வெள்ளி, 26 ஏப்ரல், 2019

பாலபாரதி : மதுரை லீலாவதியை கொல்லப்பட்டதும்தான் உலகம் தெரிந்துகொண்டது!

பாலபாரதிலீலாவதிvikatan.com - -v.s.saravanan" இன்று லீலாவதி கொல்லப்பட்ட நாள். பலருக்கும் யார் இந்த லீலாவதி என்ற கேள்வி எழத்தான் செய்யும். ஏனெனில், லீலாவதி பொதுச் சமூகத்தில் அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், அவரைத் தெரிந்துகொள்ளும் ஒருவர், தன் வாழ்நாள் முழுக்க லீலாவதியை மறக்க மாட்டார். எளிய குடும்பத்தில் பிறந்து, சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைச் சீர் செய்ய, போராடியவர். தன்னைத் தேடி வந்த பதவியைக் கொண்டு, அப்பகுதி மக்களின் குறைகளைத் தீர்த்துக்கொண்டிருந்தார். ஆனால், அவரின் போராட்டத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
மதுரை மாநகரின் வில்லாபுரம் பகுதியில் பிறந்தவர் லீலாவதி. மிகவும் எளிமையான பொருளாதாரப் பின்னணி கொண்ட நெசவு குடும்பம். எந்தவொரு விஷயத்தையும் எளிதில் பழகிக்கொள்ளும் லீலாவதியின் படிப்பு, குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்போடு நிறுத்தப்பட்டது. நெசவுத் தொழிலில் தன்னை இணைத்துக்கொண்டார். சமூகம் மீதான அக்கறையே கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி அவரை உந்தித் தள்ளியது. ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்தார். பின், மாவட்டப் பொருளாளராகவும் உயர்ந்தார். இப்படியான வாழ்க்கையில் நடந்தவற்றை அவருடன் நன்கு பழகியவரும், திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பாலபாரதி கூறுவதைப் பார்க்கலாம்.
 "லீலாவதி என்றதுமே என் மனக்கண்ணில் தெரிவது, லீலாவதி தரையில் அமர்ந்துகொண்டு குறிப்பெடுக்கும் காட்சிதான்.
அப்போது நான் ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொறுப்பில் இருந்ததால், மதுரையில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்வேன். கட்சி அலுவலத்தில் உள்ள சின்ன அறையில் கூட்டம் நடக்கும் என்பதால், சிலர் நாற்காலியிலும் சிலர் கீழேயும் உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் லீலாவதி மிகக் கவனமாக, அக்கூட்டத்தில் பேசப்படும் விஷயங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டிருப்பார். 'செய்திகளைக் குறித்துக்கொள்பவர்கள் நாற்காலியில் உட்கார்ந்துக்கலாமே' என்பேன். அதற்கு அவர், 'இல்ல தோழர். இதுதான் வசதியா இருக்கு' என்பார்.
கூட்டம் முடிந்து, நான் பஸ் ஏறும்வரை உடனிருப்பார். சாப்பிடாமல் செல்ல அனுமதிக்க மாட்டார். அந்தளவுக்கு அன்போடு பழகியவர். பாத்திரக் கடையில் பணிபுரியும் கணவர், அழகான மூன்று பெண் குழந்தைகளே லீலாவதியின் குடும்பம். 1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், லீலாவதி இருந்த 59 வது வார்டு, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் வந்திருந்தது. லீலாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். அவருக்கு எதிராக வசதிமிக்க பணக்காரர்கள் போட்டியிட்டனர். அதைக் கண்டு கொஞ்சமும் பின் வாங்கவில்லை லீலாவதி. அந்தப் பகுதியின் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் தெளிவாக மக்களிடம் பேசினார். தனக்கு அந்தப் பதவி கிடைக்கும்பட்சத்தில் என்ன செய்வேன் என்பதை கற்பனை கலக்காமல், நடைமுறை சாத்தியம் உள்ளதைப் பேசினார். வீடு, வீடாகச் சென்று, அவர்கள் வீட்டின் ஒரு பெண் என்பதைப் புரிய வைத்தார். லீலாவதியின் இந்த அணுகுமுறை அந்தத் தேர்தலில் வெற்றியைத் தந்தது. பகட்டில்லாமல், மக்களோடு மக்களாக இருக்கும் ஒருவர் வெற்றி பெற முடியும் எனும் நம்பிக்கையையும் விதைத்தது.
கவுன்சிலராகப் பதிவு ஏற்றதும், வசதிகளைப் பெருக்கிக்கொள்வோர் மத்தியில், அந்தப் பகுதியின் பிரச்னைகளான ரேஷன் கடை, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றுக்காகப் போராடினார். குறிப்பாக, ரேஷன் கடைக்கு வரும் பொருள்களைக் கடத்தி, சந்தையில் விற்பது நடந்தது. அதேபோல கள்ளச்சாராய விற்பனையும் வெளிப்படையாக நடந்தது. மேலும், குடிநீருக்காக மக்கள் அல்லாடினார்கள். இவற்றைச் சரி செய்வதில் தன் முழு ஆற்றலையும் செலவிட்டார் லீலாவதி. இவை தொடர்பான அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்வார். விற்பனை கடைகளில் முறையாக நடைபெறுகிறதா என்று அடிக்கடிச் சோதிப்பார். கட்சிக்குள்ளும் இவரது செயற்பாடுகள் கவனம் ஈர்த்தன. அவருடன் பழகியவர்களுக்கு இவையெல்லாம் ஆச்சர்யம் தந்தன. ஏனென்றால், பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருப்பார். பேச்சும்கூட நிதானமாக, மென்மையாகத்தான் இருக்கும். ஆனால், செயல்பாடு என்பது கொஞ்சமும் சமரசம் இல்லாமல், துளியும் அச்சமில்லாமல் துணிவோடு இருக்கும்.
கொலை
பொதுமக்களுக்கு, தாம் சரியான ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும் நிம்மதி கிடைத்தது. அதேநேரம், மக்களை மிரட்டி, மாமூல் வசூலிக்கும் கும்பல், கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் லீலாவதியின் களச் செயல்பாட்டால் கோபம் அடைந்தனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் கொடுத்தனர். அவற்றைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத லீலாவதி சமூகப் பணிகளைத் தொடர்ந்தார். சமூக விரோதிகளுக்குப் பெரும் சவாலாக இருந்தார் லீலாவதி.
1997-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23 -ம் நாள் காலையில், வழக்கம்போல சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்க, கடைக்குச் சென்றார். அப்போது திடீரென்று சூழ்ந்த ஏழு பேரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதை எதிர்பார்க்காத லீலாவதி முடிந்தவரை தன்னைத் தற்காத்துக்கொள்ள போராடினார். ஆனால், வெறி பிடித்த அந்தக் கும்பல் லீலாவதியின் உடலில் 24 இடங்களில் வெட்டி, இறுதியில் அவரின் உயிரையும் பறித்தது. அந்தப் பகுதி மக்கள் லீலாவதி கொல்லப்பட்டது அறிந்து துடிதுடித்துப்போனார்கள்.

செய்தி அறிந்ததும், திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குச் சென்றேன். லீலாவதி கிடந்த அந்தக் காட்சியை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. அவர் வீட்டிலிருந்து மயானத்துக்குச் சென்ற பேரணியில், பொதுமக்கள் அலையலையாய் திரண்டு வந்து கலந்துகொண்டனர். கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்கள்.
இறுதி அஞ்சலிக் கூட்டத்தில், 'வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்தார் லீலாவதி' என்று பேசியது நினைவிருக்கிறது. லீலாவதி எனும் அரசியல் செயற்பாட்டாளரை அவர் கொல்லப்பட்டப் பிறகுதான் இந்த உலகம் தெரிந்துகொள்கிறது. எங்கள் கட்சியில் லீலாவதியின் பெயரை, பிள்ளைகளுக்குப் பெருமையாகச் சூட்டுகிறோம். இப்போது பெயர்களில் மட்டுமல்ல, போராட்ட முறையிலும் பல லீலாவதிகள் இருக்கின்றனர்" என்று தன் தோழியின் பிரிவை நெகிழ்ந்த குரலில் பகிர்கிறார் பாலபாரதி.
லீலாவதியைக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து, விடுதலையானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக