வெள்ளி, 5 ஏப்ரல், 2019

பார்ப்பனர் அல்லாத ஒரு வாக்காளர் : அன்பார்ந்த பிராமண வாக்காளர்களே !

savukkuonline.com - Naachiyar :  அன்பார்ந்த பிராமண வாக்காளர்களே.
உங்களுக்கு ஒரு கடிதம் என்றதும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நீங்கள் இதனை எழுத வைத்து விட்டீர்கள்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2019 தேர்தலை நினைத்து நீங்கள் பதற்றப்படுகிறீர்கள். மீண்டும் மோடி தலைமையின் கீழ் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஒரு வாக்காளராக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்களது உரிமை தான். ஆனால் அதை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தால் இந்தக் கடிதத்துக்கு அவசியமே இருந்திருக்காது. உங்களுக்கு சலுகைகளையும், ஆதரவையும் தரும் கட்சி என்பதால் இந்தத் தேசமே பாஜகவைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பதில் தான் பிரச்சனைத் தொடங்குகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிடக் கட்சிகளும், கழகங்களும் பார்ப்பன எதிர்ப்பை முக்கியக் கொள்கையாகக் கொண்டிருந்தன. அதனால் அவர்கள் மீது எப்போதும் உங்களுக்கு எரிச்சல் உண்டு.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா மேல் உங்களுக்கு நல்லதொரு அபிப்ராயமே பொதுவாக உண்டு.  ஜெயலலிதாவை வாரது வந்த மாமணியாக கொண்டாடினீர்கள்.   1996 தேர்தலில், ஜெயலலிதாவுக்கு எதிராக, திமுக தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கிய, அதே சோ ராமசாமி, 2001ல் ஜெயலலிதா திருந்தி விட்டார் என்று கூறினார்.   ஆனால் ஜெயலலிதா அவர் மறையும் வரை திருந்தவேயில்லை.   அவர் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சங்கராச்சாரியை கைது செய்தாலும், அவரை நீங்கள் ஆதரித்தீர்கள்.

கல்வித்துறை, வங்கித்துறை, பொறியியல், மருத்துவம் என உச்சபட்ச மதிப்பு கொண்ட தொழில்களில் உங்களது ஆதிக்கம் அதிகம் இருந்தது. இட ஒதுக்கீடு, கல்விக்கான சமவாய்ப்பு போன்றவை நடைமுறைக்கு வந்தபின் அரசுத் தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகளில் நீங்கள் பின்தள்ளப்பட்டதாய் உணர்ந்தீர்கள். இதனை இன்றுவரை பெரும்பாலான உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நமக்கு முன் கைகட்டி நின்ற சாதிகள் உங்களுக்கு சமமாக பணியாளர்களாக வேலை செய்வதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. கடந்த தலைமுறையைச் சேர்ந்த உங்களது சமூகத்தினரிடம் இந்தப் போக்கினை அதிகமாகப் பார்க்க முடியும். வெளிப்படையாக நீங்கள் பொதுவெளியில் பேசாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் நிங்கள் பேசிக் கொள்கையில், உங்களால், உங்கள் மனதில் உள்ள வன்மத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை.
இந்தத் தலைமுறையில் உங்களது பிரச்சனை என்னவென்றால், மகனோ மகளோ அதிக மதிப்பெண்கள் எடுத்தும்  இட ஒதுக்கீடு காரணமாக விரும்பிய பட்டப்படிப்பை படிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் உங்களில் நிறைய பேருக்கு உண்டு. கடந்த இரண்டு தலைமுறைகளாக நீங்கள் வஞ்சிக்கப்பட்டதாக குமுறிக் கொண்டிருந்தீர்கள். பாதுகாப்பின்மையாக உணர்ந்தீர்கள்.  அப்போது தான் பாஜக ஆட்சிக்கு வருகிறது. தேசிய அளவில் பாஜக தன்னுடைய கட்சியின் முக்கிய பொறுப்புகளை பிராமண மற்றும் உயர்சாதி சமூகத்து நபர்களிடமே தந்ததில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. உங்களுக்கான கட்சியாக இதை நினைத்துக் கொண்டீர்கள்.  இந்து சனாதன சட்டத்தை பிஜேபி செயல்படுத்தும்.  பிஜேபி தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், கடந்த நூற்றாண்டைப் போல, மீண்டும், பார்ப்பனர்கள் சமூகத்தில் உயரந்த இடத்துக்கு வந்து, சமூக படிநிலையில், பார்ப்பனரல்லாத சாதிகளை, நீங்கள் மீண்டும், கட்டி ஆளலாம் என்று நம்புகிறீர்கள்.
நீட் தேர்வினை எல்லாத் தரப்பினரும் எதிர்க்கையில் தமிழகத்தில் நீங்கள் மட்டும் ‘நீட்’டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டே உங்களது பிள்ளைகளை நீட் கோச்சிங் மையங்களில் லட்ச ரூபாய் பணம் கட்டி சேர்த்தீர்கள்.  அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளால் எப்படி நீட் தேர்வுக்கு தயாராக முடியும் என்று கேட்டால், அது ஆசிரியர்களின் குறை என்கிறீர்கள்.  அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வாக முடியும் என்று வெட்டி நியாயம் பேசுகிறீர்கள்.   அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும் வரை, கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், மருத்துவம் படிக்கக் கூடாது என்பதுதான் உங்கள் உண்மையான நோக்கம்.
அதிலும் மோடி இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் உங்களைக் கவர்வதற்காகவே சில செயல்களைச் செய்தார். பசு பாதுகாப்பு, கங்கை தூய்மை, கோயில்களைப் பாதுகாப்பது, புனிதத்துவத்துக்கு முக்கியத்துவம் தருவது, இந்துக் கலாசாரக் காவலர்களை ஊக்குவிப்பது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இப்படி.  மோடியின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உங்களுக்கு மிகுந்த உவப்பானதாக இருக்கிறது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபின் நீங்கள் இது இந்து இந்து தேசம் தான் என்பதில் உறுதியாகி விட்டீர்கள். ஆனால் இங்கே இந்து என்பது உங்களை மட்டுமே குறிக்கிறது என்று புரிந்து வைத்துள்ளீர்கள்.  இந்து மதத்துக்கு நீங்கள்தான் பிரிநிதி என்று நீங்களாகவே உங்களை வரித்துக் கொள்கிறீர்கள்.
இப்படி உங்களை நினைக்க வைக்க பாஜக தொடர்ந்து முயல்கிறது.   உதாரணத்துக்கு ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள சுடலை, இசக்கி, பட்டவரையன், மதுரை வீரன் போன்ற சிறுதெய்வ வழிபாட்டினைக் கொண்டிருப்பவர்களும் இந்துக்கள் தானே!  அவர்களுக்கு ஆதரித்தோ அந்தக் ‘கடவுளர்’களையும், கலாசாரத்தையும் காப்பதற்கு இதுவரை பாரதிய ஜனதா  ஏதேனும் முயன்றிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தோமானால் இல்லை என்ற பதிலே வரும்.  மாறாக அத்தகைய மாற்றுக் கலாச்சாரத்தை அழித்து, தமிழகத்திலும், ராமர் வழிபாடு, விநாயகர் வழிபாடு என்று கலாச்சார மடைமாற்றம் செய்யும் வேலையை பிஜேபி செய்து வருகிறது.
சரி, நீங்கள் தான் அவர்களை ஆதரிக்கிறீர்கள் என்றால் மக்கள் தொகையில் வெறும் ஐந்து சதவீதமே உள்ள உங்களுக்கு ஏன் பாஜக இவ்வளவு ஆதரவாக இருக்க வேண்டும்? பீகார், உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் வேட்பாளர்களில் கணிசமானவர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதன் காரணம் என்ன? இங்கு தான் சமூக உளவியல் குறித்து பாஜக  நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
பார்ப்பன சமூகத்தினரான நீங்கள் அறிவில் சிறந்தவர்கள் என பொதுப்புத்தியில் பதியப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்கள் எதையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் வாழ்க்கையைத் திட்டமிடுபவர்கள் என்கிற எண்ணம் மக்களிடையே உண்டு. இங்கு பலரும் தங்களது வாழ்க்கைத் தரத்தை உங்களை வைத்தே அளக்கிறார்கள். வித்யா மந்திர், பாலபவன், விஷ்யாச்ரம், அபிநய வித்யா, குருகுல், ஆசாரிய சிக்ஷா என்பதாக பள்ளிகளின் பெயர் இருந்தால் அது தரமான கல்வியைத் தரும் பள்ளிக்கூடம் என்று நினைத்து அங்கு குழந்தைகளை அடித்து பிடித்து சேர்க்கும் கூட்டத்தினைக் கொண்ட சமூகம் தான் இது. ஐயர் மெஸ், மாமி மசாலா என்பதெல்லாம் தரமானதாக இருக்கும் என்கிற புத்தி இருப்பதை மறுக்க முடியுமா? இந்த உளவியலைத் தான் பாஜக பயன்படுத்திக் கொள்கிறது நீங்கள் ஒத்து ஊதுகிறீர்கள்.
இது தவிர கோயில் என்பது இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு மையம். அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் நீங்கள் தானே. அதனால் தான் வேற்று சாதியினர் அர்ச்சகராகலாம் எனும்போது கடுமையாக எதிர்த்தீர்கள். தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஸ்டெர்லைட், மீத்தேன். எட்டுவழி சாலை என தமிழகம் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக பற்றியெரிந்து கூட்டமாக குரல் கொடுக்காத நீங்கள் தான் ஆண்டாள் விவகாரத்திலும், ஐயப்பன் கோயிலில் பெண்களும் நுழையலாம் என்கிறபோதும் வெகுண்டெழுந்து தெருமுனையில் கண்டனக்கூட்டம் போட்டீர்கள், தனிநபர் அறிக்கைகளையும் சாபங்களையும் அள்ளித் தெளித்தீர்கள்.
ஏனெனில் உங்களது ஒரே பிடிப்பாக இருப்பது இந்து மத அடிப்படைவாதம் தான்.  ஹெச். ராஜா வெளிப்படையாக ஒரு கூட்டத்தில், இந்து அறநிலையத்துறை இந்துக்களான நமது வசம் வரவேண்டும் என்று கொந்தளித்து பேசியபோது ‘இந்து அறநிலையத்துறை பணிசெய்பவர்கள் எல்லோரும் இந்துக்கள் தானே’ என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தும் அவர் இந்து என்று சொன்னது உயர்சாதி இந்துக்களை என்பது உங்களுக்குத் தெரிந்ததால் அதை நீங்கள் ரசித்தீர்கள்.
வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் வெளியாகிற இந்துத்துவ அபத்தக் கருத்துகளை உடனுக்குடன் பரவச் செய்வதில் உங்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அறிவேன்.  அது போன்ற அபத்தமான கருத்துக்களை பரப்புவதை உங்கள் கடமையாகவே கருதுகிறீர்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் சகிப்புத்தன்மை இருந்தால் மட்டுமே அமைதியான வாழ்க்கையை நடத்த முடியும். அதை பாஜக அரசு சீர்குலைக்கிறது. நீங்கள் மற்ற சாதியினருடன் உணவருந்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் உங்கள் முன் அசைவம் உண்பதற்கு தயங்குவார்கள் என்பது உங்களுக்கேத் தெரியும். அந்தளவுக்கு மற்ற சாதியினர் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த அரசு மாட்டுக் கறி உண்பவர்களைக் கொல்லுகிறபோது வேடிக்கைப் பார்த்தது. பசு புனிதம் என்கிறது. இது நீங்கள் ரசிப்பீர்கள் என்பதால் தானே…!!! விஷம் எங்கிருந்து தூவப்படுகிறது என்பது தெரிகிறதா?
“நான சௌகிதார் அல்ல..நான் பிராமணன்.. நான் கருத்து சொல்வேன்.. மற்றவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள்” என்கிற சுப்ரமணிய சாமி வெளிப்படையாக சொல்கிறார் என்றால் அது உங்கள் சமூகத்தின் பிரதிநிதியின் குரல் தானே.
ஒருவேளை நீங்கள் சொல்லலாம், “நாங்கள் யாருடைய வழிக்கும் போகாமல் வாழ்கிறோம்” என்று. ஆனால் இந்த அரசியல் ஓட்டத்தில் நீங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கிறீர்கள். உடன் ஒடுபவர்களை தள்ளிவிட்டோ, ஓட விடாமல் செய்தோ,  முந்தி ஓடுவதில் என்ன பெருமை இருக்கப்போகிறது? சென்ற நூற்றாண்டு வரை மற்ற சாதியினரைக் காலுக்குக்  கீழ் வைத்து அவர்கள் தலை மேல் நின்றவர்கள் நீங்கள். இன்று சமூக நீதி, சட்டத்தினால் மாறி வருகிறது. ஆனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்ற சந்தேகம் வருகிறது. ஏனெனில் பாஜக தேசியத் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பேசும் பேச்சுகள் அப்படி எண்ண வைக்கின்றன.
மற்ற சாதியினருக்கு அல்லாமல் உங்களுக்கு இந்தக் கடிதம் எழுதுவதன் நோக்கம் என்பது நீங்கள் குரல் கொடுக்க வேண்டிய இடத்த்திலும் மௌனம் சாதித்ததும், உங்களை செல்லப்பிள்ளைகளாக ஒரு அரசு நினைக்கிறது என்பதற்காக தேசத்தை பாழ்படுத்த அவர்கள் செய்யும் அத்தனையையும் மறந்து அவர்களை ஊக்குவிக்கிறீர்கள் என்பதாலும் தான்.
உங்களுடைய வாக்கு சதவீதத்தை வைத்துப் பார்க்கும்போது பெரிய மாற்றம் ஆட்சி அமைப்பில் வந்து விடாது என்று தெரியும். ஆனால், இந்த குறைந்த சதவிகித மக்கள் தொகையில் இருக்கும் நீங்கள், அரசியலில் பலவற்றையும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறீர்கள்.   ஆனால் உங்களது மனநிலை மிக ஆபத்தானதாக இருக்கிறது, சமூக நீதிக்கு எதிராய் உள்ளது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதம்.
யோசிப்பீர்கள் என்றே நம்பும்
பார்ப்பனர் அல்லாத ஒரு வாக்காளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக