வியாழன், 11 ஏப்ரல், 2019

சந்திரபாபு நாயுடு மறுதேர்தல் கோரினார் .

மறுதேர்தல் கேட்கும் சந்திரபாபு நாயுடுமின்னம்பலம் : 17ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சார அலை நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் என 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஆந்திராவில் நடைபெறுகிறது. இன்று காலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வந்து அமராவதியில் வாக்களித்தார்.
மறுதேர்தல் கோரும் முதல்வர்

ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டன. இதனால் காலை 9.30 மணி வரை ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் வெயிலின் காரணமாக மீண்டும் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன பகுதிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு
ஒருபக்கம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையில், அனந்த்பூரில் வேட்பாளர் ஒருவரால் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் அனந்த்பூா் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் குப்தா இன்று காலை கூட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் உள்ளிட்டவை முறையாக இடம்பெறவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தைப் போட்டு உடைத்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது குடும்பத்துடன் சென்று நாக்பூர் தொகுதியில் வாக்களித்தார்.
வாக்குப்பதிவு நிலவரம்
இன்று காலை 11 மணி நிலவரப்படி, ஜம்மு மற்றும் பரமுல்லாவில் 24.66%, நாகாலாந்தில் 41%, மேகாலயாவில் 27%, அருணாச்சலப் பிரதேசத்தில் 27.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் தெலங்கானாவில் 22.84%, மிசோரத்தில் 29.8%, மேற்கு வங்கத்தில் 38.08%, மணிப்பூரில் 35.03%, உத்தராகண்ட் மாநிலத்தில் 23.78%, லட்சத்தீவுகளில் 23.10%, மகாராஷ்டிராவில் 13.7%, திரிபுராவில் 26.5% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக