ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கட்டணக் கழிப்பறைகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்க வேண்டும்!

Magudeswaran Govindarajan. : சேலம் பேருந்து நிலையக் கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கினேன். ஒன்றுக்கு ஐந்து. இரண்டுக்குப் பத்து. நான் உள்ளே போய்விட்டு வெளியே வருகையில் கழிப்பறைக் கட்டணக்கார அம்மாவை விரைந்து அணுகினார் ஓர் இளம்பெண்.நெடுந்தொலைவுப் பேருந்திலிருந்து கழிப்பறை தேடி ஓட்டமும நடையுமாக வந்தவர் கையிலிருந்த பத்து உரூபாயை நீட்டி மீதத்தைக் கேட்டார். "அதுக்குப் பத்து ரூபாம்மா..." என்று கட்டணக்கார அம்மை சொன்னார். கொடுத்த பத்து உரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இளம்பெண் "அநியாயமா இருக்குது..." என்றவாறே திரும்பிச் சென்றார். 
அவர் நடையில் இயற்கை மூட்டிய கடுகடுப்பு நீங்காது துன்புறுத்துவதைக் கண்டேன். ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட அந்தக் காட்சியை என்னால் ஏற்கவே முடியவில்லை. 
ஒரு பேருந்து நிலையக் கழிப்பறையை ஒரு நாளில் ஆயிரத்தினர் பயன்படுத்தினால் ஏழெட்டாயிரம் ஈட்டுகிறார் அந்த ஒப்பந்தக்காரர். அது இருந்து தொலையட்டும். இதனைப் போன்ற ஒரு சூழலில் பெண்களுக்குக் கட்டாயம் விதிவிலக்கு இருக்க வேண்டும்தானே ? ஆண்களாவது மானம் பார்க்காமல் ஓரஞ்சாரத்தில் ஒதுங்கிக்கொள்வர். பெண்கள் இயற்கையழைப்புக்கு என்ன செய்வர் ? 

ஒரு பெண் கழிப்பறையை நாடுவதற்குத் திங்கள் சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். 
ஊர் போய்ச் சேருவதற்கு அந்தப் பத்து உரூபாயின் மீதம் தேவைப்படலாம். வீடு போய்ச்சேரும்வரை அப்பெண் படும்பாடு சொல்லில் அடங்குமா ? அவர்களிடமும் ஏன் கட்டாயம் கட்டணம் பெறவேண்டும் ? ஒரு சமூகத்தின் நலம் பெண் நலத்தோடு பின்னிப் பிணைந்தது இல்லையா ? 
அவர்களுடைய நலத்திற்கு ஆயிரம் திட்டங்கள் போட்டால் போதுமா ? முதலில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்க வேண்டும். அக்கழிப்பிடத்தில் ஆடவர் மட்டுமே செலுத்தும் கட்டணத்தில் பராமரிப்பினைச் செய்து வரவு காணட்டும். இதனை உடனே நடைமுறைபடுத்த வேண்டும். பெண்களின் நலம்பேணலை அடிமட்டத்திலிருந்து தொடங்குவோம்.
Magudeswaran Govindarajan.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக