ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? திங்கள் முக்கிய தீர்மானம்

துரைமுருகன் வீட்டில் ரெய்டு tamil.oneindia.com = veerakumaran : துரைமுருகன் வீட்டில் ரெய்டு, தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு சென்னை: வேலூர் லோக்சபா தேர்தல் ரத்தாகுமா அல்லது நடைபெறுமா என்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை முக்கிய முடிவு எடுக்க உள்ளது.
வேலூர் லோக்சபா தொகுதிகளில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டியிடும், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ சி சண்முகம் ஆகியோர் நடுவே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
போட்டி கடுமையாக உள்ள இந்த தொகுதியில், பணப்பட்டுவாடா அளவுக்கு அதிகமாக நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நள்ளிரவில் துரைமுருகன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். அப்போது துரைமுருகன் வீட்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் திமுகவைச் சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் ஆலையில் சில தினங்கள் முன்பு வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.


இந்த ரெய்டின்போது, இங்கிருந்து கட்டுக்கட்டாக 12 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் எந்தெந்த வார்டுக்கு எவ்வளவு தொகை பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தநிலையில், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த தலைமை தேர்தல் ஆணையர்கலிடம், நிருபர்கள் இது தொடர்பாக கேட்டபோது, விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு மற்றும் வருமான வரித்துறை சார்பில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் அதன் பின்னணி தொடர்பாக தனித்தனி பரபரப்பு அறிக்கை அனுப்பி வைத்துள்ளது.

இதையடுத்து வரும் திங்கள்கிழமை காலை, டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்த உள்ள சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தின்போது வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் ரத்தாகுமா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போது உள்ள தகவல் படி, இந்த பணம் திமுக பிரமுகருக்கு சொந்தமானது என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளதால், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான, வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக