வெள்ளி, 26 ஏப்ரல், 2019

மைத்திரிபால சிரிசேனா : குண்டுவெடிப்பில் போதை மருந்துக் கடத்தல் காரர்கள்:

இலங்கை குண்டுவெடிப்பில் போதை மருந்துக் கடத்தல் காரர்கள்: சிறிசேனாமின்னம்பலம் : போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கும் இலங்கை குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிபர் சிறிசேனா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் இறந்த நிலையில் இன்று ( ஏப்ரல் 26) கொழும்பில் செய்தியாளர்களை அதிபர் சந்தித்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாக முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இலங்கையை குறிவைத்ததற்கு , போதை மருந்துக் கடத்தலுக்கு எதிராக நான் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறேன். போதை மருந்துகளுக்கு எதிரான போருக்கும், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கும் என்பதை மறுக்க முடியவில்லை.

போதைப் பொருளுக்கு எதிரான தேசம் தழுவிய பிரச்சாரத்தை இலங்கை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் போதை மருந்து இல்லாத இலங்கையை உருவாக்க வேண்டும் என்பது எனது இலக்கு. இந்த போதை மருந்துக்கு எதிரான எனது போர், தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கக் கூடும்” என்று தெரிவித்துள்ளார் அதிபர் சிறிசேனா.
மேலும் அவர், “இலங்கையில் இப்போது ஐஎஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 140 பேர் இருப்பதாக கருதப்படுகிறது. இவர்களில் 70 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். மீதம் இருப்பவர்களையும் விரைவில் கைது செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக தளங்களுக்குத் தடை?
இலங்கையில் சமூக தளங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று நினைத்தோம். ஆனால் சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்களால் மேலும் கவலை அடைந்துள்ளோம். இதுபற்றி சமூக தளங்களின் அதிகாரிகளோடு பேச இருக்கிறேன். சமூக தளங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால், முழுமையாக தடை செய்யவும் ஆலோசித்து வருகிறோம் என்றும் இலங்கை அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போலீஸ் தலைவர் ராஜினாமா

குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை தோல்வியைத் தொடர்ந்து இலங்கை காவல்துறை தலைவர் சுஜித் ஜெயசுந்தர தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அதிபரின் அழுத்தத்தை அடுத்து நேற்று பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ராஜினாமா செய்தது குறிப்பிடத் தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக