திங்கள், 22 ஏப்ரல், 2019

இலங்கை குண்டு வெடிப்பு அமைச்சர் மனோ கணேசன் பேட்டி


tamil.thehindu.com : கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலய குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் | படம்: பிடிஐ/ பெங்களூரு </ கொழும்பில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடிப் படை போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அந்த வீட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சில போலீஸார் காயமடைந்தனர்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி செயலாளர் சண். பிரபாகரன் இந்த பேராபத்தில் இருந்து தப்பியுள்ளார். பதற்றமும் பயமும் சூழ்ந்திருந்த நிமிடங்களில் சண். பிரபாகரனிடம் 'இந்து தமிழ்'' நாளிதழ் சார்பில் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். அவர் கூறியதாவது:இலங்கை வரலாற்றில் இப்படியொரு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில்லை. 200-க்கும் மேற்பட்ட மனித‌ உயிர்களை இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவில் இழந்திருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தத்தை சந்தித்த தேசம் என்றாலும், இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பை மக்கள் எதிர்க்கொண்டதில்லை. தலைநகர் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் மக்கள் கூடும் இடங்களைக் குறிவைத்து, திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
கொழும்பில் வசிக்கும் நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 8 மணி தமிழ் திருப்பலிக்கு எனது மனைவி, பிள்ளைகளுடன் கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்துக்கு செல்வது வழக்கம். மிகவும் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள அந்த ஆலயத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்ய முடியும். சாதாரண‌ ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை அங்கு கூடுவார்கள். ஈஸ்டர் ஞாயிறு என்பதால் நேற்று 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை கூடியிருந்தார்கள்.
போக்குவரத்து நெரிசல்
நேற்றும் 8 மணி திருப்பலிக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தபோது வீட்டிலே சற்று கால தாமதம் ஆகிவிட்டது. ஈஸ்டர் தினம் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் 8.40-க்கு தான் அந்தோணியார் ஆலயத்தை அடைய முடிந்தது. ஆனால் ஆலயம் நிரம்பி, வளாகம் முழுக்க மக்கள் அமர்ந்திருந்தனர். கார் பார்க்கிங் ஃபுல் ஆகிவிட்டது. திருப்பலியும் அரைவாசி முடியும் நிலையில் இருந்ததால் பக்கத்தில் இருக்கும் ஒரு சிற்றாலயத்திற்கு சென்றோம். அங்கு 9 மணிக்கு திருப்பலி தொடங்கிய, அடுத்த சில நிமிடங்களில் அந்தோணியார் ஆலயத்தில் குண்டுவெடித்ததாக தகவல் கிடைத்தது.
 உடனடியாக குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஆலயத்துக்கு ஓடிப் பார்த்தேன். நாங்கள் வழக்கமாக அமரும் ஆலய நுழைவுக்கு அருகாமையிலே குண்டு வெடித்திருக்கிறது. அரை மணி நேரம் முன் கூட்டியே வந்து அங்கு அமர்ந்திருந்தால் இந்நேரம் குண்டுவெடிப்பில் சிதறி இருப்பேன். இதனை நினைக்கும்போது நெஞ்சு அடைக்கிறது. என் கண் முன்னே நூற்றுக்கணக்கானோர் ரத்த வெள்ளத்தில் கதறிக் கொண்டிருந்தனர். நிறைய பேரின் உடல் பாகங்களும், ரத்தமும் ஆலயம் முழுக்க‌ சிதறி கிடந்தது. குண்டுவெடிப்பில் சிக்கியோரை காப்பாற்றவும், உறவினர்களை மீட்கவும் நூற்றுக்கணக்கானோர் முண்டியடித்ததால் அந்த ஆலயமே மரண ஓலத்தில் மூழ்கியது. குழந்தைகளும், பெண் களும், முதியவர்களும்தான் அதிகளவில் இறந்து போயிருக்கிறார்கள்.
அடையாளம் தெரியவில்ல
ைகை, கால்களை இழந்து உயிருக்கு போராடியவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள். ஆலயத்தில் சிதறி கிடந்த உடல் பாகங்களை மட்டும் 3 ஆம்புலன்ஸ்களில் கொண்டு சென்றார்கள். இதனை கண்டு நெஞ்சடைத்துப் போனேன். என்னைப் பொறுத்தவரை பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. உடல் பாகங்கள் வெடித்து சிதறியதால் அவற்றை அடையாளம் கண்டு, உயிரிழந்தோரை கணக்கிடுவதும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.
தமிழ் திருப்பலி நடந்து கொண்டிருந்த வேளையில் குண்டுவெடித்ததால் உயிரிழந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ் கிறிஸ்துவர்கள்தான். என் நண்பர்கள், தெரிந்தவர்கள் என 15 பேர் இதில் உடல் சிதறி குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்கள். மற்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் எத்தனைப் பேர் இறந்தார்கள் என தெரியவில்லை. மருத்துவமனையில் ரத்த உறவுகளை தவிர பிறரை அனுமதிக்காததால், இறந்த பிரேதங்களை பார்க்க முடியவில்லை.
கொழும்பில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம், கட்டான செபஸ்தியார் ஆலயம், கட்டுவாப்பிட்டிய செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சியோன் ஆலயம் என அனைத்திலும் சக்தி வாய்ந்த அதிநவீன வெடிகுண்டுகளே வெடிக்க வைக்கப் பட்டுள்ளன. இங்குதான் உயிர் சேதம் அதிகமாக இருக்கிறது.
 கொழும்பில் உள்ள ஷாங்கிரி லா ஓட்டல் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. அதிதீவிர பாதுகாப்பு வசதிகள் கொண்ட அந்த ஓட்டலில் குண்டுவெடித்திருப்பது நம்ப முடியவில்லை. ஏனென்றால் ஷாங்கிரி லா ஓட்டல் முழுக்க சிசிடிவி கண்காணிப்பு, ஒவ்வொரு தளத்திலும் ஸ்கேனர்,

சண். பிரபாகரன்
மெடல் டிடெக்டர், அனைத்து அறைகளிலும் ஃபிங்கர் பிரின்ட் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பாதுகாப்பான ஓட்டலிலும் குண்டுவெடித்திருப்பதால் இதன் பின்னணியில் பெரிய குழு இருக்க வாய்ப்பு உள்ளது.கடந்த 2009-ல் போர் முடிவுக்கு வந்த பிறகு இலங்கையில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடக்கவில்லை. அதனால் ராணுவ பாதுகாப்பு வளையங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க‌ப்பட்டது. அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு கட்டுப்பாடுகள் முற்றிலுமாக தளர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு கண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இவ்வளவு பதற்றத்தை தரவில்லை. நாடே இப்போது மரண பயத்தில் மூழ்கியுள்ளது. பத்தாண்டுகளாக அமைதியை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் எங்கள் மீது பேரிடி விழுந்திருக்கிறது. இதில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என தெரிய வில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்கொலைப்படை தாக்குதல்

லங்கை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன கூறியபோது, "முதல்கட்ட விசாரணையில் குண்டுவெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. ஒரு குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார். இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:
கொழும்பு ஷாங்ரி லா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த 2 சந்தேக நபர்கள் ஓட்டலில் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். சிசிடிவி வீடியோ ஆதாரம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் உள்நாட்டினரா, வெளிநாட்டினரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சில நாட்களுக்கு முன்பு சிறிய அளவில் குண்டுவெடிப்பு நடந்தது. அப்போது, தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என இந்திய உளவுத் துறை இலங்கை அரசை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சில இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனாலும் அவற்றையும் தாண்டி பெரிய அளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தியர்கள் உட்பட 35 வெளிநாட்டினர் பலி

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் மோக்ரல்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரஷினாவும் அவரது கணவரும் நண்பர்களை சந்திக்க அண்மையில் கொழும்பு சென்றனர். இருவரும் கொழும்பு ஷாங்ரி லா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு கணவர் மட்டும் துபாய் சென்றார். ரஷினா மட்டும் ஓட்டலில் தங்கியிருந்தார். அவர் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி, நாராயணன் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய வெளியறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 35 வெளிநாட்டினர் குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக