசியிருக்கிறார் மணியன். ‘மத்திய அரசு மீது உங்களுக்கு கோபம் இருப்பது நியாயம்தான். ஆனால் உங்களுக்கு பிரச்சினை என்றதும் நாங்க வந்து நின்றோம். பாஜகவுக்கு எதிராக நீங்க பேசுவது எங்களுக்குத்தான் பாதிப்பை உண்டாக்கும். அம்மா இல்லாமல் நாங்க சந்திக்கும் முதல் தேர்தல் இது. எங்களுக்கு வாழ்வா சாவா பிரச்னை. அதனால நீங்க தேர்தல் முடியும் வரை எங்களை கடுமையாக விமர்சனம் செய்வதை நிறுத்திக்கோங்க. முடிஞ்சா எங்களுக்கு நீங்க ஆதரவு தரணும்..’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பாண்டியனோ, ‘பிஜேபிக்கு ஓட்டு போடாதீங்கன்னுதான் இது வரைக்கும் நான் சொல்லிட்டு இருக்கேன். காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுங்கன்னு யாரையும் சொல்லவில்லை. நான் எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவும் போகவில்லை. அதனால உங்களுக்கு என்ன வந்துடப் போகுது . விவசாயிகளை இதுவரைக்கும் நீங்க யாரும் கண்டுக்கவே இல்லை. இப்போ அவங்க ஓட்டு உங்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கிடுமா?’ என்று சிரித்தபடியே கேட்டிருக்கிறார். அவரை தவிர்த்து இன்னும் பல விவசாய அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி வருகிறாராம் மணியன். ‘பாண்டியன் மட்டுமல்ல... விவசாயிகள் யாரு சொல்லியும் கேட்க மாட்டங்க. அவங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வாங்க...’ என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறார் மணியன்.
தினகரன் ஆதரவாளர்களையும், விவசாயிகளின் எதிர்ப்பையும் எப்படி சரிக்கட்டுவது என தொடர்ந்து எடப்பாடி தீவிர ஆலோசனை நடத்தியபடியேதான் இருக்கிறராம்” என்று முடிந்தது ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக