வியாழன், 25 ஏப்ரல், 2019

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்; 3 பேர் கொண்ட விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்

இந்திய தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்; 3 பேர் கொண்ட விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்
தினத்தந்தி :இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்கும் 3 பேர் கொண்ட விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகி உள்ளார்.
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறிய வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ், பிரமாணப்பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது என்று கடுமையான எச்சரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு முன்வைத்தது.

இதுபற்றி விசாரிக்க நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரண குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர் என்றும் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன் என்றும் நீதிபதி ரமணா கூறியுள்ளார். இந்த குழுவில் சுப்ரீம் கோர்ட்டின் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜியும் இடம் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக